
நாட்டிலே முதல்முறையாக புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை, ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்து சாதனை படைத்துள்ளனர்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறை மருத்துவ ரீதியாக மிகவும் தீவிரமான அறுவை சிகிச்சையாகக் கருதப்படுகிறது. இதற்கு என்று பிரத்தியேக அனுபவம் வாய்ந்த நுட்பமான திறன் கொண்ட மருத்துவர்கள் தேவைப்படுவார்கள். ஆனால், இந்த தீவிர அறுவை சிகிச்சையை ரோபோ தொழில்நுட்பம் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனை செய்துள்ளது.
இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐந்து நோயாளிகளுக்கு ரோபோடிக் முறையில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து, நான்கு பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டார்கள். மற்றொரு நோயாளி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார், ஒரு சில நாட்களில் அவரும் வீடு திரும்புவார். இந்த செய்தியை எய்ம்ஸ் அறுவை சிகிச்சைத் துறை தலைமை மருத்துவர் டாக்டர் பி.கே. பன்சால் தெரிவித்துள்ளார்.
கை அறுவை Vs ரோபாடிக் அறுவை சிகிச்சை வேறுபாடு:
சாதரணமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒரு பெரிய மற்றும் மிகவும் தீவிரமான அறுவை சிகிச்சை ஆகும். இது பாரம்பரியமாக மருத்துவர் கைமுறையில் செய்யப்படும் போது, நோயாளி குணமடைவதற்காக சுமார் 10 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். அதன் பின்னரே அந்த நோயாளியை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய முடியும்.
ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது, நோயாளி குணமடையும் நேரம் வெகுவாக குறைகிறது. காலையில் ரோபோடிக் அறுவை முறையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த ஒருவர் மாலையில் சுயமாகவே நடக்க முடியும், நோயாளி வேகமாக குணமடைவதால் மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அவர் வீட்டிற்கு செல்ல முடியும்.
வலி குறைவான சிகிச்சை:
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறையை கையில் செய்யும் பொது, அறுவை சிகிச்சைக்குத் தேவையான தையல்கள் சுமார் 40 வரை போட வேண்டி இருக்கும், ஆனால் ரோபோடிக் சிகிச்சை முறை மிகவும் நுட்பமாக இருப்பதால் இதற்கு 10 தையல்கள் மட்டும் போட வேண்டி இருக்கும். இது நோயாளியின் வலியையும் சிரமத்தையும் வெகுவாக குறைக்கும் என்றும் கூறப்படுகிறது. சிகிச்சைக்கு ஆகும் செலவு விஷயத்திலும் ரோபோடிக் முறையில் மக்களுக்கு மிகவும் அதிக பலன் கிடைக்கிறது.
இதற்கு ஆகும் செலவு:
பொதுவாக தனியார் மருத்துவ மனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் மொத்த செலவு சுமார் 20 லட்சத்தில் இருந்து 25 இலட்சம் வரை செலவாகிறது. ஆனால் மத்திய அரசு மருத்துவமனையான எய்ம்ஸில் இதே சிகிச்சைக்கு வெறும் 25,000 ரூபாய் மட்டுமே செலவாகிறது. இதனால் ஏராளமான மக்களுக்கு இந்த நவீன சிகிச்சை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
நோய் தொற்று அபாயம் குறைவு:
ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையில் முழுமையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்ய சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை ஆகும். அறுவை சிகிச்சையின் போது, ஒரு சிறிய கீறலுக்குப் பிறகு, நோயாளியின் உடலில் பொத்தான் துளைகள் இடப்படுகின்றன. இதனால் நோயாளிக்கு தொற்று அபாயம் மிகவும் குறைகின்றது. நோயாளிகள் சிகிச்சைக்குப் பிறகு 10 மடங்கு குறைந்த வலியை பெறுகிறார்கள். இதனால், நோயாளிகள் சீக்கிரமே குணமடைந்து 4-5 நாட்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்புகிறார்கள். அதனால் அவர்கள் விரைவாகவே வீட்டிற்கும் அனுப்பப்படுகிறார்கள்.