

சமீபத்திய ஆய்வு ஒன்று, சில இரத்த வகைகள் கடுமையான கல்லீரல் நோய்களை உருவாக்கும் அபாயத்தை பெற்றிருப்பதாக ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டது. ஃபிரான்டியர்ஸ் இதழில் (Frontiers) வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, A மற்றும் B இரத்த வகையை கொண்டவர்களுக்கு தன்னுடல் தாக்க (Auto immune) கல்லீரல் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளது. அதே வேளையில் O இரத்த வகையை கொண்டவர்களுக்கு இந்த பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளது.
'தன்னுடல் தாக்க நோய்' (Auto immune disease) என்பது, உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, தவறுதலாக கல்லீரலில் உள்ள திசுக்களை அழிக்க தொடங்குகிறது. இது தொடர்ந்து கல்லீரலுக்கு பெரிய சேதத்தை உண்டு பண்ணுகிறது. சில நேரங்களில் இது கல்லீரலை முற்றிலும் செயலிழக்க வைத்து, உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடக் கூடியது.
பொதுவாக, தன்னுடல் தாக்க நோய் ஒப்பீட்டளவில் A இரத்த வகைக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்த B இரத்த வகைக்கும் இந்த நோய் தாக்கும் பாதிப்பு இருந்தாலும், A இரத்த வகையுடன் ஒப்பிடும் போது, வாய்ப்பு சற்று குறைவானதாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
O அல்லாத இரத்த வகைகளில் பாதிப்பு ஏன்?
பொதுவாக, A, B, அல்லது AB இரத்த வகை கொண்ட நபர்களின் இரத்த உறைதல் தொடர்பான செயல்பாடுகளையும், உடலின் பிற மாற்றங்களையும் ஆராய்ந்ததில், இவை கல்லீரலில் இரத்த ஓட்டத்தை பாதிக்கும் தன்மையுடையவை என்றும், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் A, B மற்றும் AB இரத்த வகைகளைக் கொண்டவர்களிடம் இரத்தம் உறைதல் புரதத்தின் அளவு சற்று அதிகரிப்பதையும் கண்டறிந்தனர். ஆனாலும் இது ஆபத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணியாகத் தெரியவில்லை.
முந்தைய பல ஆய்வுகள் இரத்த வகைக்கும் கல்லீரல் புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பினை பற்றி ஆராய்ந்தன. பழைய தரவுகளும் ஒரு பெரிய மெட்டா பகுப்பாய்வும், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் O வகை இரத்தம் கொண்டவர்கள் மிகவும் அரிதாகவே இருந்ததை கண்டறிந்தனர். அதே நேரம் மற்ற வகை இரத்தம் கொண்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டதையும் கண்டுபிடித்தனர்.
அதற்காக, A, B மற்றும் AB இரத்த வகையினர் பயம் கொள்ள தேவையில்லை.
முதலில் உங்களின் இரத்த வகையை பற்றி அறிந்து கொள்ளுங்கள். இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் எந்த ஒரு இரத்த வகையினரையும் பயமுறுத்தும் நோக்கில் நடத்தப்படவில்லை. மாறாக, உங்கள் இரத்த வகையை பற்றி புரிந்துக் கொள்ள உதவுகிறது. நீங்கள் A அல்லது B வகையாக இருந்தால் உங்களுக்கு கல்லீரல் நோய் நிச்சயமாக வரும் என்று அர்த்தமல்ல. ஆட்டோ இம்யூன் கல்லீரல் கோளாறுகள் மிகவும் அரிதாகவே வரக் கூடியவை. இந்த ஆய்வு, ஒரு பெரிய ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக மட்டுமே உள்ளது.
விழிப்புணர்வுடன் இருங்கள்:
பொதுவாக, A அல்லது B இரத்த வகை உள்ளவர்கள் குடும்பத்தில், யாருக்காவது கல்லீரல் நோய்கள் தொடர்பான வரலாறு இருந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், கல்லீரல் தொடர்பான நோய்கள் இருக்கிறதா? என்பதை மருத்துவர் ஆலோசனையின் பேரில் ஆய்வு செய்து கொள்ளலாம். சரியான நேரத்தில் ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோயை கண்டுபிடித்தால், சிகிச்சை அளிப்பது, மீட்பது போன்ற செயல்களுக்கு விரைவான பலன் கிடைக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)