நம் உடலின் முழுமையான ஆரோக்கியத்திற்கு நல்ல கொழுப்புகளும் சிறந்த முறையில் உதவிபுரிபவை. அவை நம் மூளை மற்றும் இருதயம் சிறந்த முறையில் இயங்கவும், ஊட்டச்சத்துக்கள் உடலுக்குள் முழுமையாக உறிஞ்சப்படவும் உதவி புரியும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மோனோ அன்சாச்சுரேடட் கொழுப்புகள் HDL வகையைச் சார்ந்தவை. இவை உடலில் உண்டாகும் வீக்கங்கள் மற்றும் LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவும். இத்தனை நன்மை புரியும் நல்ல கொழுப்பின் அளவை உயர்த்த நாம் உண்ண வேண்டிய 8 வகை உணவுகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. அவகோடா பழத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் மோனோ அன்சாச்சுரேடட் கொழுப்புகள் அதிகம் உள்ளன. அவகோடாவில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் C, E, K ஆகியவையும் உள்ளன. இப்பழத் துண்டுகளை சாலட் மற்றும் ஸ்மூத்திகளில் சேர்த்தும், நன்கு மசித்து பிரட் டோஸ்ட்களில் தடவியும் உண்ணலாம்.
2. பாதாம், வால்நட், சியா விதை, ஃபிளாக்ஸ் விதை ஆகியவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரோட்டீன் ஆகிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியத்தைக் காக்கவும் வீக்கங்களைக் குறைக்கவும் உதவும்.
3. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயிலில் மோனோ அன்சாச்சுரேடட் கொழுப்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை இதய நோய்கள் வரும் ஆபத்தைத் தடுக்க பெரிதும் உதவும்.
4. சால்மன், ட்ரௌட், மக்கரேல், சர்டைன் போன்ற மீன் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மிக அதிகம் உள்ளன. இவை மூளையின் செயல்பாடுகள் சிறந்த முறையில் நடைபெறவும் வீக்கங்கள் குறையவும் உதவும். இந்த உணவுகளை, க்ரில் பண்ணி அல்லது ஆவியில் வேக வைத்து வாரம் இருமுறை காய்கறி சேர்ந்த உணவுகளோடு சேர்த்து உட்கொண்டால் சரிவிகித உணவு உட்கொண்ட திருப்தியுடன் நல்ல ஆரோக்கியமும் கிடைக்கும்.
5. டார்க் சாக்லேட்களில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. 70 சதவிகிதத்திற்கு அதிகமாக கோகோ சேர்த்த டார்க் சாக்லேட்களை மிதமான அளவில் உடகொள்வது ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
6. தேங்காய் எண்ணெயில் மீடியம் செயின் ட்ரைக்ளிசெரைட்ஸ் (MCTs) அதிகம் உள்ளன. இவை மெட்டபாலிச ரேட் அதிகரிக்கவும் விரைவாக உடலுக்கு சக்தி கிடைக்கவும் உதவும். தேங்காய் எண்ணெயை சமையலில் உபயோகிக்கலாம். காபியுடன் ஒரு டீஸ்பூன் சேர்த்தும் அருந்தலாம்.
7. முட்டையின் மஞ்சள் கருவில் ஆரோக்கியம் தரும் கொழுப்புகள், புரோட்டீன் மற்றும் மூளையின் செயல்பாடுகளுக்கு உதவும் ச்சோலின் (Cholin) போன்ற மேலும் பல ஊட்டச்சத்துக்களும் அடங்கி உள்ளன. முட்டையை வேக வைத்து, ஆம்லெட் செய்து, ஃபிரைடு ரைஸில் கலந்து, கறி மற்றும் குழம்பு வகைகளில் சேர்த்து என பல்வேறு சுவைகளில் செய்து உண்ணலாம்.
8. பால் மற்றும் பால் பொருட்களாகிய யோகர்ட், சீஸ் போன்றவை ஆரோக்கியமான கொழுப்புடன், கால்சியம், புரோட்டீன் மற்றும் குடல் இயக்கத்திற்கு உதவக்கூடிய புரோபயோடிக்களையும் தரக் கூடியவை. பாலில் காபி தயாரித்தும், யோகர்டில் பழத் துண்டுகளைச் சேர்த்தும் உண்ணலாம். சீஸை குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
மேற்கூறிய உணவு வகைகளை நம் தினசரி உணவில் சேர்த்து உட்கொண்டு நம் உடலின் ஆரோக்கியம் மேம்பட உதவுவோம்.