பார்ப்பதற்கு மிகச் சிறியதாக இருக்கும் இலந்தை பழம் அளவற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. பலரும் இந்தப் பழத்தை படி கணக்கில் வாங்கி அதை உரலில் போட்டு உப்பு, மிளகாய், வெல்லம் சேர்த்து இடித்து காய வைத்து எடுத்து வைப்பார்கள். ‘மாதவிடாய் பிரச்னை என்றால் இலந்தை பழம் சாப்பிடு. சரியா போயிடும்’ என்று சொல்லும் அளவுக்கு இந்தப் பழத்தில் பெண்களின் கர்ப்பப்பையை காக்கும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்தியா எங்கும் அதிகம் காணப்படும் இலந்தையில் காட்டு இலந்தை, நாட்டு இலந்தை என இரு வகையுண்டு. இது ஆங்கிலத்தில் ஜூஜூபா (Jujuba Fruits) என்று அழைக்கப்படுகிறது. மேலும், இந்திய பிளம், சீன பேரிச்சை மற்றும் சீன ஆப்பிள் என்றும் இது அழைக்கப் படுகிறது. சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும்.
100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74 சதவிகிதம். மேலும், இதில் ஏ, சி, பி3, பி6 வைட்டமின்களும், இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும், கார்போ ஹைட்ரேட் மற்றும் புரதமும் உள்ளன என ஆய்வுகள் கூறுகின்றன.
இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்த பழத்துக்கு உண்டு என்பதால், பெண்களின் கர்ப்பப்பைக்கு வலு தந்து மாதவிடாய் பிரச்னைகளை நீக்கி குழந்தைப் பிறப்புக்கு உதவி செய்கிறது. இதில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலிமை தருகிறது. இந்தப் பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இந்தப் பழத்தை அதிகமாகவே சாப்பிடலாம்.
உடலில் பித்தத்தால் உண்டாகும் தலைவலி, மயக்கம், தலைசுற்றல போன்ற பிரச்னைகளுக்கு இது மிகச்சிறந்த தீர்வு தரும். காரணம், இந்தப் பழத்திற்கு பித்தத்தின் அளவை சமசீராக வைக்கும் தன்மை அதிகமுள்ளது. பித்த வாந்திக்கு சிறந்த தீர்வு இது.
பசியின்மையால் அவதிப்படுபவர்களும், செரிமானப் பிரச்னை உள்ளவர்களும் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும். சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் இந்தப் பழத்தில் உள்ள வைட்டமின் சி முகப்பரு மற்றும் கருவளையங்களை நீக்குகிறது. எனவே, பெண்கள் தாராளமாக இலந்தைப்பழம் சாப்பிட்டு முகம் பொலிவு பெறலாம்.
குறிப்பாக, இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து இரத்த ஓட்டம் சீராக்கவும் குடல் பகுதியில் புற்றுநோய் வராமல் தடுக்கவும் இப்பழம் உதவுகிறது. மேலும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்துமா, கண் பார்வைக்கு, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உளைச்சலைப் போக்க, உடலின் எந்த வலியையும் போக்க என ஏராளமான மருத்துவ நலன்களைக் இந்தப் பழம் கொண்டுள்ளது.
இந்தப் பழம் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால் குளிர்ச்சியான உடல் தன்மை உள்ளவர்கள் இரவு மற்றும் குளிர் காலத்தில் இப்பழத்தை உண்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.