ஏலக்காயை பல நூற்றாண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது வாசனைப் பொருளாக மட்டுமில்லாமல், இதில் எண்ணற்ற மருத்துவ குணங்களும் அடங்கியிருக்கின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த ஏலக்காயை மென்று சாப்பிடுவதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
ஏலக்காய் சித்த மருத்துவத்தில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஏலக்காயில் புரதம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
1. ‘பசியே இல்லை, சாப்பிடப் பிடிக்கவில்லை’ என்று சொல்பவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும். ஜீரண உறுப்புகள் பலம் பெறும். ஜீரண உறுப்புகளை துரிதப்படுத்தி ஜீரண நீரை சுரக்கச் செய்யும். இதனால், நன்றாகப் பசியெடுக்கும். வயிறு உப்புசம், வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் போன்ற பிரச்னைகள் குணமாகும்.
2. அதிக மார்பு சளி காரணமாக மூச்சு விடுவதில் சிரமம், அதிக இருமல் போன்ற பிரச்னையால் அவதிப்படுபவர்கள் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வர, நெஞ்சில் உள்ள சளி கரைந்து வெளியேறும். நெஞ்சு சளியை உருவாக்கக்கூடிய பாக்டீரியா, வைரஸை எதிர்த்துப் போராடி அழிக்கக்கூடியது ஏலக்காயாகும்.
3. ஜீரண உறுப்புகளில் உள்ள கோளாறு காரணமாகத்தான் வாய் துர்நாற்றம் ஏற்படும். ஏலக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் நீங்கி வாய்க்கு நல்ல மணம் கொடுக்கும்.
4. உடலில் அடிக்கடி நோய்கள் ஏற்படுவதற்குக் காரணம், நம் உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்கழிவுகள்தான். தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வர, உடலில் உள்ள கழிவுகள் நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறும்.
5. ஏலக்காய் சாப்பிடுவது வாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும். வாய் புண், பல் சொத்தை, பல் வலி, ஈறுகளில் வீக்கம் போன்றவை இருப்போர் ஒரு ஏலக்காயை உமிழ்நீரோடு சேர்த்து சாப்பிட்டு வர அனைத்து பிரச்னைகளும் நீங்கும்.
6. வாகனங்களில் போகும்போதோ அல்லது வெயிலில் செல்லும் போதோ நிறைய பேருக்கு வாந்தி, தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. அவர்கள் வாயில் ஒரு ஏலக்காயை போட்டு மென்றுக்கொண்டே செல்வதால் வாந்தி, தலைச்சுற்றல் பிரச்னைகள் ஏற்படாமல் குணமாக்கும்.
7. ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சு விடுவதில் அதிகமாக சிரமம் ஏற்படும். இதுபோன்ற பிரச்னையால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வர சுவாசம் சீராகும் மற்றும் சுவாச சம்பந்தமான பிரச்னைகளும் குணமாகும். இத்தனை நன்மைகளைக் கொண்ட ஏலக்காயை தினமும் எடுத்துக்கொண்டு பயன் பெறுங்கள்.