
சிறுநீரகக் கற்கள் என்பவை சிறுநீரகம் அல்லது சிறுநீரகப் பாதையில் உருவாகும் படிவுகளாகும். இவை சிறிய மணல் தூள் போலவோ அல்லது பெரிய கற்கள் வடிவிலோ இருக்கலாம். சிறுநீரில் உள்ள கனிமங்கள், உப்புகள் ஒரு இடத்தில் படிந்து இவை உருவாகின்றன. இந்த கற்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் மரபணுவின் பங்கு உள்ளதா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றாகும். இந்தப் பதிவில் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கு மரபணுக்கள் காரணமா என்பதைப் பார்க்கலாம்.
சிறுநீரக கற்கள் ஏற்படுவதால் உண்டாகும் வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அது உண்மையிலேயே வேதனை தரும் ஒன்றாகும். சிறுநீரில் கால்சியம், யூரிக் அமிலம், ஆக்சிலேட் போன்ற கனிமங்கள் அதிகமாக இருப்பதால் கற்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் போனால், சிறுநீர் படிவுகளாக மாறி கற்களை உண்டாக்கும். சில குறிப்பிட்ட உணவுகளில் ஆக்ஸிலேட் அதிகம் இருக்கும். இத்தகைய உணவுகளை நீங்கள் தொடர்ச்சியாக சாப்பிடுவது சிறுநீரகக் கற்களுக்கு வழிவகுக்கும். பாரா தைராய்டு சுரப்பி கோளாறு, குடல் அலர்ஜி நோய் போன்ற சில பிரச்சனைகள் காரணமாகவும் சிறுநீரகக் கற்கள் ஏற்படலாம்.
மரபணுக்களின் பங்கு: சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதில் மரபணுக்களின் பங்கு இருக்கிறதா எனக் கேட்டால், ஆம் என்பதே உண்மை. குடும்பத்தில் சிறுநீரகக் கற்கள் இருக்கும் நபர்கள் இருந்தால், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் இது ஏற்படும் வாய்ப்பு அதிகம். சில மரபணு மாற்றங்கள் சிறுநீரில் கனிமங்களின் அடர்த்தியை அதிகரித்து, சிறுநீரகக் கற்களை ஏற்படுத்தும். பல மரபணுக்கள் கால்சியம் கற்கள் உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மரபணுக்கள் சிறுநீரில் கால்சியம் மற்றும் ஆக்சிலேட் அளவைக் கட்டுப்படுத்தி கற்களாக மாற்றிவிடும்.
மரபணுக்களுடன் சேர்த்து சுற்றுச்சூழல் காரணிகளும் கற்கள் உண்டாவதில் இணைந்து செயல்படுகின்றன. ஒரு நபருக்கு மரபணு ரீதியான பாதிப்பு இருந்தாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களை அவர் பின்பற்றுவதன் மூலம் சிறுநீரகக் கற்கள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கலாம்.
அறிகுறிகள்: உங்களுக்கு சிறுநீரகக் கற்கள் இருக்கிறது என்றால், முதுகின் பின்புறம் மற்றும் அடி வயிற்றில் வலி உண்டாகும். சில சமயங்களில் சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, கடுமையான வாந்தி, குமட்டல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவையும் ஏற்படும். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.
சிறுநீரகக் கற்களுக்கான சிகிச்சை கற்களின் அளவு, அது இருக்கும் இடம், எதனால் ஏற்பட்டது என்பதைப் பொறுத்து மாறுபடலாம். சிலருக்கு வலி நிவாரணிகள், கற்களை கரைக்கும் மருந்துகள் போன்றவற்றாலே சரியாகிவிடும். கற்கள் பெரிதாக இருந்தால் லேசர் சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவை செய்யப்படலாம். எனவே, கற்கள் உண்டான பிறகு அந்த பிரச்சனையை எதிர்கொள்வதற்கு பதிலாக, முன்கூட்டியே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி கற்கள் உண்டாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.