
சளி பிடித்து சரியானாலும் இன்னும் எந்த வாசனையையும் உணர முடியவில்லையா? உணவை மணமறிந்து ரசித்து சாப்பிட முடியவில்லையா? நிச்சயம் இது அனோஸ்மியா பாதிப்பாகத்தான் இருக்கும். அனோஸ்மியா எனப்படும் வாசனை இழப்பு பாதிப்பு குறித்து இங்கு காண்போம்.
வாசனை என்பது எப்படி நம்மால் அறியமுடிகிறது? நமது மூக்கு மற்றும் தொண்டையின் மேல் பகுதியில் ஏற்பிகள் எனப்படும் வாசனைகளை கண்டறியும் சிறப்பு செல்கள் உள்ளன. இந்த ஏற்பிகளே நம்மைச் சூழும் ஒவ்வொரு வாசனையைப் பற்றியும் மூளைக்கு ஒரு செய்தியை அனுப்பி, அதன் பிறகு மூளை வாசனை என்ன என்பதைக் கண்டுபிடிக்கும்.
வாசனை இழப்புக்கான மருத்துவ சொல்தான் 'அனோஸ்மியா'. பகுதியளவு வாசனை உணர்வு இருந்தால், அது 'ஹைப்போஸ்மியா' என்றழைக்கப்படுகிறது. இந்த நிலை 'வாசனை குருட்டுத்தன்மை' என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் வாசனையைக் கண்டறியும் திறன் இழப்பு எனவும் வரையறுக்கப்படுகிறது.
அனோஸ்மியாவுக்கான காரணங்களில் வயது மூப்பு , பிறவிக்குறைபாடு மற்றும் தொற்றுகளும் அடங்கும். குறிப்பாக சளி, காய்ச்சல், COVID-19 போன்ற தொற்றுகளும், தலை மற்றும் முகத்தில் ஏற்படும் காயங்கள், சில இரசாயனங்கள் மற்றும் மருந்துகளாலும் அனோஸ்மியா ஏற்படலாம். இதில் கோகோயின் போன்ற சில சட்டவிரோத மருந்துகளும் அடங்கும். மேலும் மூளைக் கட்டிகள், மூக்கில் பாலிப்கள், வைட்டமின் குறைபாடு, ஒவ்வாமை நாசியழற்சி அல்லது நாள்பட்ட சைனசிடிஸ், பார்கின்சன் அல்லது அல்சைமர் உள்ளிட்ட நோய்களாலும் ஏற்படலாம்.
சளி பிடித்தால் வாசனை உணர்வு பொதுவாக 1 அல்லது 2 வாரங்களுக்குள் திரும்பும். இந்த நேரத்திற்குப் பிறகும் வாசனை உணர்வு திரும்பவில்லை அல்லது காரணமின்றி நீண்ட காலமாக வாசனை உணர்வில் மாற்றத்தைக் கண்டால், உங்கள் மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.
அவர் காது, மூக்கு மற்றும் தொண்டை (ENT) நிபுணரிடம் பரிந்துரைக்கலாம். மூக்கு மற்றும் வாயைப் பரிசோதிப்பதன் மூலமும், பிற சோதனைகள் மூலமாகவும் அனோஸ்மியாவைக் கண்டறியலாம். எண்டோஸ்கோபிக் பரிசோதனையுடன் அறிகுறிகள் அதிக நரம்பியல் சார்ந்ததாக இருந்தால், மூளை தொடர்பான பிரச்சினைகளை மதிப்பிடுவதற்கு நரம்பியல் நிபுணரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுவீர்கள்.
இந்த பாதிப்பு நமது அன்றாட நுகர்வு அனுபவங்களில் மாற்றங்களை தருவதுடன் சில ஆபத்துகளை உணர முடியாமல் போகும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தும். உதாரணமாக சமையல் கேஸ் லீக்காவது, தீப்பிடிப்பது, எலக்ட்ரிக் வயர் எரிவது போன்ற ஆபத்தான வாசனைகளை அறியாமல் விபத்துகள் நேரலாம்.
உணவு வகையில் கெட்டுப்போன ஒன்றை சாப்பிட்டு பாதிப்படையலாம். ஆகவே கவனம் தேவை. அலட்சியப்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை எடுப்பது நன்மை தரும்.