இரத்த சோகை என்பது உடலில் ஹீமோகுளோபின் குறைவதால் உண்டாவது. ஹுமோகுளோபின், திசுக்களுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் இரும்பு சத்து நிறைந்த புரதம் ஆகும். ஒருவரின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இரத்த சோகை (Anemia) ஏற்படுகிறது.
ஹீமோகுளோபின் அளவானது ஆண்களுக்கு 14-18கி/டெ.லி மற்றும் பெண்களுக்கு 12-16கி/டெ.லி இருக்க வேண்டும். இதன் அளவு குறைவாக இருந்தால் உடல் ஆரோக்கியம் பல வகைகளிலும் பாதிக்கப்படும். அவ்வாறு குறையும் போது நம் உடலானது அதற்குரிய அறிகுறிகளை ஏற்படுத்தும்.
ரத்தசோகைக்கான (Anemia) அறிகுறிகள்:
சீரற்ற இதய துடிப்பு
இதய துடிப்பு தீடிரென அதிகரிப்பது,குறைவது என அதன் துடிப்பு வேகத்தில் மாற்றம் உண்டாகும்.ஏனெனில் மற்ற பாகங்களுக்கு ஆக்ஸிஜன் சீராக செல்லாததன் காரணமாக இதயம் அதனை ஈடு செய்ய துடிப்பை அதிகரித்துக் குறைக்கும். அதன் வெளிப்பாடே இந்த அறிகுறி.
வெளிர் நிறத் தோல்
ரத்தம் இல்லையென்றாலே சருமம் வெளிர் நிறத்தில் காணப்படும். அதோடு கண்கள், நகங்கள் மற்றும் பற்களின் ஈறுகளும் ரத்தமின்றி வெளிறிப் போய் இருக்கும்.
தசை உறுதி இழத்தல்
இரும்புச் சத்து இல்லையென்றால் தசைகளில் சுருக்கம் ஏற்பட்டு பலவீனம் அடையும். இதனால் கை,கால்கள் பலவீனமாக இருக்கும்.
தலைவலி
ஹீமோகுளோபின் சீராக இல்லாததால் தலைவலி, மூக்கடைப்பு, மயக்கம், தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இதனால் உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை ,எந்த வேலையும் செய்யாமல் எப்போதும் தூங்கிக் கொண்டே இருத்தல் போன்றவை இருக்கும்.
ரத்தசோகையால் ஏற்படும் இவற்றை எப்படி தடுக்கலாம்?
ரத்தசோகையை இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின் சி மற்றும் பி12 போன்ற வைட்டமின் கொண்டவற்றை சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம். கீரை வகைகள், பீட்ரூட், ஆட்டிறைச்சி, ஈரல், வேர்க்கடலை, கருப்பு கொண்டைக்கடலை , முட்டை மற்றும் மாதுளை, நட்ஸ் வகைகள், கடல் உணவுகள், பேரீட்சை போன்ற உணவுகளை உட்கொண்டால் ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம்.
ஹீமோகுளோபின் உற்பத்திக்கு வைட்டமின் சி அவசியம். சிட்ரஸ் பழங்கள், தக்காளி,நெல்லிக்காய் போன்றவற்றை சாப்பிடலாம். இரும்புசத்து மாத்திரை எடுத்துக் கொள்ளுதல், அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவுதல் மேலும் வெளியில் செல்லும் போது செருப்பு அணிந்து செல்லுதல் ஆகியவற்றால் இதனை தடுக்கலாம்.
ரத்தசோகை சார்ந்த தீவிர பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.