
மாநகரங்களில் மட்டுமல்ல, சிறுநகரங்களிலும் கூட தற்போது அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் சூப் கடைகள் உள்ளன. இதன் சுவை சுண்டியிழுப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சூப்பை விரும்பி குடிக்கிறார்கள்.
இப்போது சாலையோரங்களில் அதிகளவில் சூப் கடைகள் உள்ளன. மக்கள் இந்த கடைகளில் சூப் குடிப்பதால் ஏற்படும் அபாயத்தைப் பற்றி தெரியாமல் ஆபத்தை விலை கொடுத்து வாங்குகின்றனர்.
சாலையோரக்கடைகளில் விற்கப்படும் சூப், விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக அதன் தரம் சந்தேகத்துக்கு உள்ளாகிறது. புதிய காய்கறிகளைச் சேர்க்காமல், விலை குறைவாகக் கிடைக்கும் மலிவு விலைக் காய்கறிகளையே இவ்வகை சூப் தயாரிக்க பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.
சுவையூட்டுவதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. சைவமே இப்படி என்றால், அசைவ சூப் பற்றி சொல்ல வேண்டுமா? மலிவு விலை மட்டன், சிக்கனில் செய்த சூப்தான், கப்களில் ஊற்றி நம் கரங்களில் தரப்படுகிறது.
அசைவத்தை அவர்கள் எந்த நீரில் சுத்தம் செய்திருப்பார்கள், எந்தளவுக்கு சுத்தம் செய்து இருப்பார்கள், என்ன தரத்தில் அவர்கள் சமைத்திருப்பார்கள் என்றெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மேலும், சாலையோரங்களில் உள்ள கடைகள் என்றால், சாலையில் பறக்கும் தூசு மொத்தமும் சூப்புக்குள்தான் தஞ்சம் அடையும். கூடவே, அங்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், கப்புகள், குவளைகளில் ஈக்கள் மொய்க்கும் பட்சத்தில், இது வேறுவிதமான பிரச்னைகளை கொண்டு உடலைப் பாதிக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது சரியா?
உணவு சாப்பிட்டவுடன் நீர் குடிப்பது தவறான செயல். சாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும் நீர் குடித்தால், செரிமானப் பிரச்னைகள் ஏற்படும்.
ஆனால் அது உண்மை அல்ல. சாப்பிடும்போது, விக்கல் எடுத்தால் அல்லது தாகம் அதிகமாக எடுத்தால் தண்ணீர் குடிக்கலாம். மேலும் சாப்பிட்ட உடனே கூட நாம் விரும்பும் அளவுக்கு தண்ணீர் குடிக்கலாம். நமது உடலில் சுரக்கும் ஜீரண சுரப்பிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
சாப்பிடும் நேரத்தில் நீர் அருந்துவதால், ஜீரண மாற்றத்திற்கு உதவுமே தவிர, அது செரிமானப் பிரச்னையை ஏற்படுத்தாது.
நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுமே, முற்றிலுமாக உடல் உறுப்புகளால் சிதைக்கப்பட்டு, முழுதாக ஜீரணிப்பதற்கு குறைந்தபட்சம் 24 மணிநேரம் தேவைப்படுகிறது.
இதனால் 24 மணி நேரமும் நாம் நீர் அருந்தாமல் இருக்க முடியாது. இதனால் நமக்கு தேவையான நீரை நாம் குடிக்கலாம். ஜீரண செயல்பாடும் நடந்துகொண்டே இருக்கும்.
சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பாக தண்ணீர் குடித்துக் கொள்ளலாம். உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சாப்பிடுவதற்கு முன்பாக வெந்நீரை குடித்து வரலாம். அவ்வாறு சாப்பிடும் முன்பாக வெந்நீரைக் குடிப்பதால் உணவருந்தும்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது.
சப்பாத்தி, தோசை போன்ற உணவுப்பொருட்கள் எளிதில் தொண்டையில், உணவுக்குழாயில் அடைத்துக்கொள்ளும். அது போன்ற நேரங்களில் சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம்.
எந்த காரணத்திற்காகவும் வாயில் உணவை வைத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கக்கூடாது. அவ்வாறு குடித்தால் புரையேறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே, இனிமேல் சாப்பிடும்போதும், சாப்பிட்ட பிறகும் நீரை கட்டாயமாக குடிக்கலாம். அதில் எவ்வித பிரச்னைகளும் ஏற்படாது.