ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் எனப்படும் நம் நோய் எதிர்ப்பு செல்கள் நம் உடல் செல்களை அழிக்கும் செயலால் மையோ சைடிஸ் ரூமட்டாய்ட ஆர்த்ரைடீஸ் உட்பட பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்படுகின்றன. அதில் முதுகு தண்டுவடத்தில் அலர்ஜியை ஏற்படுத்தும் அன்கிலோசிங் ஸ்பாண்டைலிடிஸ் (Ankylosing Spondylitis - AS) என்ற பிரச்சனையும் ஒன்று. இது முதுகு தண்டுவடத்தில் வலியை ஏற்படுத்துவதோடு முதுகுத்தண்டை மூங்கில் போல விரைப்பாக்கி விடும்.
அன்கிலோசிங் ஸ்பாண்டைலிடிஸ் (Ankylosing Spondylitis - AS) பொதுவாக முப்பது வயதுக்கு உட்பட்டவர்களை அதிகம் பாதிக்கும்.
பெண்களை விட ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. கீழ் முதுகில் பிட்டத்தில் ஏற்படும் வலி இரவில் அதிகமாகவும் காலையில் எழுந்த பின் தீவிரமாகவும் இருக்கும். கீழ் முதுகு விரைப்பு 30 நிமிடங்கள் வரை நீடிக்கும். நடமாட ஆரம்பித்ததும் வலியும் விரைப்பு தன்மையும் குறையும்; முதுகு நெகிழ்வுத் தன்மை குறைந்து விடுவதால் இப்பிரச்னை இருப்பவர்கள் முன் பக்கமாக குனிந்து சாக்ஸ் காலனிகளை அணிவதற்கு கூட சிரமப்படுவார்கள்.
எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ ரத்தப் பரிசோதனை மூலம் மூங்கில் முதுகுத்தண்டு பிரச்னை உள்ளதா என்பதை உறுதி செய்யலாம். பாதிக்கப்பட்ட தண்டுவட மூட்டுகளுக்கு அதிகபட்ச இயக்கத்தை தந்து வலியை குறைப்பது தான் சிகிச்சையின் நோக்கம். ஸ்டிரைடு அல்லாத அழற்ச்சி இரைப்பு மருந்துகள் அதாவது வலி நிவாரணிகள் தரப்படும்
ஸ்டீராய்டு அல்லாத மருந்துகள் என்றாலும் இவற்றை நீண்ட காலத்திற்கு பயன்படுத்துவது செரிமான மண்டலம், சிறுநீரக கோளாறுகளை ஏற்படுத்தலாம். அன்கிலோசிங் ஸ்பாண்டைலிடிஸ் சிகிச்சையில் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட 'பயாலஜிக்கல்' புரதங்கள் தற்போது மிகச் சிறந்த நிவாரணியாக உள்ளன. இவை ஆட்டோ இம்யூன் கோளாறுகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கின்றன.
சிகிச்சையுடன் சேர்ந்து, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றங்களுடன் பிசியோதெரபி முக்கிய பங்கு வகிக்கிறது. வழக்கமான ஸ்ட்ரெச்சிங், தசையை வலுப்படுத்தும் பயிற்சிகள், சுவாச பயிற்சிகள், மூட்டுகள் முதுகெலும்பில் நிகழ்வு தன்மையை மேம்படுத்துதல், நீச்சல் நீர் சிகிச்சை இவை பயனுள்ளவை. நிற்கும்போதும் வேலை செய்யும் போதும் தூங்கும்போதும் உடல் சரியான பொசிஷனில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தலையணைகளை பயன்படுத்துவதை தவிர்த்து மல்லாக்கா அல்லது குப்புற படுத்து உறங்க வேண்டும். குழைவாக, மிருதுவாக இல்லாமல் உறுதியான மெத்தையில் படுப்பது முதுகெலும்பு வளைவதை தடுக்கும். இதற்கு என்று பிரத்தியேகமாக உணவு முறை எதுவும் இல்லை. உடல் எடையை சரியான அளவில் பராமரிக்க சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும்.
இந்த வகையில் நம் முதுகு தண்டை காப்பாற்றிக் கொள்ளலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)