
நமது உடலில் அதிக வேலை செய்யும் மூட்டுகளில் முழங்காலும் ஒன்று. நடப்பது, ஓடுவது, குனிவது என அன்றாட வாழ்வில் நாம் செய்யும் அத்தனை அசைவுகளுக்கும் ஆதாரமாக இருப்பது இந்த முழங்கால்கள்தான். சில நேரங்களில், முழங்காலில் இருந்து வித்தியாசமான சத்தங்கள் வருவதை நாம் கவனித்திருக்கலாம். சிலருக்கு இது அவ்வப்போது வந்து போகும் சாதாரண நிகழ்வாக இருக்கலாம். ஆனால், சிலருக்கு இது தொடர்ச்சியாகவும், தொந்தரவு அளிக்கும் விதமாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
முழங்கால் என்பது எலும்புகள், தசை நாண்கள், குருத்தெலும்புகள் மற்றும் பல்வேறு இணைப்புத் திசுக்களால் ஆன ஒரு அற்புத அமைப்பு. இந்த உறுப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால்தான் நாம் சீராக நடக்க முடிகிறது. ஆனால், இந்த அமைப்பில் ஏற்படும் சிறு குறைபாடுகள் கூட சத்தத்தை ஏற்படுத்தலாம். மருத்துவ மொழியில் இந்த முழங்கால் சத்தம் 'கிரெபிடஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது எப்போதுமே தீவிரமான பிரச்சினையின் அறிகுறியாக இருக்க வேண்டியதில்லை என்றாலும், சில சமயங்களில் நாம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.
முழங்காலில் சத்தம் வருவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். மூட்டுக்குள் இருக்கும் திரவத்தில் உருவாகும் காற்று குமிழ்கள் உடைவது ஒரு காரணமாக இருக்கலாம். வயதாகும்போது குருத்தெலும்புகள் தேய்மானம் அடைவதும், தசை நாண்கள் அல்லது தசை நார் திசுக்கள் எலும்புகளின் மீது உராய்வதும் கூட சத்தத்தை உண்டாக்கலாம்.
எப்போது நாம் கவலைப்பட வேண்டும் என்றால், முழங்கால் சத்தத்துடன் வலியோ, வீக்கமோ இருந்தாலோ, அல்லது நடக்கும்போது தடுமாற்றம் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. தொடர்ச்சியாக உராய்வது போன்ற உணர்வு இருந்தாலோ அல்லது முழங்காலில் அடிபட்டிருந்தாலோ கூட மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம். இவை கீல்வாதம், குருத்தெலும்பு கிழிதல் அல்லது தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகளின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
பொதுவாக, வயது முதிர்வின் காரணமாக குருத்தெலும்புகளில் ஏற்படும் தேய்மானம், விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் முழங்கால் பிரச்சனை, குருத்தெலும்பு கிழிதல், மற்றும் பலவீனமான தசைகள் அல்லது தவறான உடல் தோரணை போன்ற காரணங்களாலும் முழங்காலில் சத்தம் வரலாம்.
முழங்கால் பிரச்சினைகளைத் தடுக்க சில எளிய வழிகள் உள்ளன. தொடை மற்றும் இடுப்புப் பகுதி தசைகளை வலுப்படுத்துவது, சரியான உடல் எடையை பராமரிப்பது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, பொருத்தமான காலணிகளை அணிவது மற்றும் முழங்காலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது ஆகியவை முக்கியமானவை.
எனவே, உங்கள் முழங்காலில் அடிக்கடி சத்தம் கேட்டால், அதை அலட்சியப்படுத்தாதீர்கள். அது உங்கள் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.