

உலகெங்கிலும் அதிகரித்திருக்கும் நோய்களில் முக்கியமானதும் முதன்மையானதுமான உடல் பருமன் பல்வேறு நோய்களுக்கு வித்திடுகிறது. பலரும் வீட்டுச் சாப்பாட்டைப் புறக்கணித்துவிட்டு உணவகங்களில் நினைத்த நேரமெல்லாம் உண்பதும், அதிகளவில் தேவையில்லாமல் உண்பதும், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதும்தான் இதற்கான காரணம் நீண்ட நாள் நலமுடன் வாழ விரும்பும் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய முறைகளை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்
எப்போது, எப்படி உண்ண வேண்டும்?
பசிக்கும்போது மட்டுமே ஒருவர் உண்ணவேண்டும். பசி இல்லாமல் இருப்பது நோயின் அறிகுறியாகும். மூன்று வேளை தம் கட்டி உண்ணும் நவீன நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இரண்டு வேளை உண்ணும் முறையை கடைப்பிடிக்க வேண்டும். பழங்காலத்தில் நமது முன்னோர்கள் கடைப்பிடித்த உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் இரண்டு வேளை மட்டும் உணவு உண்டு, கடுமையான உடல் உழைப்பும் செய்தனர். அதனால் அப்போதைய காலகட்டங்களில் நோய்கள் மிகவும் குறைவாக இருந்தன.
தற்போதைய காலத்தில் உடல் உழைப்பு மிக மிகக் குறைந்து அதிகமாக உண்ணும் பழக்கமும் அதிகரித்து விட்டது. ஒருவேளை உண்ட உணவு முழுவதுமாக ஜீரணமான பின்பே அடுத்தவேளை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படிச் சாப்பிட்டால் உடலுக்கு மருந்தே தேவையில்லை.
உணவு உண்ணும் முறையிலும் கவனம் செலுத்தவேண்டும். அவசர அவசரமாக அள்ளிப்போட்டுக் கொண்டால் பசியும் தீராது, நோய்களும் உண்டாகும். உணவை நன்கு மென்று கிட்டத்தட்ட திரவ நிலைக்குச் சென்ற பின்பு விழுங்க வேண்டும். செரிமான செயல்முறை வாயிலேயே தொடங்குவது மிக முக்கியமாகும். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்கிற பழமொழியை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
நமது உணவில் 70% பழங்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் மெலிந்த புரதம் இருக்கவேண்டும். 25லிருந்து 30 சதவீதம் மட்டுமே தானியங்கள் இருக்க வேண்டும். பாரம்பரிய அரிசி வகைகளான மாப்பிள்ளை சம்பா மற்றும் கருங்குருவி ஆகியவற்றில் சாதம் சமைத்து சாப்பிடவேண்டும். மெருகூட்டப்பட்ட நவீன அரிசியைவிட இவை குறைந்த கிளைசெமிக் குறியீட்டையும் அதிக ஊட்டச்சத்து மதிப்பையும் கொண்டுள்ளன.
ஆறு சுவைகளின் சக்தி
எந்த உணவையும் வேண்டாம் என ஒதுக்க கூடாது. ஆரோக்கியமான உணவில் ஆறு சுவைகளையும் சரியான விகிதத்தில் கலந்து உண்ண வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கசப்பு மற்றும் துவர்ப்பு சுவையுள்ள காய்கறிகளை சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். இவை உடல் வலிமைக்கு உதவுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் பராமரிக்கின்றன. பாகற்காய், கோவக்காய் போன்ற கசப்பான காய்களையும், கடுக்காய், வாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை மிகுந்த காய்களையும் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையை அறவே தவிர்க்கவேண்டும். பலரும் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தி பழங்களை ஜூஸ் போட்டு அருந்துகிறார்கள். இது உடலுக்கு தீங்கைத் தரும். பழங்களில் இருக்கும் இயற்கையான இனிப்பே போதும். அதை அப்படியே உண்பதுதான் நல்லது.
ஊட்டச்சத்து இல்லாத மற்றும் பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். வெளியில் வாங்கி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வீட்டிலேயே தயாரித்து உண்ணவேண்டும். சமச்சீரான சத்துக்கள் உள்ள உணவுகளை உண்ணவேண்டும். இந்த முறைகளை பின்பற்றினால் ஒருவர் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக வாழ முடியும் என்பது உறுதி.
சமையலறை என்பது ஒரு மருத்துவ அறைக்கு ஒப்பானது. ருசியாக இருக்கும் உணவு வகைகளை சமைத்து சாப்பிடுவதை விட உடலுக்கு ஆரோக்கியத்தையும் நன்மையையும் தரும் உணவுகளை கவனத்துடன் தயாரித்து உண்ணவேண்டும். இது குடும்பத்தினரின் நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.