
உடல் சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக அமைவது மலச்சிக்கல். மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே சரிசெய்யாமல்விட்டால் அது பல்வேறு நோய்களுக்கு வாசலாக அமைந்துவிடும். மாறிவிட்ட உணவுப் பழக்கவழக்கங்களாலும், அவசர வாழ்க்கை முறையாலும்தான் மலச்சிக்கல் உண்டாகிறது. அந்த காலத்தில் இருந்து இன்று வரை மலம் சரியாகக் கழிக்க வேண்டும் என்றால் பெரும்பாலானோர் பரிந்துரைப்பது வாழைப்பழத்தைத்தான். இன்றும் பல வீடுகளில் இரவு உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.
வாழைப்பழத்தில் பீனால்கள், ஃபிளாவனாய்டுகள், பைட்டோ கெமிக்கல்கள், பொட்டாசியம், வைட்டமின்கள், நார்ச்சத்து போன்றவை உள்ளன. காலை உணவுடன் வாழைப்பழத்தை சாப்பிட்டால், பல மணிநேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
வாழைப்பழம் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்ப்பதாக பலராலும் ஏற்றுகொள்ளப்பட்டாலும் சில சமயங்களில் விவாதத்தையும் தூண்டுகிறது. ஒரு சிலர் மலச்சிக்கல் பிரச்சனை தீர உதவுவதாக கூறுகிறார்கள், மற்றவர்கள் வாழைப்பழம் பிரச்சினையை மோசமாக்கும் என்று நம்புகிறார்.
1. வாழைப்பழத்தில் உள்ள ஆன்டாசிட்கள், வயிற்றுக் கோளாறுகளை குணமாக்கும். இது செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், மலச்சிக்கல் நிவாரணத்திற்கு உதவுகிறது.
2. நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் குடலின் உட்புறத்தை பாதுகாக்கிறது. மேலும் இதிலுள்ள நார்ச்சத்து பெருங்குடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுவதுடன் மலச்சிக்கலையும் போக்குகிறது.
3. வாழைப்பழம் மட்டும் மலச்சிக்கலை குணப்படுத்தாது. அதே சமயம் பிஸ்கட் மற்றும் ரொட்டி போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை நாள்பட்ட மலச்சிக்கலை மோசமாக்கும்.
4. நன்கு பழுத்த வாழைப்பழம், சிறுகுடலில் மைக்ரோவில்லி சிறப்பாக செயல்பட உதவுகிறது. மஞ்சள் மற்றும் பழுத்த வாழைப்பழங்கள் செரிமானத்திற்கு உதவுகின்றன மற்றும் மலச்சிக்கலை நீக்குகின்றன.
5. பழுக்காத பச்சை வாழைப்பழங்களில் மலச்சிக்கலை ஏற்படுத்தும் அல்லது மோசமடையச் செய்யும் எதிர்ப்பு சக்தி கொண்ட மாவுச்சத்து அதிகளவு உள்ளது. அதனால்தான் சில சமயங்களில் வயிற்றுப்போக்குக்கு பழுக்காத வாழைப்பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
6. வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், இதய வால்வில் பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது.
7. பச்சை வாழைப்பழத்தில் அதிக அளவு ஸ்டார்ச் உள்ளது. எனவே, இவற்றை அதிகமாக உட்கொள்வதால் மலச்சிக்கல், வயிற்றுவலி மற்றும் வாயு போன்ற செரிமான பிரச்னைகள் ஏற்படும்.
8. வாழைப்பழத்தில் பூவம்பழம், ரஸ்தாளி, மலை வாழைப்பழம், கற்பூரவாழை, செவ்வாழை போன்ற நார்ச்சத்து அதிகமாக உள்ள பழங்களைத்தான் சாப்பிட வேண்டும். அவைதான் மலத்தை இளக்கி சீராகப் போக வைக்கும். வாழைப்பழத்தில் மிகவும் சிறந்தது ஏழக்கி வாழைப்பழம் அதற்கு அடுத்தது நேந்திரம் பழம்!
9. பழுத்த வாழைப்பழங்களில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க உதவும்.
10. நாட்டு வாழைப்பழங்களில் மலச்சிக்கலை தீர்க்கும் நார்ச்சத்துக்கள் அதிகளவு உள்ளது. மேலும் நாட்டு வாழைப்பழத்திலுள்ள விதைகள் அதிக நீர்ச்சத்தை உடலுக்கு அளிக்கின்றன.