பொதுவாகவே, கோவைக்காயை யாரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. ஏனெனில், அதன் சுவை அந்த அளவுக்கு நன்றாக இருக்காது என்பதால், பெரும்பாலானவர்கள் இந்த அற்புத உணவை தவிர்க்கிறார்கள். ஆனால், வாரம் இருமுறை கோவைக்காய் சாப்பிட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
கோவைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
கோவைக்காய்க்கு பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கி இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் தன்மை உள்ளது. இதனால் வயிற்றுப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. எனவே, கோவைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும்.
கோவைக்காயில் இருக்கும் பொட்டாசியம் சத்து இதய நலத்திற்கு தேவையான ஒன்றாகும். இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்து இதய பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது.
கோவைப்பழம் அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது. ஆனால், இரத்த சோகை, பித்தம், மூச்சு இரைத்தல், வாந்தி, மயக்கம் போன்ற பிரச்னைகளை குணப்படுத்தும். ஏதாவது விலங்கு கடியால் ஏற்பட்ட காயங்கள் மீது கோவை இலையை அரைத்துத் தடவினால் அந்த புண் விரைவில் ஆறும்.
உடலுக்குத் தேவையான பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய தாதுக்கள் கோவைக்காயில் அதிக அளவில் உள்ளன. இவை அனைத்தும் எலும்பின் வளர்ச்சி நரம்புகளின் சீரான இயக்கம் மற்றும் இதய உறுதி போன்றவற்றிற்கு உதவுகின்றன.
கோவைக்காய் இலை மற்றும் தண்டு, வலியைக் குறைக்கும் தன்மை படைத்தது. இதன் இலை மற்றும் தண்டுகளை கசாயம் வைத்து குடித்தால், சுவாசக் குழாய் பிரச்னைகள், மார்புச்சளி போன்றவை நீங்கும். கோவைக்காய் இலைகளை அரைத்து வெண்ணெயுடன் கலந்து புண் மற்றும் சரும நோய்கள் மேல் தடவினால் விரைவில் குணமாகும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி கோவைக்காய் சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்பட்டு, சிறுநீர் வழியாக அதிக சர்க்கரை சத்துக்கள் வெளியேறாமல் தடுக்கும். எனவே, முடிந்தவரை வாரம் இருமுறை கோவைக்காயை சாப்பிட முயலுங்கள்.