உடல் ஆரோக்கியத்தில் ஆச்சரியப் பலனைத் தரும் அவகேடோ பழம்!

Avocado fruit
Avocado fruithttps://www.youtube.com

நாம் நிறைய பழ வகைகளைக் கேள்விப்பட்டிருப்போம். இதில் அவகேடோ என்ற வெண்ணெய் பழமும் ஒன்று. அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்தப் பழம் மரத்தில் பழுக்காத ஆச்சரியம் நிறைந்த பழம். மற்ற பழங்களைக் காட்டிலும் அவகேடோ பழத்தில் கிட்டத்தட்ட 20க்கும் அதிகமான வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்துள்ளன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அவகேடோ முக்கிய பங்கு வகிக்கிறது.

அவகேடோ பழத்தில் நல்ல அளவிலான கொழுப்புகள், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் பி6, சி மற்றும் வைட்டமின் கே1 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. டயட்டில் இருப்பவர்கள், உடல் எடையைக் குறைக்கவும் இதய ஆரோக்கியத்திற்காகவும் இந்தப் பழத்தை எடுத்துக்கொள்கிறார்கள். அது மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அவகேடோ பழம் உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒரு அவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

அவகேடோ பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. அவை தைராய்டு ஹார்மோன்கள் உட்பட ஹார்மோன் தொகுப்புகளுக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. இவற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்தும் உள்ளன. அதோடு, உடல் எடையை பராமரிக்கவும் இது உதவுகிறது. தைராய்டு கோளாறுகள் பெரும்பாலும் எடை பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

இரத்தத்தில் டிரைகிளிசரைடுகளின் அளவு அதிகமாவது எல்டிஎல் என்ற கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. அவகேடோ பழம் சாப்பிடுவது டிரை கிளிசரைடு அளவைக் குறைக்கிறது. இதன் மூலம் உடலில் உள்ள எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பைக் குறைத்து எச்டிஎல் என்ற நல்ல கொழுப்பை அதிகரிக்கலாம். அவகேடோவில் பைட்டோஸ்டீரோல் என்ற மூலக்கூறு அதிகளவு நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது. இதன் மூலம் மாரடைப்பு போன்ற அபாயத்தைத் தவிர்க்கலாம்.

இந்தப் பழத்தில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது உடலின் தினசரி இயக்கத்திற்கு மிக முக்கியக் காரணமாக அமைகிறது. ஏனெனில், இதயம், சிறுநீரகம் போன்ற செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலை பொட்டாசியம் வழங்குகிறது. அவகேடோவில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கச் செய்வதுடன், சோடியத்தால் உடலில் ஏற்படும் விளைவையும் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

அவகேடோவில் லுடீன் மற்றும் சியாக்சிந்தின் போன்ற மூலக்கூறுகள் அதிகளவில் நிறைந்துள்ளன. இந்த மூலக்கூறுகள் கண் பார்வையில் ஏற்படும் மாகுலர் சிதைவு செயல்முறையைத் தாமதப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருக்க அவகேடோ பழத்தைச் சாப்பிடலாம். இது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கர்ப்பிணி பெண்கள் அவகேடோ பழத்தை எடுத்துக்கொள்வது குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிப்பதுடன், தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது.

அவகேடோ பழத்தில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது. இதில் குறைந்தளவு கிளைசெமிக் குறியீடு நிறைந்துள்ளன. இவை நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த தேர்வாக அமைகிறது. சர்க்கரை நோய் தவிர்க்க அவகேடோ பழம் உதவுவதாக மாலிகுலர் நியூட்ரிஷன் அண்டு ஃபுட் ரிசர்ச் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அவகேடோ பழத்தில் அவகோட்டின் பி எனும் சத்து உள்ளது. இது அவகேடோ பழத்தில் மட்டுமே உள்ளது. இது இன்சுலின் சுரப்பு குறைபாட்டை தவிர்த்து, சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்கிறது. தினசரி இரண்டு பழம் சாப்பிட நல்ல பலன் தெரியும் என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
மஞ்சள் பற்களை வெண்மையாக மாற்ற நச்சுன்னு நாலு டிப்ஸ்! 
Avocado fruit

பழங்களிலேயே ஆர்த்ரைடிஸ் பிரச்னைக்கு நிவாரணமாக இருக்கக்கூடிய ஒரே பழம் இந்த வெண்ணைப்பழம்தான். இதற்குக் காரணம், இதிலுள்ள சேர்மங்கள் ஆர்த்ரைடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்னைகளை சீராக்குகின்றன. அவகேடோவில் குறைந்தது 30 சதவிகிதம் வரையிலான கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதோடு, ஒலிக் அமிலம் இதில் உள்ளது. நார்ச்சத்து உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும். இது பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. மறுபுறம், ஒலிக் அமிலம் செரிமான செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது.

அவகேடோ சிறந்த இயற்கை இரத்த சுத்திகரிப்பு உணவுகளில் ஒன்று. இது நம் உடலில் இருந்து இரத்த நாளங்களை சேதப்படுத்தும் நச்சுகளை அகற்ற உதவுகிறது. இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது பிரிரேடிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் தீங்கு விளைவிக்கும் விளைவுகளால் நமது சருமத்தை சேதப்படுத்தாமல் பாதுகாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com