
சிலர் சீஸ் மற்றும் பனீர் போன்ற பால் பொருட்களை தினமும் அல்லது வாரத்தில் நான்கைந்து நாட்கள் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். குளிர்காலத்தில் இவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால் அவ்வளவு பாதிப்புகளைத் தராது. ஆனால், கோடை காலத்தில் இவற்றை அடிக்கடி உண்ணும்போது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
1. வெப்பத்தை தூண்டும் இயல்பு:
சீஸ் மற்றும் பனீர் இரண்டும் சூடான உணவுகளாகக் கருதப்படுகின்றன. இவை உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். ஏற்கனவே கோடை மாதங்களில் வெப்பம் மிகுதியாக இருக்கும். சீஸ், பனீரை அதிகமாக அல்லது அடிக்கடி சாப்பிடும்போது அது அமிலத்தன்மை நெஞ்செரிச்சல் மற்றும் தோல் பிரச்னைகள் போன்ற வெப்பம் தொடர்பான பிரச்னைகளை அதிகரிக்கும்.
2. அதிக கொழுப்பு உள்ளடக்கம்:
சீஸ் மற்றும் பனீரில் கொழுப்புகள் நிறைந்துள்ளன. வெயில் காலத்தில் செரிமான அமைப்பு பலவீனமாக இருக்கும். எனவே கொழுப்பு அதிகம் உள்ள சீஸ் மற்றும் பனீரை ஜீரணிக்க உடல் திணறும். மேலும் இவற்றை உட்கொள்ளும் போது அஜீரணம் வீக்கம் மற்றும் இரைப்பை அசௌகரியம் ஏற்படும்.
3. உணவு கெட்டுப் போகும் அபாயம்:
அதிக வெப்பநிலை காரணமாக சீஸ் மற்றும் பனீர் போன்ற பால் பொருட்கள் முறையாக சேமிக்கப்படாவிட்டால் அவை எளிதில் கெட்டு விடும். கெட்டுப்போன பால் பொருட்களை உட்கொள்வது உடலுக்கு விஷத்தன்மையை சேர்க்கும். வயிற்றுப்போக்கு அல்லது இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
4. ஜீரணமாவதில் சிரமம்:
ஆயுர்வேத மருத்துவத்தில் பனீர் ஒரு கனமான பண்பை கொண்டுள்ள உணவுப் பொருள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உணவுகள் அதிக கலோரிகள் நிறைந்தவை; ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். மேலும் இது செரிமானத்திற்கு உதவும் மஞ்சள் அல்லது இஞ்சி போன்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கப்படாவிட்டால் ஜீரணிக்க உடல் கஷ்டப்படும். கோடையில் அதிகமாக உட்கொள்ளும்போது செரிமான அமைப்பை மேலும் சிரமமாக்கும்..
5. நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சோடியம் உள்ளடக்கம்:
சீஸில் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சோடியம் அதிகமாக உள்ளது. இவற்றை அடிக்கடி உட்கொண்டால் நீரிழிவு நோய்க்கு வித்திடும் மற்றும் கொழுப்பின் அளவு அதிகரித்து இதய நோய் ஏற்படலாம். உடலில் நீரேற்றம் குறைந்து போகும் அபாயமும் உள்ளது.
6. சரும நோய்கள்:
சீஸ் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகள், செபாஸியஸ் சுரப்பிகளைத் தூண்டி எண்ணெய் பசை சருமத்தை உண்டாக்கும் மற்றும் முகப்பருக்களுக்கு வழி வகுக்கும். வெப்பமான காலநிலையில் இது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும்.
7. மாசுபடும் அபாயம்:
தவறாக கையாளப்பட்ட அல்லது கலப்படம் செய்யப்பட்ட பனீரில் தீங்கு விளைவிக்கும் சேர்க்கைகள் அல்லது நுண்ணுயிரிகள் இருக்கலாம். அவை குமட்டல், வாந்தி போன்ற உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். மேலும் கல்லீரல் பாதிப்பு போன்ற நீண்டகால விளைவுகளையும் உண்டாக்கலாம்.
8. மந்தமான செரிமானம்:
பனீரில் குறிப்பிடத்தக்க அளவு நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இவற்றை அதிகமாக உண்ணும்போது கணையத்தின் சுமை அதிகமாகும். இது அஜீரணம் வீக்கம் மலச்சிக்கல் கோளாறு போன்றவற்றை ஏற்படுத்தும் மந்தமான செரிமானம் உண்டாகும். அதிகப்படியான கொழுப்பு நுகர்வு கீழ் உணவுக்குழாய் சுழற்சியை தளர்த்தும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும்.