இந்தியர்களின் வாழ்க்கையில் இனிப்புக்கு ஒரு தனி இடமுண்டு. காலை தேநீரில் தொடங்கும் நாள், இரவு பாலில் இனிப்பு சேர்ப்பது வரை நம் அன்றாட வாழ்வில் இனிப்பு கலந்துள்ளது. விசேஷங்கள் என்றால் கேட்கவே வேண்டாம், இனிப்புகள் பரிமாறப்படாமல் அந்த கொண்டாட்டமே முழுமையடையாது. ஆனால், நாம் உண்ணும் இனிப்பின் அளவு நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காமல் இருக்க எவ்வளவு இருக்க வேண்டும் என்று தெரியுமா?
சுகாதார நிபுணர்கள் அதிகப்படியான சர்க்கரை உடலுக்கு பலவிதமான பிரச்சினைகளை உருவாக்கும் என்று எச்சரிக்கின்றனர். ஆகவே, நாம் இனிப்பை உட்கொள்வதுடன், ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது என்பதையும் அறிவது அவசியம்.
சர்க்கரையின் அளவு குறித்து பல்வேறு சுகாதார அமைப்புகள் வழிகாட்டுதல்களை வழங்குகின்றன. அமெரிக்க இதய சங்கம் (AHA) ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 9 ஸ்பூன்களுக்கு (36 கிராம்) அதிகமாகவும், பெண்களுக்கு 6 ஸ்பூன்களுக்கு (25 கிராம்) அதிகமாகவும் சர்க்கரை உட்கொள்ளக்கூடாது என்று பரிந்துரைக்கிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஒரு சராசரி வயது வந்த நபர் ஒரு நாளைக்கு 25 கிராமுக்கு மேல் சர்க்கரை உட்கொள்வது நல்லதல்ல.
அதிகப்படியான சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் பின்விளைவுகள் உடனடியாகத் தெரியாமல் போகலாம். ஆனால், நாளடைவில் இது உடல் எடையை அதிகரிப்பது மட்டுமின்றி, நீரிழிவு நோய் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடும். உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், அதீத பசி, உடல் எடை குறைதல், சோர்வு, பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். மேலும், காயங்கள் குணமாவதில் தாமதம், தோல் தொற்று, உடல் நடுக்கம், வியர்வை, இதய துடிப்பு அதிகரிப்பு போன்றவையும் இதன் அறிகுறிகளாக இருக்கலாம்.
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தாமல் விட்டால், இதயம், சிறுநீரகம், கண்கள் மற்றும் நரம்புகள் பாதிக்கப்படலாம். செரிமானக் கோளாறுகள், உடல் எடை அதிகரிப்பு, உடல் சோர்வு, பாலியல் பிரச்சினைகள், மூட்டு வலி, தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பல்வேறு உடல் நலக் குறைபாடுகளுக்கும் இது வழிவகுக்கும். எனவே, நம் அன்றாட உணவில் இனிப்பின் அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். நாம் உண்ணும் இனிப்புகளின் அளவை சரியாகப் பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.
(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும், பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)