தென்னிந்தியாவில் காபி பிரியர்கள் அதிகம். காலையில் எழுந்தவுடன் ஒரு கப் காபி, பின்பு டிபன் சாப்பிட்டவுடன் மீண்டும் ஒரு காபி, மாலையில் ஒரு காபி என்று அருந்துபவர்கள் உண்டு. ஆனால் காபி சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் தன்மை கொண்டது. மேலும் காபியுடன் சேர்த்து சில வகையான உணவுகளை உண்ணும் போது அது சில ஆரோக்கியக் கேடுகளை ஏற்படுத்தும். அது எந்த வகையான உணவுகள் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
காபி சாப்பிட்டவுடன் சிட்ரஸ் பழங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. எலுமிச்சை ஆரஞ்சு, நெல்லிக்காய், திராட்சை போன்ற பழங்களில் சிட்ரஸ் உள்ளது. இவை இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டவை. காபியிலும் அமிலத்தன்மை உண்டு. காபியையும் சேர்த்து உட்கொள்ளும் போது அது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோயை ஏற்படுத்தும். செரிமான அசௌகரியமும் ஏற்படும். எனவே இவை இரண்டையும் சேர்த்து உட்கொள்ளும் போது வயிற்று சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.
சிவப்பு இறைச்சி இரும்புச்சத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். ஆனால் காபியுடன் சேர்த்து சிவப்பு இறைச்சி உட்கொள்ளும் போது அல்லது சிவப்பு இறைச்சி உண்டு விட்டு உடனே காபி குடிக்கும் போது உடல் இரும்பு சத்தை உறிஞ்சுவதை காபி தடுக்கிறது. இதனால் ரத்த ஓட்டம் தடைபடலாம். ஹார்மோன் உற்பத்தியில் மாறுபாடுகள் ஏற்படலாம். நோய் எதிர்ப்பு செயல்பாடு பாதிக்கப்படலாம்.
எண்ணெயில் வறுத்துப் பொறித்த உணவுகளான சிப்ஸ், வடை, பஜ்ஜி, போண்டா மற்றும் அசைவ உணவுகளில் வறுத்த மீன், சிக்கன் 65 போன்றவற்றுடன் காபியை அருந்துவது ரத்த ஓட்டத்தில் கொழுப்பின் அசாதாரண அளவை அதிகரித்து விடும். வறுத்த உணவுகள் கெட்ட கொழுப்பின் அளவை உயர்த்தும். இது நமது ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது உயர் அடர்த்தி கொழுப்பு புரதம் என்று அழைக்கப்படும் நல்ல கொழுப்பைக் குறைப்பதிலும் பங்கு வகிக்கிறது. எனவே வறுத்துப் பொரித்த உணவுகள் உண்ணும் போது அதனுடன் காபியை அருந்தக் கூடாது.
சிலர் காலை உணவாக வலுவூட்டப்பட்ட தானியங்களை எடுத்துக் கொள்கிறார்கள். உலர் பழங்கள், முந்திரி, பேரிச்சம்பழம், பாதாம் பருப்புகள் சோள வகைகள் போன்றவற்றை உண்கிறார்கள். அவற்றில் அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் போன்ற கூடுதல் சத்துக்கள் இருக்கும். இவை துத்தநாகத்தால் செறிவூட்டப்படுகின்றன. இவற்றை உண்டு முடித்து கூடவே காபியையும் அருந்தும் போது துத்தநாகத்தை உடல் உறிஞ்சுவதில் காபி தலையிடும். அதனால் வலுவூட்டப்பட்ட தானியங்கள் மூலம் கிடைக்கக்கூடிய சத்து உடலுக்கு கிடைக்காமல் போகும்.
பாஸ்தா போன்ற அதிகம் ப்ராசஸ் செய்யப்பட்ட உணவுகள், பர்கர்கள், பீட்சா, சிப்ஸ், பாப்கார்ன், இறைச்சி வகைகள், பன்றி இறைச்சி போன்றவற்றில் சோடியம் அதிகம் உள்ளது. அதிக சோடியம் உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ளும் போது ரத்த அழுத்தம் அதிகம் ஆவதற்கு ஒரு காரணமாக அமைகிறது. மேலும் காபியுடன் சேர்த்து அருந்தும் போது, அதில் உள்ள சில சேர்மங்கள் ரத்த அழுத்த அளவை நேரடியாக பாதிக்கும். எனவே அதிக சோடியம் உள்ள உணவுகளுடன் காபியை சேர்த்து அருந்தக்கூடாது