ஆயுர்வேதம் நம் அனைவருக்கான சிகிச்சை வாழ்வியல் முறையாகும். அது மட்டுமின்றி நம்முடைய மனம், ஆத்மா, எல்லாமும் நன்கு இயங்கத் தேவையான வழிமுறைகளை சொல்லிக் கொடுக்கக்கூடிய ஒரு அறிவியல் முறைதான் ஆயுர்வேதம்.
நம்மில் பெரும்பாலோனோர் 40 வயதுக்கு பிறகு சர்க்கரை நோய்கான இரத்த பரிசோதனைகளை எடுத்துக் கொள்கிறோம். தேவைப்பட்டால் அதற்காக மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறோம்.
முதல்முறை மருத்துவரை பார்க்கும்போது இந்த சர்க்கரை நோய் குணப்படுத்த முடியாத நோய், வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால், காலம் கூடக் கூட மாத்திரைகளின் எண்ணிக்கையும் கூடிவிடுகிறது. இறுதியில் இன்சுலின் தேவைப்படும் நோயாக அது மாறிவிடுகிறது.
இன்றைக்கு 60 வயது இருக்கக்கூடியவர்கள் அனைவருக்கும் மருந்துகள் மட்டும் வாழ்க்கையில் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பது கிடையாது. மருந்துகளைத் தாண்டி நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் ஏராளம் என்ற புரிதல் நமக்கு வயதாகும்போது தானே வந்து விடுகிறது.
அதனால்தான் இன்றைக்கு இருக்கும் நவீன மருத்துவ சிகிச்சை முறைகளுடன் மற்ற முறைகளையும் நாம் பின்பற்றத் தொடங்கிவிட்டோம். இயற்கை மருத்துவம் சார்ந்த தேடல் முதுமையில் நமக்கு அதிகமாகிக்கொண்டு வருகிறது.
ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது நம்மிடம் வந்து நெல்லிக்காயும் மஞ்சளும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய குறிப்பாக சர்க்கரை நோயினால் ஏற்படக்கூடிய நரம்பு நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு அழகான மருந்து என்று சொன்னால் நம்மில் நிறைய பேர் நம்பி இருக்கமாட்டோம். ஆனால் இதே ஆராய்ச்சியை அமெரிக்காவில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களும், இந்தியாவின் குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகமும் ஆய்வுகள் மூலம் நிருபித்துள்ளன.
நாம் ஆரோக்கியத்திற்காக எடுக்கக்கூடிய முயற்சி வெறும் மருந்துகள் சார்ந்த முயற்சியாக மட்டுமில்லாமல் உணவு, நீர், மூச்சுப் பயிற்சி, உடல் சுத்தி, மன சுத்தி, ஆத்ம சுத்தி, அபியாசம் எனும் மனக்கட்டுப்பாடு பயிற்சி, தூக்கம் ஆகியவற்றுடன் கூடியதாக இருப்பது மிகவும் அவசியம்..
இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஜப்பானில் 2 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கொடுத்தார்கள். மருத்துவம் சார்ந்து உணவு சாப்பிடாமல் உண்ணா நோன்பு இருக்கும்போது எப்படி அது புற்றுநோயை கொல்லக்கூடியதாக இருக்கிறது என்ற ஆராய்ச்சியின் முடிவுக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஆயுர்வேதத்தில் காய்ச்சல் ஆரம்பித்தாலே முதல் சிகிச்சை மருந்து கிடையாது. உண்ணா நோன்பு இருப்பதுதான். இந்த மாதிரியான அடிப்படை விஷயங்கள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு இருப்பதால் இன்று நம்மில் 50 விழுக்காட்டு மக்கள் இயற்கை மருத்துவத்திற்கு மாறியிருக்கிறோம்..
இயற்கை மருத்துவம் நம் உடல் வாத, பித்த, கபத்தில் எந்த வகையில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து நம் உடலில் உள்ள நோய்களை அறிந்து, உணவின் மூலமாக, தண்ணீர் குடிப்பதன் மூலமாக, மூச்சுப் பயிற்சி மூலமாக, உடல் கழிவு நீக்கம் மூலமாக, மன அழுத்தத்தை குறைப்பதன் மூலமாக, ஆத்ம ரீதியான எண்ண ஓட்டங்கள் மாறுவதன் மூலமாக என இவை அனைத்தையும் முழுமையான பயிற்சியாகவும் அதுகூடவே தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலமாகவும் மாற்றக்கூடிய முயற்சிதான் இயற்கை மருத்துவம்.
ஆயுர்வேத மருத்துவம் வெறும் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது கிடையாது. இந்த புரிதல் சமூக அளவில் பெரிதாக உணரப்பட்டிருப்பதால்தான் நிறைய பேர் குறிப்பாக கரோனா தொற்றுக்குப் பிறகு நம்பி இருந்த ஒரு மருத்துவ முறை குறிப்பிட்ட அளவுக்கு மேல் உதவி செய்ய முடியாத நிலை வந்த பிறகு இயற்கை மருத்துவத்தை நாட ஆரம்பித்தனர். அதன் பலன்களை அனுபவித்த பின்பு இன்று இயற்கை மருத்துவத்தின் மேல் இருக்கக்கூடிய நம்பிக்கையும் அதை பயன்படுத்துபவர்கள், பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது.
அரிசி உணவு உடலுக்கு கெடுதல், அதனால் அரிசி உணவைக் குறைத்தால் சர்க்கரை அளவை குறைத்துவிடலாம் என்ற ஒரு தவறான கருத்து உள்ளது. நம் ஊரில் அரிசியை பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். வட இந்தியாவில் கோதுமையை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இப்போது நம் ஊரில் கோதுமைதான் அதிகம் சாப்பிட வேண்டும் என்று நிறைய மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
எது எப்படியோ இயற்கையோடு இணைந்து வாழ்வதே அற்புதமானது என்பதை அனுபவம் ஒன்றே நமக்கு நன்கு உணர்த்தும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)