

அவகேடோ பழத்தை நாம் சாப்பிடும் போது, அதன் தோலை நீக்கி விட்டு தான் சாப்பிடுகிறோம். பிறகு அந்த தோலை கொட்டையுடன் சேர்த்து குப்பையில் வீசி விடுகிறோம்.
ஆனால் அதில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளன என்பதையும், அதை பல வழிகளில் பயன்படுத்தலாம் என்றும் என் தோழி பரிந்துரைத்தாள்.
அவள் வீட்டிற்கு சென்ற போது ஒரு டீ போட்டு கொண்டு வந்து கொடுத்தாள். அதன் சுவையும் மணமும் வித்தியாசமாக இருந்தது. மேலும் அதைப் பற்றி அறிய விசாரித்த போது, அவள் சொன்ன தகவல்கள் வியப்பூட்டின. “அட இவ்வளவு நாள் நாம் இது தெரியாமல் தோலை வீசி எறிந்து விட்டோமே” என்று வருத்தப்பட்டேன்.
அப்படியானால் என்னை வியப்பில் ஆழ்த்திய தகவல்கள் என்ன என்று இதோ இந்த பதிவில் பார்ப்போம்:
அவகேடோ பழத்தோல் (Avocado Peel)
அவகேடோ பழத்தோல் சற்று தடிமனான, நார்ச்சத்து அதிகமுள்ள பகுதியாகும். இது பழத்தை விரைவில் பழுக்காமல் காக்கும் முக்கிய பகுதி. சற்று கசப்பான சுவை கொண்டது.
அவகேடோ பழத்தோல் சத்துக்கள் (Nutrients in Avocado Peel)
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபீனால்கள், ஃபிளேவனாய்ட்கள் அதிகமாக உள்ளன. தோலின் நிறம் அதிகம் கறுப்பாக இருக்கும் போது, ஊட்டச்சத்து அளவும் அதிகமாக இருக்கும்.
இந்த தோல் நல்ல ஊட்டச்சத்துக்கள் கொண்டது. இது கொஞ்சம் தடிமனாகவும், சற்று கசப்பாகவும் இருக்கும். அதனால் இதை நேரடியாக சாப்பிடாமல், கஷாயம் அல்லது ஊறுகாய் மாதிரி செய்து பயன்படுத்துவது நல்லது. இதை சூடாக்கும்போது நல்ல மணமும் வரும்.
அவகேடோ தோல் தேநீர் (Avocado Peel Tea)
சுத்தமான தோல்களுடன் இலவங்கப்பட்டை, இஞ்சி அல்லது லெமன் கிராஸ் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்தால் அவகேடோ தோல் தேநீர் தயாராகும்.
இது ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த டிடாக்ஸ் பானமாக செயல்படும். இதில் உள்ள பாலிபீனால்கள் மற்றும் ஃபிளேவனாய்ட்கள் உடலில் ஆக்சிடேட்டிவ் ஸ்டிரஸை குறைத்து, முதுமை மற்றும் நீண்டநாள் நோய்களைத் தடுக்க உதவும். இது ஒரு ஆரோக்கியமான அருமையான காலை பானமாக இருக்கும்.
அவகேடோ தோல் பொடி (Avocado Peel Powder)
தோல்களை உலர்த்தி, பொடியாக அரைத்து, கொஞ்சமாக தோசை மாவு அல்லது ரொட்டி சப்பாத்தி மாவு கலவையில் சேர்க்கலாம். இது கூடுதல் நார்ச்சத்தைக் கொடுக்கும்.
மேலும், இதை கொஞ்சம் வறுத்து, எண்ணெய் அல்லது கஷாயம் செய்ய பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை சமையலில் கொஞ்சம் சேர்த்து, சாலட், காய்கறி வதக்கும் போது அல்லது சூப்பில் சேர்த்தால் நல்ல மணமும் சுவையும் தரும்.
ஸ்மூத்திகளில் கலந்து பயன்படுத்துதல் (Adding to Smoothies)
சுத்தமான தோலை சிறிய அளவில் ஸ்மூத்தி கலவையில் சேர்க்கலாம். இது நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களை அதிகரிக்கும்.
அவகேடோ தோல் சிரப் (Avocado Peel Syrup)
அவகேடோ தோலை நன்றாக கழுவி, வெங்காயம், பூண்டு மற்றும் பிற காய்கறி தோல்களுடன் சேர்த்து கொதிக்க வைத்தால் லேசான சுவையுள்ள சிரப் கிடைக்கும். அதை சூப், பருப்பு அல்லது கறி செய்ய பயன்படுத்தலாம்.
அவகேடோ தோல் ஊறுகாய் (Avocado Peel Pickle)
அவகேடோ தோலை நன்றாக கழுவி, சிறு துண்டுகளாக வெட்டி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். 1–2 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். பின்னர் சப்பாத்தி, சாதம், அல்லது சட்னியுடன் சாப்பிடலாம்.
அவகேடோ தோல் கப் (Avocado Peel Cup)
தடிமனான அவகேடோ தோல் துண்டுகளை வெயிலில் உலர்த்தி எடுத்தால் அது ஒரு கப் போல இருக்கும். அதில் சட்னி, சாஸ் மற்றும் சிறிய சாலட் பரிமாறலாம். டைனிங் டேபிளில் ஸ்டைலாக பரிமாறலாம்.
உயிர்செயல்பாட்டு (bioactive) சேர்மங்கள் அதிகமாக இருப்பதால், அவகேடோ தோல் சாப்பிட பாதுகாப்பானதும் ஆரோக்கியமானதும் ஆகும். எனவே இந்த சத்துக்கள் நிறைந்த தோலை ஒரு போதும் வீசாதீர்கள்!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)