‘ஆஹா’ என்று கூற வைக்கும் அவகோடா பழத்தின் பலன்கள்!
அவகோடா பழம் ஆனைக்கொய்யா, வெண்ணைப்பழம், பால்டா என்று பல விதமான பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது முட்டை வடிவம் அல்லது கோள வடிவமாகக் காணப்படும். அவகோடா பழுத்த பிறகு தங்க பச்சை நிறத்துடனும், வெண்ணை போன்று மிருதுவான சதை பகுதியை கொண்டிருக்கும். விற்பனை நோக்கத்திற்காக அவகோடா பழம் காயாக இருக்கும்போதே பறிக்கப்பட்டு பிறகு பழமாக்கப்படுகிறது.
அவகோடா பழம் மெக்ஸிகன், சென்ட்ரல் அமெரிக்காவை சேர்ந்தது என்றாலும் உலகில் பல இடங்களில் இதை பயிர் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவகோடா பழத்தில் வைட்டமின், மினரல், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து போன்றவை உள்ளன. அதனால் இருதயம் ஆரோக்கியமடைகிறது. அவகோடா அதிகம் சாப்பிடுவதால், இருதய நோய் வராமல் தடுக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அவகோடாவில் வைட்டமின் C, E, K, B6, ரிபோபுளோவின், நையாசின், மெக்னிசியம், பொட்டாசியம், லூட்டைன், பீட்டா கெரோட்டின், ஒமேகா 3 பேட்டி ஆசிட் ஆகியவை உள்ளன. மேலும், இதில் அதிகமான ஆரோக்கியம் தரக்கூடிய கொழுப்புச் சத்து உள்ளது. அதனால், இப்பழத்தை சாப்பிட்டால் உணவு முழுமையாக உண்ட திருப்தியை கொடுத்துவிடும்.
அவகோடாவில் ‘பீட்டா சிட்டோஸ்டெரால்’ உள்ளது. இதை உண்பதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்கிறது. அது இதயத்திற்கு மிகவும் நல்லதாகும். அவகோடாவில் ‘லுட்டேன்’ உள்ளதால் கண்களுக்கு மிகவும் நல்லதாகும். அவகோடாவில் வைட்டமின் K அதிகம் உள்ளதால் உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெற உதவுகிறது.
இந்தப் பழம் புற்றுநோய் வராமல் தடுகிறது. இதில் புற்றுநோயை செல்களை எதிர்க்கும் குணங்கள் உள்ளன. வயிறு, கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்கிறது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்திற்கு பெரிதும் உதவுவதோடு, உணவு குழாயை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது. அதிகப்படியான நார்ச்சத்து அவகோடாவில் இருப்பதால், குடல் இயக்கம் நன்றாக செயல்படுகிறது. இது இயற்கையாகவே உடலை டீ டாக்ஸிபை செய்ய உதவுகிறது.
அவகோடாவை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் குறைந்த அளவே பயிர் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அவகோடா ‘வெண்ணை பழம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் போதுமான அளவு அவகோடாவை விளைவிக்காததால், இதன் விலையும் இங்கே அதிகமாகவே இருக்கிறது.
இதில் அழற்சி போக்கும் குணம் உள்ளதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது, இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது, பார்வையை கூர்மைப்படுத்துகிறது, பெண்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதற்கு உகந்த பழம். மன அழுத்தத்தை இது போக்குகிறது.
அவகோடாவை சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம், ஸ்மூத்தியாக செய்து பருகலாம், முட்டையுடன் சேர்த்து டோஸ்ட் செய்து உண்ணலாம். அவகோடா ஒரு சிறந்த காலை உணவாகும். இதை காலையில் உண்பதால் உடலுக்கு அதிக சக்தி கிடைப்பது மட்டுமில்லாமல், முழுதாக உணவருந்திய திருப்தியை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களிடம் இந்தப் பழத்தின் மவுசு கூடிக்கொண்டே போகிறது.