தண்ணி குடிச்சதும் பாத்ரூம் ஓடுறீங்களா? சாதாரணமா நினைக்காதீங்க... இது பெரிய நோயின் அறிகுறி!

Urine
Urine
Published on

"தண்ணீர் குடிப்பது உடம்புக்கு நல்லது" என்று எல்லோரும் சொல்வார்கள். ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால், நம் உடல் தானாகவே அதிகப்படியான நீரை வெளியேற்றும். அதனால் அடிக்கடி பாத்ரூம் போவது இயல்புதான். ஆனால், சிலர் தண்ணீர் குறைவாகக் குடித்தாலும், அடிக்கடி சிறுநீர் கழிக்க ஓடுவார்கள். "ஏதோ குளிர்ச்சி உடம்பு, அதான் இப்படி" என்று இதைச் சாதாரணமாகக் கடந்து போய்விடாதீர்கள். உண்மையில், உங்கள் உடல் உங்களுக்கு ஏதோ ஒரு ஆபத்தை உணர்த்த முயற்சிக்கிறது என்று அர்த்தம். 

காபி, டீ எனும் வில்லன்கள்!

நம்மில் பலருக்குக் காலையில் எழுந்ததும் காபி, சாயங்காலம் டீ, நடுவில் கூல் டிரிங்க்ஸ் குடிக்கலனா மண்டையே வெடிச்சிடும். ஆனால், இந்த பானங்களில் இருக்கும் 'காஃபின்' (Caffeine) ஒரு முக்கியமான வேலையைச் செய்கிறது. இது ஒரு 'டையூரிடிக்' (Diuretic) ஆகச் செயல்படும். அதாவது, இது சிறுநீரகத்தைத் தூண்டிவிட்டு, இயல்பை விட அதிகமான நீரை வெளியேற்றச் சொல்லும். நீங்கள் அளவுக்கு அதிகமாகக் காபி, டீ குடிப்பவர் என்றால், உங்கள் பாத்ரூம் அலைச்சலுக்கு அதுதான் முதல் காரணம். இதைச் சற்றுக் குறைத்தாலே மாற்றம் தெரியும்.

அடிக்கடி சிறுநீர் வருவது, குறிப்பாக இரவு நேரத்தில் எழுந்து போவது, சர்க்கரை நோயின் மிக முக்கியமான ஆரம்பக்கட்ட அறிகுறியாக இருக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு எகிறும்போது, அதைச் வெளியேற்ற உடல் முயற்சிக்கும். அந்தச் சர்க்கரை, சிறுநீர் வழியாகத்தான் வெளியேறும். கூடவே அதீத தாகம், காரணமே இல்லாத உடல் சோர்வு, திடீர் எடை குறைவு இருந்தால், யோசிக்கவே வேண்டாம்... உடனே சுகர் டெஸ்ட் எடுத்துவிடுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
சிறுநீர் கழிக்கத் திணறுகிறீர்களா? 50 வயதை தாண்டிய ஆண்களே கவனம்!
Urine

சிறுநீர்ப்பை பிரச்சனை!

சிலருடைய சிறுநீர்ப்பை தசைகள் ரொம்பவே 'சென்சிட்டிவ்' ஆக மாறிவிடும். சிறுநீர்ப்பை முழுவதுமாக நிரம்பித்தான் இருக்க வேண்டும் என்றில்லை; கொஞ்சம் நீர் சேர்ந்தாலே, "உடனே வெளியேற்று" என்று மூளைக்குக் கட்டளை போகும். இதைத்தான் மருத்துவர்கள் 'ஓவர் ஆக்டிவ் பிளாடர்' என்கிறார்கள். பொது இடத்தில் இருக்கும்போது இது பெரிய சங்கடத்தை உண்டாக்கும்.

பெண்களும், தொற்றுகளும்!

பெண்களைப் பொறுத்தவரை, 'சிறுநீர் பாதை தொற்று' (UTI) என்பது சர்வ சாதாரணம். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி அல்லது ஒருவித துர்நாற்றம் இருந்தால் அது தொற்றின் அறிகுறி. அதேபோல, சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும் அடிவயிற்றில் வலியுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். ஆனால், முழுமையாகக் கழித்த திருப்தி இருக்காது.

இதையும் படியுங்கள்:
சாதாரண முதுகுவலி அல்ல... கிட்னி பிரச்சினையின் அறிகுறி!
Urine

மேலே சொன்ன அறிகுறிகளில் எது தென்பட்டாலும், கூச்சப்படாமல் மருத்துவரை அணுகுங்கள். ஆரம்பத்திலேயே கவனித்தால், சர்க்கரை நோய் முதல் சிறுநீரகப் பிரச்சனை வரை அனைத்தையும் எளிதாகச் சரிசெய்துவிடலாம். விழிப்புணர்வுதான் சிறந்த மருந்து.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com