ஒவ்வொரு பருவநிலை மற்றும் தட்பவெப்ப நிலை மாறுபாடுகளுக்கு ஏற்ப மனிதர்களின் உடலிலும் மாற்றங்களையும் சில நோய்களையும் ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் இலையுதிர் காலத்தில், வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் ஒவ்வாமைகளின் வெளிப்பாடு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சருமம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனுபவிக்கக்கூடிய சில பொதுவான சருமம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் தீர்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இலையுதிர்கால சருமப் பிரச்னைகள்:
1. சரும வறட்சி: வானிலை குளிர்ச்சியாக மாறும்போது அது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துகிறது. சிலர் சூடான தண்ணீரில் குளித்துவிட்டு வறண்ட காற்றில் வெளியில் செல்லும்போது அது இன்னும் அதிகமாக சருமத்தை பாதிக்கும்.
2. சரும எரிச்சல்: உடலின் நீர்ச்சத்து குறையும்போது அது சரும எரிச்சலை ஏற்படுத்தும். சிலர் சருமத்தை சொறியும்போது எரிச்சல் இன்னும் அதிகமாகி சிவந்துபோதல் மற்றும் அரிப்பு ஏற்படலாம்.
3. பொடுகு: வறண்ட காற்றின் காரணமாக தலையில் எண்ணெய் பதம் குறைந்து பொடுகு தோன்றலாம். இந்த இறந்த சரும செதில்கள் உச்சந்தலை முழுக்கப் பரவி இருக்கலாம்.
4. வறண்ட உதடுகள்: போதுமான நீர்ச்சத்து இல்லாதது மற்றும் வறண்ட காற்றின் காரணமாக உதடுகள் வறட்சியுடன் உலர்ந்து காணப்படும். சிலருக்கு வறட்சி அதிகமாகி உதடுகளில் சருமம் உரிந்து இரத்தம் கூட வரலாம்.
5. பாத வெடிப்புகள்: இலையுதிர் காலத்தில் பலருக்கும் கால் வெடிப்புகள் தோன்றக்கூடும். வெளியில் செல்லாமல் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அதிகமாக பாத வெடிப்பு தோன்றும். ஏனெனில், அவர்கள் வீட்டில் செருப்பு அணியாமல் நடப்பார்கள். ஆடிக்காற்று வீட்டிற்குள் மண், தூசி, குப்பையைக் கொண்டு வந்து சேர்க்கும். அதனால் பாத வெடிப்பு தோன்றும். சிலருக்கு ஆழமான சரும வெடிப்புகளும் காலில் ஏற்படக்கூடும்.
6. வறண்ட முகம்: முகத்தில் ஈரப்பதம் குறைவாக இருப்பதாலும் மேலும் சுற்றுச்சூழல் அழுத்தங்களுக்கும் ஏற்ப முகத்தில் உள்ள எண்ணெய் பசை குறைந்து வறண்ட சருமத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு சோப்பு போட்டு குளித்த பின்பு முகத்தில் உள்ள ஈரப்பதம் குறைந்து மெல்லிய கோடுகள் ஏற்படலாம்.
7. சரும அழற்சி, படை: சென்சிட்டிவான சருமம் உள்ளவர்களுக்கு மற்றும் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு சருமம் சிவத்தல், அரிப்பு, முகம், கழுத்து மற்றும் கை மற்றும் கால்களில் திட்டுகள் போல தோற்றமளிக்கும். செடி, கொடிகளில் உள்ள மகரந்தம், தூசி, உணவுப் பொருட்களின் ஒவ்வாமைகள் காரணமாக சருமத்தில் படை தோன்றக் கூடும். இது அரிப்பை உண்டாக்கும்.
8. முகப்பரு: ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் சீதோஷ்ண நிலை மாறுபாடு காரணமாக வியர்வை மற்றும் அழுக்குடன் சேர்ந்து முகப்பரு தோன்றும். மேலும், கரும்புள்ளிகள், நீர்க்கட்டிகள் முதுகு, முகம், தோள்பட்டைகளில் தோன்றக்கூடும்.
தடுப்பு நடவடிக்கைகள்:
1. உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை பராமரிக்கவும், வறட்சியை தடுக்கவும் உதவுகிறது.
2. நல்ல சூடான தண்ணீரில் குளிப்பது தவறு. அது உடலில் உள்ள இயற்கையான எண்ணெய்யை அகற்றி வறட்சிக்கு வழிவகுக்கும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே சிறந்தது.
3. பழங்கள். காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும். வைட்டமின் சத்துக்கள், ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
4. அதிகப்படியான காஃபின் உள்ள சாக்லேட் காபி போன்றவை உடல் சருமத்தில் நீர் இழப்பை ஏற்படுத்தும்.
5. மென்மையான சோப்புகளையே பயன்படுத்த வேண்டும். குளித்த பின்பு உடலில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளலாம். இது சிறந்த இயற்கையான மாய்ஸரைசர்.