
உடல் பலவீனம் மற்றும் சோர்வு இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் ஏற்படுகிறது. வழக்கமாக கடுமையாக வேலை செய்த பின்னர், சோர்வு ஏற்படுதல் சகஜமான ஒன்று. அதே நேரம் எந்த வேலையும் செய்யும் முன்னரே உடல் மிகவும் பலவீனமாகவும் எப்போதும் சோர்வாகவும் காணப்பட்டால் அதற்கு பின்னால் உள்ள காரணிகளை ஆராய வேண்டும். உடல் பலவீன பிரச்சினை, நாளடைவில் உளவியல் பாதிப்பாக வேறு சில நோய்களையும் கொண்டு வந்து விடுகிறது. ஒருவர் எப்போதும் சோர்வாகவே காணப்பட்டால், அவரது தன்னம்பிக்கை பாதிக்கப்பட்டு மனரீதியான அழுத்தத்திற்கு ஆளாகிறார்.
உடல் பலவீனத்திற்கும் சோர்விற்கும் முக்கிய காரணம் அவர்கள் உண்ணும் உணவில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருப்பது தான். சில நேரங்களில் ஊட்டச்சத்து மிகுந்த உணவை உண்டாலும் சோர்வு மற்றும் பலவீனம் சிலருக்கு காணப்படும். அதற்கு உடல் ரீதியான சில பிரச்சனைகளை காரணமாக கொள்ளலாம். தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவை ஹார்மோன் கோளாறுகளை ஏற்படுத்தி உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை கிடைக்க விடாமல் செய்கிறது. இதனால் உடலின் சக்தி குறைத்து பலவீனம் ஆகிறது.
உணவில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி குறைபாட்டால் சோர்வு ஏற்படுகிறது. சர்க்கரை நோய், இரைப்ப புண், குடல் புண் ஆகியவை இருந்தாலும் உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவது பாதிக்கப்படும். ஹார்மோன் சமணிலையற்ற தன்மைகளும் உடல் பலவீனம் மற்றும் சோர்வை ஏற்படுத்தும்.
தொடர்ச்சியான உடல் பலவீனம் மற்றும் சோர்வு ஒருவரின் மனநிலையை கடுமையாக பாதிக்கும். இதனால் உடல் நலக் கோளாறுகளும் ஏற்படும். சில அதிக சக்தி உணவுகளை சாப்பிட்டாலே பலவீனம் மற்றும் சோர்வு உங்களை விட்டு அகன்று விடும். இந்த 6 உணவுகள் உங்களுக்கு அதிக சக்தியை கொடுத்து உடல் பலவீனம் மற்றும் சோர்வில் இருந்து மீட்டு, உங்களை உறுதியாக வைக்க உதவும்.
1. வாழைப்பழம்
அதிக இனிப்பு கொண்ட இந்த பழம் உடனடியாக உடலுக்கு ஆற்றலை தர வல்லது. இதில் கார்போஹைட்ரேட்டுகள், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. இவை உடலுக்கு தேவையான சக்தியை தருகின்றன.
2. பேரீட்சை
அதிக இனிப்பு கொண்ட பேரீட்சையும் உடலுக்கு உடனடி ஆற்றலை தரக் கூடியவை. இதில் இரும்புச்சத்து மற்றும் ஏராளமான விட்டமின்கள் காணப்படுகின்றன. பேரீட்சை இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மையுடையது. உடல் ஆற்றலுக்கு உடனடி பலன் தரக் கூடியது.
3. பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் நிறைந்துள்ளது. இது உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது. வயிற்றுப் புண் மற்றும் இரைப்பை புண்ணையும் ஆற்றும் சக்தி இதில் உள்ளது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடல் முழுக்க சீராக இருக்க உதவுகிறது. அடிக்கடி உணவில் பீட்ரூட்டை சேர்ப்பதால் சோர்வின்றி இருக்கலாம்.
4. நிலக்கடலை
அதிக புரதச்சத்து நிறைந்த விலை மலிவான உணவுப் பொருள் இது. இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து ஆகியவை உடலுக்கு ஆற்றலை அதிகரிக்கின்றது. நீண்ட நேரம் சோர்வு இல்லாமல் இருக்க வைக்கிறது.
5. பச்சைக் கீரை
பச்சைக் கீரையில் இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது இரத்த சோகையால் ஏற்படும் பலவீனம் மற்றும் சோர்வை நீக்குகிறது. இது உடலில் ஹீமோகுளோபின்களை அதிகரித்து பலவீனம் மற்றும் சோர்வினை நீக்குகிறது.
6. மாதுளை
மாதுளை எப்போதும் விட்டமின்கள் மற்றும் ஆற்றல் நிறைந்த உணவாகும். இது உடனடி ஆற்றல் தரக் கூடியது. இதில் உள்ள ஏராளமான விட்டமின்கள் உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது. மேலும் இது இரைப்பை, வயிறு புண்களை ஆற்றி, ஊட்டச் சத்துகள் உறிஞ்ச உதவுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் மாதுளம் பழம் சாப்பிடலாம்.