

ஆன்டிபயாடிக் (Antibiotics) உயிர்களை காப்பாற்றும் மருந்துகள் என்றாலும், அவற்றின் அதிகப்படியான பயன்பாடு ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு என்கிற மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலை உருவாக்குகிறது. ஆன்டிபயாடிக்கின் தவறான பயன்பாடு உடனடி பக்கவிளைவுகள் மட்டுமின்றி, நீண்ட காலத்தில் குடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, புற்றுநோய் உள்ளிட்ட பல தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதே நேரத்தில், இவ்வகை மருந்துகள் குடலின் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை அழிப்பதன் மூலம் உடல் இயக்கத்திற்கு உதவும் இயற்கையான சமநிலையையும் பாதிக்கின்றன.
ஆனால், பலர் சளி, காய்ச்சல் போன்ற வைரஸ் நோய்களுக்கும், ஆன்டிபயாடிக் மருந்துகளை தவறாக பயன்படுத்துகின்றனர். இது எந்த நன்மையும் அளிக்காததோடு, குடல் நுண்ணுயிர்களுக்குச் சேதத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல், மருத்துவர் பரிந்துரைத்த ஆன்டிபயாடிக் மருந்தை நோய் குணமாகாமல் பாதியிலேயே நிறுத்துவது, குடல் சமநிலையை மேலும் பாதித்து ஆன்டிபயாடிக் எதிர்ப்பை தூண்டும் அபாயகரமான பழக்கமாகும்.
தகுதிவாய்ந்த மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே ஆன்டிபயாடிக் (Antibiotics) மருந்துகளை பயன்படுத்த வேண்டும். சாதாரண வைரஸ் தொற்றுகளுக்கு ஆன்டிபயாடிக் பயன்படுத்தகூடாது.
மருத்துவர் அறிவுரைப்படி, மருந்துகளை முழுமையாக எடுத்து முடிக்க வேண்டும். மீதமுள்ள மருந்துகளை பயன்படுத்துதல் மற்றும் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது குடல் நுண்ணுயிர் சமநிலையை மீட்டெடுக்க, நார்ச்சத்து நிறைந்த உணவுகள், புரோபயாடிக் உணவுகள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடித்தல் அவசியமாகும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
'ஆன்டிபயாட்டிக்' மாத்திரைகளை பொதுவாக ஒரு நாளைக்கு முறையான இடைவெளியில், ஒன்று முதல் மூன்று முறைகள் சாப்பிட வேண்டும். இதில் ஏதேனும் ஒரு வேளை சாப்பிட மறந்து விட்டால், அடுத்த வேளை சாப்பிடும் போது இரண்டாக சேர்த்து சாப்பிடக் கூடாது. இதனால் பக்க விளைவுகள் உண்டாகும். எனவே, மாத்திரை சாப்பிட நினைவு வந்தவுடன் சாப்பிடலாம். அடுத்த வேளை மாத்திரை, சாப்பிட வேண்டிய நேரமாக இருந்தால் அந்த வேளைக்குரியதை மட்டுமே சாப்பிட வேண்டும். அடிக்கடி இவ்வாறு சாப்பிடாமல் இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
ஆன்டிபயாட்டிக் (Antibiotics) மருந்துகளின் அதிக பயன்பாடு பார்கின்சன் நோய் அபாயத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் தென் கொரியாவின் சியோல் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். 121 நாட்களுக்கு மேல் ஆன்டிபயாட்டிக் மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு பார்கின்சன் நோய் ஆபத்து 30 சதவீதம் அதிகரிக்கிறது என்கிறார்கள்.
பொதுவாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளால் மூளை குழப்பமடையும் அபாயம் அதிகரிக்கிறது என்கிறார்கள் ஹார்வார்டு மெடிக்கல் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர்கள். குறிப்பாக ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளில் உள்ள 'தெலினியம்' எனும் கெமிக்கல்கள் இந்த வேலையை செய்வதாக கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக டாக்டர்களிடம் ஒரு நோய்க்காக சென்றால் 3 முதல் 5 நாட்கள், சில நேரங்களில் அதற்கும் அதிகமான நாட்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இடையில் நோயின் தீவிரம் குறைந்தாலும் முழு அளவில் குறிப்பிட்ட நாட்கள் வரை ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், அப்படி ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இடையில் நோயின் தீவிரம் குறைந்தால் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை நிறுத்துவது உடல் நலத்திற்கு நல்லது என்பதை ஆய்வு முலம் நிரூபித்துள்ளனர் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் ஆய்வாளர்கள்.
குழந்தை பருவத்தில் அதிகப்படியாக எடுத்துக் கொள்ளும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளால் குழந்தைகள் பிற்காலத்தில் அதிக எடை கூடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். குழந்தை பருவத்தில் 7 ம், அதற்கு மேற்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொண்ட 15 வயது குழந்தைகளை ஆய்வு செய்ததில் அவர்களுக்கு 3 பவுண்ட் எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள். அதே வேளையில் அவர்களுக்கு பிற்காலத்தில் டைப் 1 சர்க்கரை நோயாளிகள் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)