

உப்பு நம் உடலுக்குத் தேவையான எலக்ட்ரோ லைட் ஆகும். மருத்துவர்கள் உப்பை குறைவாக பயன்படுத்தச் சொல்லி அறிவுரை தருவார்கள். உப்பை முற்றிலும் தவிர்த்து விட்டாலும் பாதிப்பு ஏற்படும். உப்பைத் தவிர்க்கும் போது, சோடியம் அளவு குறையும். உடலில் நீர் அளவு அதிகரிக்கும். இதனால் செல்கள் வீங்குகின்றன. இது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் பாதிக்கிறது. இரத்தத்தில் சோடியம் அளவு குறைவாக இருப்பது ஹைபோநெட்ரீமியா என்று அழைக்கப்படுகிறது.
ஹைபோநெட்ரீமியா அறிகுறிகள்
இது உடலில் உப்பு குறைவதால் ஏற்படும் நிலையாகும். இந்த நோய், குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்துகிறது. சோர்வு ஏற்பட்டு தசைகள் பலவீனமடையும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நோய் கடுமையாக ஆகிவிட்டால் வலிப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு செல்லக் கூடும். மரணமும் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு
நமது ஆரோக்கியத்தில் நரம்பு மண்டலம் முக்கிய பங்கு வகிக்கின்றது. நரம்புகள் பலவீனம் அடையும் போது பல பிரச்னைகள் எழுகின்றன. சோடியம் குறைவதால் தசை செயல்பாடு மாறுகிறது. மேலும் இரத்தத்தில் சோடியம் குறையும் போது நீரிழிவு ஏற்படுகிறது. உடல் தனக்குத் தேவையான நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனை இழக்கிறது. சோடியம் குறையும் போது இன்சுலின் எதிர்ப்பும் அதிகரிக்கிறது.
அதிகமாக சோடியம் உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்பது உண்மைதான். சோடியம் முற்றிலும் குறைப்பதும் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இதயத்தையும் பாதிக்கும்.
வயதானவர்களுக்கு ஹைபோநெட்ரீமியா மிகவும் பொதுவானது. டையூரிக்ஸ் மற்றும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ளுபவர்களுக்கு இது ஏற்பட வாய்ப்புண்டு. இதயம், சிறுநீரகம் அல்லது கல்லீரல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோடியம் உட்கொள்வது குறைவதால் ஹைபோநெட்ரீமியா விரைவில் உருவாகலாம். எனவே உப்பை முற்றிலுமாக தவிர்ப்பது அல்லது அதிகமாக உட்கொள்வது இரண்டுமே ஆபத்தானவை.