
பெற்றோர்கள் சில நேரங்களில் தங்கள் குழந்தைகளின் குறும்புகளைப் பார்த்து கோபம் கொள்ள வாய்ப்புண்டு. சிலர் கோபத்தை அப்படியே வெளிப்படுத்துவார்கள். இன்னும் சிலர் கோபத்தை வெளிப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து யோசித்துப் பார்ப்பார்கள். இந்த பயத்தில் கோபத்தை வெளிப்படுத்தாமல் மனசுக்குள்ளேயே புதைத்து விடுவார்கள். ஆனால், இது தவறு. இது உங்கள் குழந்தை மீது உங்களுக்கு அன்பு இல்லை என்பதையே காட்டுகிறது. கோபத்தை வெளிப்படுத்துவது நீங்கள் குழந்தை மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதைக் காட்டுவதற்கான ஒரு வாய்ப்பு. குழந்தைகளுக்கு பெரியவர்களின் ஆதிக்கமும், பலமும் வெறுப்பையே ஏற்படுத்தும். அவர்களை சார்ந்திருக்கிறோம் என்ற உணர்வால் எழும் கவலை அவர்களின் மனதை கட்டுப்பாடற்ற திசைகளில் திரியச் செய்கிறது.
கண்டிப்பு சுருக்கமாக இருக்கட்டும்: கண்டிப்புகள் சுருக்கமாக இருக்க வேண்டும். அவர்கள் இயல்பு தன்மைக்கு திரும்பியவுடன் நீங்களும் இயல்பு தன்மைக்குத் திரும்பி விடுங்கள். குழந்தைகளுக்கு ஞாபக மறதி என்பது பெரிய வரம். கெட்ட விஷயங்களை தேவையற்ற மூட்டையாக மனதில் சுமந்து கொண்டு திரிய மாட்டார்கள். பெரும்பாலும் நீங்கள் ஒரு சம்பவத்தை மறப்பதற்கு முன்பே அவர்கள் அதை மறந்து விடுவார்கள்.
குழந்தையின் நடவடிக்கை: குழந்தையின் குறைபாடுகளை எண்ணி வருத்தப்படாதீர்கள். குழந்தைகளின் நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள். குழந்தைகள் தமது உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதியுங்கள். அவர்கள் எத்தகைய குழந்தைகளாக இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தி விளக்குங்கள்.
சூழ்நிலைகளை உருவாக்காதீர்கள்: குழந்தைகளிடம் நீங்கள் கண்டிப்பாக நடந்து கொண்டதற்காக குற்ற உணர்வுக்கு ஆளாகாதீர்கள். அதை குழந்தைகளிடம் சொல்லவும் செய்யாதீர்கள். இத்தகைய சூழ்நிலைகளை குழந்தைகள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தவறு செய்வதற்கு வாய்ப்பு உண்டு.
குறை கூறாதீர்கள்: ‘அன்று, நீ அப்படிச் செய்தாய், ஊருக்குப் போயிருந்தபோது நீ சரியாக வேலை செய்யவில்லை, படிக்கவில்லை’ என எந்தக் காரணத்தை கொண்டும் உங்கள் குழந்தையின் ஆளுமை பற்றியும், கடந்த தால நிகழ்வுகளைப் பற்றியும் குறை கூறாதீர்கள். எந்த விதத்திலும் உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள்.
சகிப்புத் தன்மையுடன் இருங்கள்: குழந்தைகள் கோபத்தில் பேசும் வார்த்தைகள் உங்களை பாதிக்கும்போது சகிப்புத்தன்மையுடன் இருங்கள். பெரும்பாலும் கோபத்தில் குழந்தைகள் மிக மோசமான வார்த்தைகளை வெளிப்படுத்துவார்கள். இப்படிப் பேசுவதால் அவர்களுக்கு உங்கள் மீது அன்பு இல்லை என்று அர்த்தம் இல்லை. இப்போது அந்தக் கோப உணர்வு அவர்களை அப்படிப் பேச வைக்கிறது.
எல்லைக் கோடுகள்: உங்கள் குழந்தைகளின் கோபத்திற்கு சிறு எல்லை கோடுகளை வகுத்துக்கொள்ள வேண்டும். ஆரம்பக்கட்ட பள்ளி பருவத்தில் இருக்கும் குழந்தையின் கோபம் கட்டுங்கடாமல் போகும்போது ஒரு குறுகிய காலத்தில் இடமாற்ற ஏற்பாடு செய்யுங்கள். அப்படிச் செய்வதால் தன்னைத்தானே கவனித்து அவர்கள் இயல்பு நிலைக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டாகும்.
வழி காட்டுங்கள்: கோபம் தணிந்து குழந்தை மிகவும் அமைதியாக இருக்கும்போது அது தனது இயல்பான விளையாட்டுகளைத் தொடரலாம் என வழி காட்டுங்கள். ஒரு சிறு சண்டை, கோபத்திற்குப் பிறகு விளையாட்டு என மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கி அவர்களை சாந்தப்படுத்தி குழந்தை சந்தோஷமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் மீது எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் அவர்களிடம் வெறுப்பை காண்பிக்காமல் ஆக்கபூர்வமான விதத்தில் திசை திருப்பி பெற்றோர் - குழந்தை உறவை மேம்படுத்துங்கள்.