
உலகளவில் இதய நோய்க்கு அடுத்தப்படியாக ஏராளமானோரின் உயிரைப் பறிக்கும் கொடிய நோய் புற்றுநோய் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் பல்லாயிரக் கணக்காணோர் உயிரை இழந்து வருகின்றனர். என்னதான் மருத்துவ துறையில் புற்றுநோயை குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த கொடிய புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும். அதற்கு ஒவ்வொருவரும் புற்றுநோயின் அறிகுறிகளை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த அறிகுறிகளானது பெரும்பாலானோரால் புறக்கணிக்கப்படும் அறிகுறிகளாகும்.
1. எடை இழப்பு:
திடீரென்று காரணமின்றி ஒருவரது உடல் எடை குறையத் தொடங்கினால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இது புற்றுநோயின் அறிகுறிகளுள் ஒன்றாக இருக்கலாம். அதுவும் இப்படியான விவரிக்க முடியாத எடை இழப்பு, வயிறு, கணையம், உணவுக்குழாய், நுரையீரல் புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
2. உடல் சோர்வு:
ஒருவரது உடலில் புற்றுநோய் செல்கள் இருந்தால், அந்நபரால் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. புற்றுநோய் செல்கள் உடலின் ஆற்றலை அழித்து மிகுந்த உடல் சோர்வை உண்டாக்கிவிடும். அதுவும் லுகேமியா, பெருங்குடல் புற்றுநோய் அல்லது வயிற்று புற்றுநோய் போன்றவை இருந்தால் ஒருவருக்கு மிகுந்த உடல் சோர்வு ஏற்படும்.
3. சரும மாற்றங்கள்:
சருமத்தின் நிறத்திலோ அல்லது அமைப்பிலோ திடீரென்று மாற்றங்களைக் கண்டால் அது சரும புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அதுவும் சருமத்தில் திடீரென்று ஒரு புதிய மச்சம் தோன்றி, அது நாளுக்கு நாள் பெரிதாவதைக் கண்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
4. தொடர் இருமல் அல்லது தொண்டை கரகரப்பு:
சில வாரங்களுக்கு மேலாக ஒருவர் தொடர்ச்சியாக இருமல் அல்லது தொண்டை கரகரப்பை சந்தித்தால், அந்நபருக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது. இது தவிர இந்த அறிகுறி தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதுவும் நுரையீரல் புற்றுநோயாக இருந்தால், இரத்தம் கலந்த சளி வெளியேறும் மற்றும் மார்பு வலியையும் உண்டாக்கும்.
5. விவரிக்க முடியாத வலி மற்றும் அசௌகரியம்:
புற்றுநோயால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அந்நபர் எதை விழுங்கினாலும் சிரமங்களை சந்திக்கலாம். அதோடு திடீரென்று எடை இழப்பு அல்லது உடலில் ஒருவிதமான அசௌகரியத்தை உண்டாக்கும் வலியை ஏற்படுத்தலாம். இப்படி காரணமின்றி ஏதாவது அசௌகரியத்தை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
6. மார்பகம் அல்லது பிற பகுதிகளில் கட்டிகள் அல்லது வீக்கம்:
மார்பகம், கழுத்து, அக்குள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் கட்டிகளையோ அல்லது வீக்கத்தையோ கண்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் வரும் அபாயம் இருக்கிறது.
7. இரத்தப்போக்கு:
மலம் கழிக்கும் போது இரத்தப்போக்கை சந்தித்தால், அது பெருங்குடல், மலக்குடல் போன்றவற்றில் உள்ள புற்றுநோயைக் குறிக்கலாம். அதுவே பெண்கள் விவரிக்கப்படாத இரத்தப்போக்கை சந்தித்தால், அது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஆகியவற்றைக் குறிக்கலாம்.
8. செரிமான பிரச்சனைகள்:
நம் உடலில் செரிமானப் பிரச்சனைகள் இருந்தாலும், அவை மிகவும் ஆபத்தான புற்று நோயுடனும் தொடர்பு கொண்டுள்ளவையாக இருக்கலாம். அதுவும் வயிற்று உப்புசம், குமட்டல், வாந்தி, சிறிது உண்டாலும் வயிறு நிறைந்த உணர்வைப் பெறுவது போன்றவை வயிற்று புற்றுநோய், கருப்பை புற்றுநோய் அல்லது கணையப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஒருவர் சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி அது என்னவென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. புற்றுநோயாக இருந்தால், அதற்கு சரியான சிகிச்சை அளித்து அவரை புற்று நோயின் தாக்கத்திலிருந்து குணப்படுத்திவிடலாம்.