பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் இடுப்புவலி, வயிற்று வலியை கட்டுப்படுத்தவல்லது பத்த கோணாசம் ஆகும். இந்த யோகாசனம் butterfly போஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் செய்வதால் படைப்புத் திறனும் மன உறுதியும் மேம்படுகின்றது. மேலும், இது மனதைப் பக்குவப்படுத்தவும் உதவுகிறது.
இந்த ஆசனத்தை செய்து வந்தால் பெண்களுக்கு பிறப்புறுப்பில் உண்டாகும் குறைபாடுகள் நீங்க உதவுகிறது. அதேபோல, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை குறைபாடுகளும் நீங்கி, சிறுநீரகத்தின் செயல்பாடு சீராக அமையும். பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்பு வலி, வயிற்று வலி மற்றும் அதிக இரத்தப் போக்கையும் இந்த ஆசனம் கட்டுப்படுத்துகிறது.
முதுகெலும்பு பிரச்னைகளால் அவதிப்படும் பெண்களுக்கு இந்த ஆசனம் பெரிதும் உதவும். பத்த கோணாசனத்தை தினமும் செய்து வந்தால் பின்புற முதுகு தசைகள் வலுப்பெறும். இந்த பட்டாம்பூச்சி போஸ் கழுத்து பகுதி, முதுகு, தலை பகுதிகளை தளர்வடைய உதவுகிறது.
ஆசனம் செய்யும் முறை: உங்கள் முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி தரையில் அமர்ந்து ஆழ்ந்து மூச்சை உள் இழுத்து விட வேண்டும். பின்னர் இரு கால்களையும் மடக்கி கால் பாதங்கள் இரண்டும் ஒன்றாக ஒட்டியபடி கைகளால் கால் பாதங்களை பிடித்துக் கொள்ளுங்கள்.
இந்த நிலையில் முதுகை வளைக்காமல் நிமிர்ந்து உட்கார வேண்டும். குறிப்பாக, கால் முட்டிகள் தரையை தொடக்கூடாது. இதற்கு முதலில் தொடைகளை தரையில் தாழ்த்தினால் கால் முட்டிகள் சமநிலையில் சரியாக இருக்கும். இதே சமயத்தில் இரண்டு கால்களை மேலும் கீழும் அசைக்க வேண்டும். இந்த ஆசன நிலையில் 30 வினாடி முதல் ஒரு நிமிடம் வரை நிலைத்திருங்கள். அதன் பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து நேராக நிமிர்ந்து ஆரம்ப நிலைக்கு வர வேண்டும்.
- நிதிஷ்குமார் யாழ்