கோபம் கொல்லும்! கோபம் கொள்வதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

Anger
Anger
Published on

சினம் என்பது மனிதர்களின் மனதில் தோன்றும் கடுமையான எதிர்மறை உணர்ச்சியாகும். இது சிறிய எரிச்சல் அளவில் இருந்து கடுமையான வெறி கொண்டதாக வரை இருக்கலாம். இதன் மறுபெயர் கோபம் ஆகும். கோபம் நம் அனைவருக்கும் வரும். வருவதை யாராலும் தவிர்க்க முடிவதில்லை. சிலருக்கு அது தற்காலிக குணமாகவும் சிலருக்கு பழக்கமாகவும் இருக்கிறது. அதிலிருந்து வெளியே வரவேண்டும் என்று நம்மில் பெரும்பாலோனோர் விரும்புகிறோம். ஆனால் வெற்றி பெறுபவர்கள் மிகச் சிலரே. உண்மையில், அவசியம் கவனிக்கப்படவேண்டிய நமது அன்றாடப் பிரச்னைகளில் கோபமும் ஒன்று ஆகும்… அதை இப்பதிவில் கவனிப்போம்!

சினம் என்னும் கோபமானது மிகக் கொடியது என்பதை நாம் அனுபவத்தால் பல சூழ்நிலைகளில் உணர்ந்திருப்போம். சினம் கொள்பவர் தமது மன அமைதியை தாமே கெடுத்துக்கொள்கிறார். அவர் தம் சினத்தினால் பிறர் உள்ளத்தையும் புண்படுத்துகிறார். இது ஒரு உணர்ச்சி வயப்பட்ட பகையாக மாறுகிறது. பசி, வயிற்றில் அமிலத் தன்மை, வயிற்றுப் புண், அதீதப் பசி, தலைவலி போன்ற உடல்ரீதியான பிரச்னைகள் இருப்பவர்களுக்கு கோபம் அதிகம் வருவதாக கூறப்படுகிறது.

நமது நலத்துக்காகவே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் மேல்தான் நமக்கு அதிகமாக அடிக்கடி சினம் வருவதைப் பார்க்கிறோம். சிலருக்கு தேவையில்லாமல் அடிக்கடி கோபம் வரும். இவர்களுடைய கோபத்தால் உறவுகளும்,நண்பர்களும் பலமுறை அவதிப்பட நேரலாம். பகையாகக் கூட மாறிவிடுவார்கள்.

ஒருவர் சினத்தில் இருக்கும் போது நாம் பதில் பேசாமல் இருப்பது நல்லது. சினம் ஒழிய மனம் அடையும் நிலைதான் பொறுமை. இதனைப் பொறையுடைமை என்று வள்ளுவர் கூறுகிறார். ஒருவனுக்கு சினம் அறுமிடத்தில்தான் ஞானம் தோன்றுகிறது. ஆன்மீகத்திற்கு நேர் எதிர்நிலையானதாக சினம் இருக்கிறது.

தன்னுடைய கோபம் நியாயம் இல்லை என்பது ஒருவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இருந்தாலும் அந்தக் கோபத்தை கட்டுபடுத்தத் தெரியாமல் திணறிக்கொண்டு இருக்கலாம். அடிக்கடி கோபம் கொள்பவர்கள் பிறருடைய ஆயுளையும், அவர்களுடைய ஆயுளையும் சேர்த்து குறைத்துக்கொள்கிறார்கள். இந்த உண்மை அவர்களுக்குத் தெரிவதில்லை.

கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது. அன்பினால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். இதை கோபப்படுபவர்கள் புரிந்து கொள்வதில்லை. காரணம் கோபப்படும்போது அவர்களுடைய மூளை வேலை செய்வதில்லை.

நமக்குள் தோன்றும் சினத்தை அடக்கி வைக்கக் கூடாது. அடக்கி வைத்தால் உடலுக்கும், உள்ளத்திற்கும் அது பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஆனால், அதை மடை மாற்றம் செய்யலாம். தன்னை மீறி, தன் உணர்வுகளை வன்முறை முறையில் வெளிப்படுத்துதல் என்பது பலவீனத்தின் உச்சம் என்பதை அறியாமல், அதிகக் கோபம் கொள்பவர் தன்னை பலசாலி என்று நினைத்துக்கொள்வது வழக்கம். நம் கோபத்தால் நம்மைப் பார்த்து பிறர் பயப்படலாம். ஆனால், அந்த பயம் தற்காலிகமானது. நம் மீது ஏற்படும் வெறுப்பு நிரந்தரமானதாகி விடும்.

இதயத்துடிப்பு அதிகமாவது, வேகமாக சுவாசிப்பது, பற்களைக் கடிப்பது போன்றவை சினத்தின் வெளிப்பாட்டு அடையாளங்களாகும். இவற்றில் ஏதேனும் நம்மிடம் காணப்பட்டால்,உடனடியாக நாம் நமது மனதைச் சாந்தப்படுத்த முயல வேண்டும். இதுபோன்ற செய்கைகளில் நாம் ஈடுபடும்போது, நமக்கு நாமே `அமைதியாக இரு, பொறுமையுடன் இரு,’ எனத் தொடர்ந்து சொல்லி நம் மனத்தை பழக்க வேண்டும். இவை எல்லாம் தற்காலிகமாக நமது கோபத்தை தள்ளிப்போட உதவும்.

ஒன்று முதல் ஆறு வரை மனதில் எண்ணிக்கொண்டே மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, பின்னர், மனதில் ஒன்று முதல் எட்டு வரை எண்ணிக்கொண்டு மூச்சை மெதுவாக வெளியே விடலாம். இப்படி பத்து முறை செய்துப் பார்த்தால், கோபம் மட்டுமல்லாமல், பதற்றமும் பயமும் கூடக் குறைந்துவிடும்.

அதிகமாகக் கோபப்படுபவர்கள், வேகமாக நடைப்பயிற்சி செய்யலாம். இதனால் ரத்த அழுத்தம் கட்டுபாட்டுக்குள் வரும். அலுவல் ரீதியாகவோ, பெரியவர்களிடத்திலோ கோபம் வந்தால் அதை நம்மால் வெளிக்காட்ட முடியாது. அடக்கியும் வைக்கக் கூடாது. எனவே, அவர்களிடம் சொல்ல நினைக்கும் அனைத்து விஷயங்களையும் ஒரு தாளில் எழுதலாம். எழுதி முடித்ததும் மனம் லேசாக இருப்பதை உணர முடியும். பிறகு, அந்த தாளை கிழித்து எறிந்துவிடலாம். இதுபோல கைப்பேசியில் வாட்ஸ் அப்பிலும் பதிவிடலாம். பிறகு கோபம் அடங்கியதும் அதை நீக்கி விடலாம். தவறுதலாகக்கூட யாருக்கும் அனுப்பிவிடக் கூடாது.

இதையும் படியுங்கள்:
புதினா நீரின் 5 அற்புத நன்மைகள்!
Anger

விரும்பத்தகாத சூழலில் கோபமான மனநிலையை மாற்றுவதற்காக, மனதுக்குப் பிடித்தவர்களுடன் சிறிது நேரம் பேசலாம். நகைச்சுவை காணொளிகளைப் பார்க்கலாம். இவற்றால், மனதின் நிலை உடனடியாக மாறும்.

நம் கோபம் தணிந்ததும், அதற்கானக் காரணம் என்ன, யார் மீது தவறு என்பதை எல்லாம் நிதானமாக நினைத்துப் பார்க்க வேண்டும். நம் மீது குறையிருந்தால் திருத்திக்கொள்ள வேண்டும். பிறர் மீது தவறு இருந்தால், சில நாட்கள் கழித்து அவர்களிடம் நமது மனஉணர்வை தெளிவாக விளக்க வேண்டும். அவருடைய கோபத்தால் நாம் காயப்பட்டதையும்கூட பொறுமையாக எடுத்துச் சொல்லலாம். இதனால், உறவுகளிடையே சிக்கல் ஏற்படாது.

ஒரு நாளைக்கு பத்து நிமிடங்களாவது தியானம் செய்யலாம். இதனால். நம் மனத்தில் அமைதி பெருகும். உள்ளத்தில் தெளிவு உண்டாகும். காரணமில்லாமல் கோபம் வருவது, அந்த நேரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் முரட்டுத்தனமாகச் செயல்படுவது போன்ற அதீத உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் குறையும்.

துரித உணவுகள், தீய பழக்கங்கள் மோசமான உணர்வுகளையே ஏற்படுத்தும். பழச்சாறு, ஐஸ்க்ரீம் போன்ற சுவையான உணவுகள் மனம் அமைதி பெற உதவுபவை. கோப உணர்வு உள்ளவர்கள் நேரத்துக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். சிந்திப்பது, பேசுவது, செய்வது என எல்லாவற்றையும் நேர்மறைகோணங்களில் செய்து வந்தால், மகிழ்ச்சியான சூழல் நம்மைத் தழுவிக்கொள்ளும்.

உடலில் ரத்தத்தில் அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை, மனச்சோர்வு, மறதி நோய், ஆட்டிசம், தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வது போன்றவைகளால்கூட கோபம் வரலாம். இவர்கள் மருத்துவச் சிகிச்சை பெறுவது நல்லது. சினம் நம்மை மட்டுமல்லாது பிறரையும் கொல்லும் தன்மையது. எனவே, இனியாவது சினம் தவிர்த்து வாழப் பழகுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com