OCD (Obsessive Compulsive Disorder) என்பது ஒரு வகையான மன நோயாகும். மனதில் எப்போதும் தேவையில்லாத அச்சங்கள் இருந்து கொண்டே இருக்கும். தேவையில்லாத காரியங்களில் அல்லது சிந்தனைகளில் நம்மை ஆழமாக உணர வைக்கும் ஒரு விதமான மன நோய் தான் இந்த OCD.
இந்த நோய் ஆண் பெண் என இருபாலருக்கும் வரலாம். ஆனால் பெண்களிடம் இதை அதிகமாக காணலாம்.
OCD யாரை பாதிக்கலாம்? சராசரியாக 19 வயதில், அதாவது டீனெஜில் இது வெளிப்பட துவங்குகிறது. OCD உள்ளவர்களுக்கு சுமார் 50% குழந்தைப் பருவத்திலும் இளமைப் பருவத்திலும் அறிகுறிகளைக் காட்டுகிறது. 40 வயதிற்குப் பிறகு ஒருவருக்கு OCD ஏற்படுவது அரிது.
இத்தகையவர்கள் மிக அதிகப்படியான பெர்ஃபெக்ஷனை (Perfection) எதிர்பார்ப்பார்கள். குறிப்பாக, சுத்தத்தின்மீது அளவுக்கு அதிகமான கவனத்தை செலுத்துவார்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே, அதைப்போல தான் இவர்களும் இந்த அதிகப்படியான கட்டாயத்தால் நாளடைவில் மனநோயிற்கு ஆளாகுகிறார்கள். இந்த OCD ஐ தமிழில் வெறித்தனமான கட்டாய கோளாறு என்பார்கள். அதாவது இவர்கள் மிகவும் வெறித்தனமாக ஒரு காரியத்தை முடித்தே தீர வேண்டும் அல்லது அடிக்கடி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள்.
OCD உள்ளவர்கள் பொதுவாக வெறித்தனம் கலந்த நிர்ப்பந்தத்தை தினமும் எதிர்கொள்கிறார்கள். கவனிக்கப்படாவிட்டால், இந்தப் பிரச்சினைகள் ஒருவரின் தனிப்பட்ட மற்றும் வெளி உலக வாழ்க்கையின் பல அம்சங்களைப் பாதிக்கலாம்.
இவர்களுக்கு வேண்டாத எண்ணங்களை கட்டுப்படுத்த கடினமாக இருக்கும். மீண்டும் மீண்டும் வருகின்ற மற்றும் ஊடுருவுகின்ற தேவையற்ற எண்ணங்கள் துயரத்தைத் தூண்டி, பதற்றத்தை ஏற்படுத்தும். மேலும் பொதுவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட கருப்பொருள்களால் இந்த நோய் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
பாதிப்பிற்கான அறிகுறிகள்:
மாசுபாடு அல்லது அழுக்கு பற்றிய பயம்.
நிச்சயமற்ற தன்மையைக் கையாள்வதில் சிரமம்.
விஷயங்கள் ஒழுங்காகவும் சமநிலையுடனும் இருக்க வேண்டும் என்கிற பிடிவாதம்.
கட்டுப்பாட்டை இழந்து தனக்கே அல்லது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பது பற்றிய பயங்கரமான எண்ணங்கள்.
அடுத்தவர்களும் கையாள வேண்டும் என்கிற எண்ணம்.
ஒவ்வொருவருக்கும் தனிபட்ட அறிகுறிகள் வெவ்வேறு விதமான பாதிப்பு ஏற்படும்.
இவர்கள் அசுத்தத்தின் காரணமாக உடல் நலம் குன்றிவிடுமோ என்று பயந்து கொண்டு அடிக்கடி கைகளையும் கால்களையும் தேவையில்லாமல் சுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள். வீட்டில் சிறிதளவு அழுக்கு இருந்தால் கூட சுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள்.
இவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பொருட்கள் இடம் மாறக் கூடாது என்பதில் வெறிப்பிடித்தவர்களாக இருப்பார்கள். வேறு யாராவது வீட்டிற்கு வந்தால் அவர்களிடம் எந்தெந்த சாமானை எங்கு வைக்க வேண்டும் என்று அடிக்கடி கூறிக் கொண்டே இருப்பார்கள்.
வெளியில் கிளம்பினால் கதவு பூட்டி இருக்கிறதா, கேஸ் ஸ்டவ் மூடி இருக்கிறதா என்ற சந்தேகம் வந்து கொண்டே இருக்கும்.
சமையலறை எப்போதும் சுத்தமாகவே இருக்க வேண்டும் என்று அதிகமாகவே எண்ணுவார்கள்.
இவர்கள் எதற்கெல்லாம் சிந்தித்து பயப்படுகிறார்களோ அதை அடுத்தவர்களுக்கும் கூறி அவர்களையும் தொல்லை செய்து இவர்களின் எண்ணம் போல் நடக்க கட்டாயப்படுத்துவார்கள்.
எதாவது ஒரு கருத்தையோ அல்லது எதாவது ஒரு விஷயத்தையோ அடுத்தவர்களிடம் கூற பலமுறை யோசிப்பார்கள். இப்படி கூறினால் என்ன ஆகும் என்று தீவிரமாக யோசிப்பார்கள்.
இன்னொரு முக்கியமான அறிகுறி என்னவென்றால் கடைக்குத் தானே சென்று தனக்கு பிடித்த விதத்தில் துணிகளையோ அல்லது வேறு பொருட்களையோ வாங்கி கொண்டு வருவார்கள். ஆனால் வீட்டிற்கு வந்த பின்போ அல்லது சிறிது நாட்களுக்கு பிறகோ இவர்களுக்கு தான் விரும்பி எடுத்தது பிடிக்காமல் போய்விடும். இப்படி இவர்கள் நிறைய பொருட்களை வாங்கிய பிறகு பிடிக்காமல் போவதால் தனக்கு தானே எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கி கொள்வார்கள்.
OCD வருவதற்கான காரணங்கள்:
மரபியல் காரணமாகமாகவும் இந்த நோய் வரலாம். அதாவது உங்களுடைய பெற்றோர்களோ அல்லது உடன்பிறந்தவர்களோ OCD நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த நோய் உருவாகும் ஆபத்து அதிகமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. உறவினர்களுக்கு குழந்தை பருவத்திலோ அல்லது டீன் ஏஜ் பருவத்திலோ OCD நோய் வந்திருந்தால் ஆபத்து அதிகரிக்கலாம்.
மூளை மாற்றங்களின் காரணமாக இது ஏற்படலாம் . OCD உள்ளவர்களுக்கு மூளையின் முன் புறணி மற்றும் துணைப் புறணி கட்டமைப்புகளில் வேறுபாடுகளைக் காட்டுகின்றன.
OCD நோயானது பார்கின்சன் நோய் , டூரெட்ஸ் நோய்க்குறி மற்றும் கால்-கை வலிப்பு உள்ளிட்ட உங்கள் மூளையின் ஒத்த பகுதிகளைப் பாதிக்கும் பிற நரம்பியல் நோய்களோடும் தொடர்புடையதாக இருக்கலாம்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
உங்களுக்கே நீங்கள் செய்வது தெரிந்திருந்தும் உங்களால் நிலைமையை கட்டுபடுத்த முடியாமல் போனாலோ அல்லது உங்களால் அடுத்தவர்களுக்கு பிரச்சனை அதிகமானாலோ அல்லது வேறு எதாவது தொல்லைகளுக்கு உள்ளானாலோ நீங்கள் ஒரு மன நல மருத்துவரை உடனே அணுகி மருத்துவ உதவியை பெறவும். சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாடினால் இந்த நோயை கண்டிப்பாக குறைத்து கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.