உலர் பழங்கள் மற்றும் கொட்டை வகைகள் சிறிய அளவிலானவை. ஆனால், பெரும் ஊட்டச்சத்துகளைக் கொண்டவை. உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளில் வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் நிரம்பியிருக்கின்றன. தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் சரிவிகித அளவில் எடுத்துக்கொண்டால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருப்பதுடன், எப்போதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அந்த வகையில், டிரை ப்ரூட்கள் மற்றும் கொட்டை உணவுகளில் கிடைக்கும் முக்கிய நன்மைகள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்வோம்.
தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று அவுன்ஸ் வால்நட் சாப்பிடுவது குடல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்கிறார்கள் ஜர்னல் ஆஃப் நியூட்ரீஷன் ஆராய்ச்சியாளர்கள். வால் நட் ஒருவித பாக்டீரியாக்களை குடலில் உருவாக்குகிறது. அது குடல்வால் (குடல் உறை)களை தடிமன் குறையாமல் பார்த்துக் கொள்கிறது என்கிறார்கள் அமெரிக்காவின் பென்ஸ்டே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இந்த பாக்டீரியாக்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
இளம் வயதில் (18 முதல் 35) தினமும் 60 கிராம் கொட்டைகளை (வால்நட், பாதாம், பிஸ்தா போன்றவை) சாப்பிடுகிறவர்களின் உயிரணுக்கள் தரமானதாகவும், அதிகளவிலும் வளர்வதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். உணவுக்கு முன்பாக பிஸ்தா உட்கொண்டால் இரத்த சா்க்கரை அளவு குறைவது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாரத்திற்கு 5 முறை ஒரு கைப்பிடி அளவு ஏதாவது ஒரு கொட்டை வகை (பாதாம், முந்திரி, வால்நட், வேர்க்கடலை, பலாக்கொட்டை) உணவை சாப்பிட்டு வந்தால் 5 முதல் 15 ஆண்டுகள் வரை கூடுதலாக வாழலாம் என்கிறார்கள் லோமா லிண்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இப்படி சாப்பிடும்போது இதயநோய், மாரடைப்பு போன்றவை தாக்குவது கூட 35 முதல் 50 சதவீதம் உடனே குறைகிறது என்கிறார்கள்.
வாரத்திற்கு 5 முறையாவது கைப்பிடி அளவு பாதாம் பருப்பு எடுத்து கொள்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் மூலம் வரும் இதய நோய்கள் தடுக்கப்படுகிறது என்பதை ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். வாரம் 5 முறை பாதாம் சாப்பிடுகிற சர்க்கரை நோயாளிகளுக்கு 20 சதவீதம் இதயநோய் அடைப்பு பிரச்னைகள் வராமலும், 30 சதவீதம் உயர் இரத்த அழுத்த நோய் வருவதும் 80 சதவீதம் மற்ற நோய்களின் ஆபத்தும் குறைகிறது என்கிறார்கள்.
தினமும் இரண்டு, மூன்று அல்லது வாரத்திற்கு ஒரு அவுன்ஸ் வால்நட், பாதாம் அல்லது முந்திரி பருப்புகளில் ஏதேனும் ஒரு கொட்டை வகைகளை எடுத்துக்கொள்ள குடல் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். கொட்டை வகைகள் என்றால் அது மரத்திலிருந்து கிடைக்கும் வால்நட், பாதாம், முந்திரி பருப்பு வகைகள் மட்டும்தான் என்கிறார்கள். அடிக்கடி நிலக்கடலை கொட்டை பருப்புகளை சாப்பிடுபவர்களை ஆராய்ந்ததில் அவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதாகவும், குறிப்பாக அவர்கள் இதயநோய்களால் பாதிக்கப்படாமல் இருப்பதையும் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
உலர் பழங்களை தொடர்ந்து உண்பவர்களுக்கு அது பசியை கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கும். மேலும், இவற்றில் ஒலிக் அமிலம், ஆன்டி ஆக்சிடென்டுகள், கரோட்டின்கள், வைட்டமின் ஈ, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, செலினியம், துத்தநாகம், பாலிபீனாலிக் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. உலர் பழங்களில் சோடியம், கொலஸ்ட்ரால் அளவு குறைவாகவே இருக்கும். ஆனால், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. இவை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும்.
நீரிழிவு நோயைத் தடுக்கும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உடல் எடையைக் குறைக்க உதவும். உடல் எடை குறைக்கும் முயற்சிகளை விரைவுபடுத்த விரும்பினால் தினமும் பேரீச்சம்பழம், அக்ரூட் பருப்பு, உலர் திராட்சை மற்றும் ஆப்ரிகாட் போன்றவற்றை மிதமான அளவில் உட்கொள்ளலாம். உடல் எடை அதிகரிக்க விரும்பினால், முந்திரி, பாதாம், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணி விதைகளை சாப்பிடுவது சிறந்தது.