வியப்பில் விழிகளை உயர்த்தவைக்கும் வெற்றிலையின் மருத்துவப் பயன்கள்!

Amazing medicinal benefits of betel nut
Amazing medicinal benefits of betel nut
Published on

கொடியில் படரும் வெற்றிலை பூப்பது, காய்ப்பது, கனிவது என்று எதுவும் இல்லாத வெறும் இலைதான். அந்த வெறும் இலையிலேயே அவ்வளவு மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவற்றைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

வெற்றிலையை ஆற்றுப்படுகையில் வியாபார ரீதியாக அதிகம் பயிரிடுகிறார்கள். கருப்பு நிறமுடன் நல்ல காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர மணத்துடன் சிறிது காரமாகவும் இருப்பது கற்பூர வெற்றிலை ஆகும். வெற்றிலைக்கு நல்ல மணமும் காரமும் உண்டு. இது கொடி பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள்: பொதுவாக வெற்றிலை சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தை தூண்டும், நாடி நரம்பை வளமாக்கும், வாய்நாற்றம் போக்கும், வெற்றிலைச் சாறு சிறுநீரை பெருக்குவதற்குப் பயன்படுகிறது. வெற்றிலை சாற்றுடன் நீர் கலந்த பாலையும் தேவையான அளவு கலந்து பருகி வர சிறுநீர் நன்கு பிரியும்.

கம்மாறு வெற்றிலை சாறு 15 மில்லி அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க வயிறு உப்புசம், மந்தம், ஜன்னி, சீதள ரோகம், தலைவலி, நீர் ஏற்றம், வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி இரவில் தூங்கும்போது கட்டிகளின் மேல் வைத்து கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும்.

சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுகு சூரணத்துடன் வெற்றிலைச் சாறு, தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.

வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும். வெற்றிலைகள் இரண்டை கிள்ளி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி இறக்கி ஆறிய பின் இரண்டு சொட்டு எண்ணெய் காதில் விட காதில் சீழ் வடிதல் குணமாகும்.

வெற்றிலை சாற்றை மூக்கில் விட, விடாமல் மூக்கில் வழியும் சளி குணமாகும்.

வெற்றிலையின் வேரை சிறிதளவு எடுத்து வாயிலிட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே, இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச் சாறும் இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்தி வர நன்மை ஏற்படும்.

அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து குடித்து வரலாம்.

வெற்றிலை, துளசி, கற்பூரவல்லி இவை மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு சுத்தம் செய்து சுடு தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். பின்னர் மூன்றையும் எடுத்து நன்றாக சாறு பிழிந்து சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க நெஞ்சு சளி அப்படியே கரைந்து விடும். பெரியவர்களும் சற்று அளவு அதிகமாக அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு வெள்ளைப் பூண்டு பல், 5 வெற்றிலை காம்புகள் அதே அளவு 2 சிட்டிகை திப்பிலி மூன்றையும் அரைத்து உள்ளுக்கு காலை, மாலை கொடுக்க குழந்தைக்கு சளி குறையும்.

இரண்டு வெற்றிலையை நசித்து சாறெடுத்து சிறிதளவு கஸ்தூரி கலந்து காலை ஒரு வேளை மட்டும் உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தையின் வாந்தி நின்று விடும்.

வெற்றிலையை அரைத்து கீழ்வாத வலிகளுக்கும் வீக்கம் முதலியவற்றுக்கும் வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்து கசக்கி பிழிந்து சாறு எடுத்து பத்து மாத குழந்தைகளுக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

இதையும் படியுங்கள்:
திடமான மனதுடையவர்கள் ஒருபோதும் செய்யாத ஏழு செயல்கள் தெரியுமா?
Amazing medicinal benefits of betel nut

காரமுள்ள கருப்பு வெற்றிலை பத்து எடுத்து நைசாக அரைத்து காலை, மாலை சருமத்தில் இரண்டு நாள் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் அரிப்பு நீங்கும்.

கஸ்தூரி சிறிதளவு ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட்டு வர இதய வலி குணமாகும்.

இரண்டு வெற்றிலையை வாங்கி வாயில் அதக்கி வைத்துக்கொண்டு சாரத்தை விழுங்கிக்கொண்டே இருக்க எப்பொழுது பிரயாணம் செய்தாலும் வாந்தி வராது.

இப்படி மங்கலகரமான நிகழ்ச்சிகள் எங்கெல்லாம் உண்டோ அங்கெல்லாம் பார்க்க முடிகிற வெற்றிலையை நோய்களுக்கு ஏற்ப பயன்படுத்தி ஆரோக்கியம் காப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com