Stress Relief: இளமைப் பொலிவுக்கான ரகசியம்: 5 சூப்பர் Anti-aging ஜூஸ்கள்!

Anti-aging drinks
Anti-aging drinks
Published on

நம் உடலில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச் சத்துக்களின் குறைபாடு ஏற்பட்டு, மன அழுத்தமும் உண்டாகும்போது, கண்களில் சோர்வு, ஃபைன் லைன்ஸ் மற்றும் சருமத்தில் தளர்ச்சி உண்டாவது சகஜம். நாம் தினசரி உட்கொள்ளும் உணவில் உள்ள சத்துக்களே செல்கள் சிதைவடையாமலும், கொலாஜன் உற்பத்தி குறையாமலும் பாதுகாத்து, சருமத்தை வலுவானதாக வைத்துப் பராமரிக்க உதவுகின்றன. இதற்காக, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இயற்கை முறையிலான ஆன்டி இன்ஃபிளமேட்டரி கூட்டுப்பொருள்கள் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வைட்டமின்கள் அடங்கிய உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இவை அனைத்தும் அடங்கிய ஐந்து வகை பானங்கள் (Anti-aging drinks) எவை என்பதை இப்போது பார்க்கலாம்.

1. மாதுளை-புதினா ஜூஸ்:

ஒரு கப் மாதுளை முத்துக்களை மிக்ஸியில் அடித்து வடிகட்டி ஜுஸை எடுத்துக் கொள்ளவும். அதில் எட்டு புதினா இலைகளை கிள்ளிப் போடவும். அரை டீஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் ஒரு கப் குளிர்ந்த நீரும் அதனுடன் சேர்த்து, ஐந்து நிமிடம் வைத்திருந்து, விருப்பப்பட்டால் சிறிது தேன் சேர்த்துக் கலந்து குடிக்கவும். மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் C ஆகியவை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து சரும செல்களை பாதுகாக்க உதவுகின்றன. புதினா இலைகள் ஜீரண உறுப்புகளுக்கு குளிர்ச்சி தந்து, ஊட்டச்சத்துக்கள் சிறந்த முறையில் உடலுக்குள் உறிஞ்சப்பட உதவுகின்றன.

2. மஞ்சள்-இஞ்சி டானிக்:

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் துருவிய இஞ்சி, ஒரு சிட்டிகை கருப்பு மிளகுத் தூள் மூன்றையும் வெது வெதுப்பான தண்ணீரில் போட்டு நன்கு கலக்கி, அதனுடன் அரை டீஸ்பூன் பொடித்த வெல்லம் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். மஞ்சளில் உள்ள குர்குமின் மற்றும் இஞ்சியிலுள்ள ஜிஞ்சர் ஆகிய இரண்டும் உடலின் வீக்கங்களைக் குறைத்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, முன் கூட்டியே முதுமைத் தோற்றம் அடைவதைத் தடுக்க உதவி புரிகின்றன. மிளகு, குர்குமின் உடலுக்குள் உறிஞ்சப்பட உதவும்.

3. கேரட்-ஆரஞ்சு ஜூஸ்:

இரண்டு மீடியம் சைஸ் காரட், ஒரு ஆரஞ்சு பழத்தின் சுளைகள் மற்றும் ஒரு சிறு துண்டு இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் அடித்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டிக் கொள்ளவும். அதனுடன் அரை டீஸ்பூன் சியா விதைகள் சேர்த்து ஐந்து நிமிடம் வைத்திருந்து, குடித்துவிடவும். கேரட்டிலுள்ள பீட்டா கரோட்டீன் சூரிய கதிர்களால் சருமத்திற்கு உண்டாகும் பாதிப்பைத் தடுத்து முதுமைத் தோற்றம் பெறுவதை தள்ளிப் போகச் செய்யும். ஆரஞ்சில் உள்ள வைட்டமின் C கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கவும், சியா விதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் தரவும் உதவுகின்றன.

4. ஆலூ வேரா-வெள்ளரி கூலர்:

இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலூ வேரா ஜெல், துண்டுகளாக்கிய அரை வெள்ளரிக்காய், அரை டீஸ்பூன் லெமன் ஜூஸ் ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை வறுத்த சீரகத் தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸ் ஆக்கி உடனடியாக குடித்து விடவும். ஆலூ வேரா ஜெல்லில் உள்ள வைட்டமின் A, C & E ஆகிய மூன்றும் சிதைவுற்ற சரும செல்களை சீராக்க உதவுகின்றன.

வெள்ளரி குளிர்ச்சியும், நீரேற்றமும் தரும். மேலும் உலர்ந்தும், உப்பலான தோற்றமும் கொண்ட சருமத்தை நேராக்கச் செய்யும்.

இதையும் படியுங்கள்:
கவனமாக இருங்கள்! டீடாக்ஸ் பானங்கள் (Detox Drinks) செய்யும் நன்மைகளும், அதே சமயம் பக்க விளைவுகளும்!
Anti-aging drinks

5. கிரீன் டீ-ஆப்பிள் ஆன்டி ஆக்ஸிடன்ட்:

ஒரு கப் சூடான தண்ணீரில் க்ரீன் டீ பேக் (bag) ஒன்று, அரை ஆப்பிளை மெலிதாக வெட்டிய ஸ்லைஸ்கள், ஒரு சிறிய துண்டு பட்டை ஆகியவை சேர்த்து ஐந்து நிமிடம் வைத்திருக்கவும். பின் டீ பேக்கை பிழிந்து எடுத்துவிட்டு ஒரு டீஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து குடித்து விடவும்.

ஜூஸில் உள்ள கேட்டச்சின்ஸ், வைட்டமின் C மற்றும் பாலிபினால்ஸ் போன்றவை சருமத்தை சுத்தப்படுத்தி எலாஸ்ட்டிசிட்டியை அதிகரிக்க உதவி புரிகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com