
Detox drinks (டிடாக்ஸ் பானங்கள்):
சமீப காலங்களில் தங்கள் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே பெருகி வருகிறது. காரணம் முறையற்ற உணவு பழக்கங்கள், சத்தற்ற பானங்கள் என வாழ்க்கை முறை மாறி வருவதே.
இந்த நிலையில் டயட் என்ற பெயரில் நிறைய வழிமுறைகள் உடலில் நலத்துக்காக வரையறுக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் டீடாக்ஸ் எனும் நச்சு நீக்கும் முறையும் ஒன்று. டீடாக்ஸ் முறையில் சத்துள்ள பானங்கள் அதீத கவனம் பெறுகின்றன. அவை குறித்து இங்கு காண்போம்.
What are detox drinks? (டிடாக்ஸ் பானங்கள் என்றால் என்ன?)
சமீபத்தில் பெரும்பாலோர் கவனத்தை ஈர்க்கும் டிடாக்ஸ் பானங்கள் கழிவுகள் அடங்கிய உடலை சுத்தப்படுத்தவும், ஒட்டுமொத்த ஆரோக்கியமான நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும் வழியாக பிரபலமடைந்துள்ளது. இந்த பானங்கள் பொதுவாக டீடாக்ஸ் எனப்படும் நச்சு நீக்கும் பண்புகளுக்கு அறியப்பட்ட இயற்கை பொருட்களின் மூலங்கள் அடங்கிய கலவையை உள்ளடக்கியதாக இருக்கும்.
உதாரணமாக நச்சுப் பண்புகளுக்கு எதிரான இயற்கை பொருட்களான எலுமிச்சை, வெள்ளரி, புதினா மற்றும் இஞ்சி போன்ற பொருட்கள் டீடாக்ஸ் பானங்களில் காணப்படுகின்றன. அவை நச்சுகளை வெளியேற்றவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடலின் இயற்கையான டீடாக்ஸ் செயல்முறைகளை ஆதரிக்கவும் உதவுவதாக நம்பப்படுகிறது.
Benefits of Detox Drinks for your health (உங்கள் ஆரோக்கியத்திற்கு டிடாக்ஸ் பானங்களின் நன்மைகள்)
டீடாக்ஸ் பானங்கள் நல்லதா எனும் சந்தேகம் நிறையவே உண்டு. உண்மையில் பொதுவாகவே நச்சு நீக்க பானங்களின் செயல்திறன் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு குறித்து விவாதத்திற்குரிய விஷயமாகவே உள்ளது. பழங்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைகள் போன்ற இயற்கை பொருட்களைக் கொண்ட பானங்கள் உடலின் இயற்கையான நச்சு நீக்க செயல்முறைகளை ஆதரிக்கும் என்றும் தேவையில்லாமல் நச்சுகளை அகற்ற எடுக்கப்படும் சிறப்பு பானங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் உள்ளார்ந்த திறனை பாதிக்கும் வாய்ப்பு உண்டு என்றும் இருவகை கருத்துக்கள் உண்டு.
எனினும் டீடாக்ஸ் பானங்கள் பெரும்பாலும் குறுகிய கால பயன்பாட்டுக்கு ஏற்றவை என்பதால் அவைகளால் நன்மைகள் உண்டு என்ற கருத்தை பலர் ஏற்றுக்கொள்கின்றனர். அவை நீரேற்றம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்க முடியும் என்றாலும் அவைகளால் உடனடி தீர்வு கிடைக்கும் என்பதை விட சமச்சீர் உணவு மற்றும் வழக்கமான உடல் செயல்பாடு உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் கூடுதலாக வழங்கப்படுவது சிறந்தது என்று கருதப்படுகிறது.
டீடாக்ஸ் மூலிகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் கூடிய இயற்கை நீர் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஊட்டச்சத்து, நீரேற்றம் மற்றும் சுத்தப்படுத்தப்பட்ட உணர்வை நமக்கு வழங்கும் என்பது டீடாக்ஸ் பானங்களின் நன்மை எனலாம்.
எளிதில் செய்யக்கூடிய டிடாக்ஸ் பான குறிப்புகள் (Easy to make Detox Drinks recipes)
கிரீன் டீ - கிரீன் டீயில் அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் இருப்பதால், இது மிகவும் பயனுள்ள நச்சு நீக்க பானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் நிறைந்துள்ள பாலிபினால்களால் உடலின் இயற்கையான சுத்திகரிப்பு செயல்முறைகளை ஆதரிக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகிறது.
எளிதான டீடாக்ஸ் பானங்கள் தயாரிக்க இயற்கை பொருட்களான எலுமிச்சை, புதினா, வெள்ளரி, இஞ்சி, ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் போன்றவற்றை வெட்டி அல்லது ஜூஸாக்கி தண்ணீரில் கலந்து பருகலாம். இந்த எளிய பானங்கள் உடலை சுத்தப்படுத்தவும், புத்துணர்ச்சி அளிக்கவும், சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
தண்ணீர் நிரம்பிய ஜாடியில் நறுக்கிய எலுமிச்சை சிறிது புதினா இலைகள் கலந்து சில மணி நேரங்கள் ப்ரிட்ஜ்ல் வைத்து பயன்படுத்தலாம்.
ஆப்பிள், பீட்ரூட், கேரட் (ABC) டிடாக்ஸ் பானம் மிக சிறந்தது மற்றும் தயாரிக்க எளிது. ஆப்பிள் (1) பீட்ரூட் (1/2) கேரட் (1/2) சிறிது இஞ்சி (விரும்பினால்) எடுத்து சுத்தம் செய்து மிக்சியில் இட்டு நைசான ஜூஸாக்கவும். இதை வடிகட்டி அருந்தலாம்.
இஞ்சி மற்றும் வெள்ளரித்துண்டுகளை தண்ணீரில் சேர்த்து சில மணி நேரம் ஊறவிடவும். பின் இதை டீடாக்ஸ் பானமாக அருந்தலாம்.
இந்த பானங்கள் உடலின் கழிவுகளை வெளியேற்ற உதவும், உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும், சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும், எடை குறைப்புக்கு உதவும், செரிமானத்தை மேம்படுத்தும் என்பது சிறப்பு.
அதே சமயம் அதிகப்படியான காஃபின் நிறைந்த டீடாக்ஸ் பானங்கள் நடுக்கம், இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் தூக்க முறைகளை சீர்குலைக்கும் என்பதால் கவனம் தேவை.
குறிப்பாக காஃபினுக்கு எதிரான ஒவ்வாமை உள்ளவர்கள் மட்டுமல்ல உடல்நல பாதிப்பு மற்றும் வேறு வகையான ஒவ்வாமை உள்ளவர்கள் இது போன்ற டயட் பானங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)