
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உள்ள நிறமிகளுக்கு நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு அதிலுள்ள பைட்டோ நியூட்ரின்ஸ்கள் தான் அவைகளுக்கு நிறங்களை தருகின்றன. நாம் சாப்பிடும் உணவு சரிவிகித உணவாக மட்டும் அமைந்தால் போதாது. சரிநிற உணவாகவும் இருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பெரும்பாலான உணவுப் பொருட்கள் நிறங்களை இழந்த நிலையில் தான் தயாரிக்கப்படுகின்றன. நிறமிகள் அழிந்து போவது என்பது நம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியளிக்கும் கூறுகள் அழிந்து போவதற்கு சமம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
‘ஒரு நபர் தினமும் 400 கிராம் காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். அந்த காய்கறி, பழங்களையும் குறைந்தது 2 நிறங்களில் இருந்து அதிகபட்சமாக 5 நிறங்களில் எடுத்துக்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்கிறார்கள் நியூட்ரிஷியனிஸ்ட்கள் . அவை என்னென்ன நிறங்கள், அவற்றில் என்னென்ன சத்துக்கள், நன்மைகள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம்.
சிவப்பு: இந்த நிறத்தை காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு வழங்குவது 'லைகோபீன்' எனும் ரசாயனம் தான். மேலும் இதில் எலாஜிக் ஆசிட், குவர்சிடின், ஹெஸ்பெரிட்டின் (Hesperetin), அந்தோசியானிடின் (Anthocyanidin) எனும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளது. இவைகள் ரத்த செல்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வது, மன அழுத்தத்தை குறைக்க, இரத்த செல்களின் அழிவை தடுப்பது என பல பணிகளை செய்து நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் உள்பொருள்களைக் கொண்டுள்ளன. சிறுநீரகப் பாதையைப் பாதுகாக்கும். இதயநோய், புராஸ்டேட் பிரச்னை வராமல் தடுக்கும். புற்றுநோயை செல்களை எதிர்க்கும்
சிவப்பு நிறத்தில் உள்ள உணவுகள்: ஆப்பிள், தக்காளி, மாதுளம் பழம், தர்பூசணி, செர்ரி பழம், சிகப்பு கொய்யா, பீட் ரூட், சிகப்பு குடைமிளகாய், சிகப்பு திராட்சை, சிகப்பு முட்டை கோஸ் மற்றும் முள்ளங்கி போன்றவைகள்.
மஞ்சள் மற்றும் ஆரஞ்சு: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு அந்த நிறத்தை ஜிஸாந்தின் (Zeaxanthin), ஆல்பாகரோட்டின், பீட்டாகரோட்டின், லுட்டின் போன்ற சத்துக்கள் வழங்குகிறது. இந்த சத்துக்கள் தான் உணவுகளில் இருந்து வைட்டமின் 'ஏ' யை உருவாக்க உதவுகிறது.அதோடு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. அதோடு போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி9 உருவாக்கி மன அழுத்தம் தவிர்த்து உடல் ஆற்றலை அதிகரிக்கிறது. அதோடு பார்வைத்திறன் மேம்பட, உடல் வளர்ச்சிக்கு உதவும். சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதயத்துக்கும் நல்லது.
மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற உணவுகள்: கேரட், ஆப்ரிகாட் பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, மாம்பழம், பப்பாளி, பீச், பேரிக்காய், பைன் ஆப்பிள், பூசணிக்காய், மக்காச்சோளம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மஞ்சள் மிளகாய்.
பச்சை: இந்த நிறத்தை உணவுகளுக்கு தருவது 'குளோரோபைல்' இது தான் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது . மேலும் இந்த நிற உணவுகளில் உள்ள சத்துக்கள் சல்ஃபோரஃபேன் (Sulforaphane), ஐசோதியோசயனேட் (Isothiocyanate), இண்டோல்ஸ் (Indoles), ஐசோஃபிளவோன்ஸ் (Isoflavones) போன்றவைகள் தரும் பலன்கள் கண்கள், ஈறுகள், ரத்த நாளம், நுரையீரல், கல்லீரல், செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். காயங்களைக் குணப்படுத்த உதவும். எலும்புகளை உறுதியாக்கும். சருமத்துக்கு எலாஸ்டிசிட்டி தன்மையைத் தரும். இதயச் செயல்பாடுகள் மேம்பட உதவும்.
பச்சை நிறத்தில் உள்ள உணவுகள்: பசலைக்கீரை, அடர் பச்சை நிறத்தில் உள்ள காய்கறிகள் மற்றும் கீரைகள், பச்சை மிளகாய், பச்சை பட்டாணி, வெள்ளரிக்காய், செலரி, பச்சை ஆப்பிள், பீன்ஸ், புரோக்கோலி, முட்டைக்கோஸ், பச்சை திராட்சை, சாத்துக்குடி, லெட்யூஸ், தண்ணீர் விட்டான் கிழங்கு.
புளூ மற்றும் பர்ப்பிள்: இந்த நிற உணவுகளுக்கு நிறத்தை தருவது ஆந்தோசைனின்ஸ் எனும் நிறமி தான். இந்த நிற உணவுகளில் உள்ள சத்துக்கள் ஃபிளவனாய்டு, ஃபீனோலிக் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் (Phenolic antioxidants), ரெஸ்வெரட்ரால் (Resveratrol), ஆந்தோசியானின் (Anthocyanin). இவைகள் தரும் பலன்கள் இதயம், மூளை, எலும்புகள், ரத்த நாளங்கள், நினைவுத்திறன் ஆகியவற்றுக்கு நல்லது. புற்றுநோயை எதிர்க்கும். முதுமையைத் தாமதப்படுத்தும்.
புளூ மற்றும் பர்ப்பிள் நிறத்தில் உள்ள உணவுகள்: திராட்சை, புளுபெர்ரி, கத்திரிக்காய், அத்திப்பழம், பிளம், பர்பில் திராட்சை மற்றும் கிஸ்மிஸ் பழம், புளூ பெர்ரி இவை பர்பில் நிற உணவுகள்.
வெள்ளை: இந்த நிற உணவுகளில் முக்கியமான இரண்டு ரசாயனங்கள் உள்ளது. ஒன்று அலிசின் மற்றொன்று ஆந்தோசின்தின் இவைகள் கொலஸ்டிரால் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. அதோடு குவர்சிடின், இண்டோல்ஸ், குளுக்கோசினோலேட் (Glucosinolate) போன்ற சத்துக்களும் உள்ளன. இவைகளின் பலன்கள் எலும்புகள், ரத்த ஓட்டம், ரத்தநாளங்கள் செயல்பாட்டை ஆரோக்கியமாக்கும். இதயநோய், புற்றுநோய் வராமல் தடுக்கும். எலும்பு அடர்த்தி குறைதல் நோயைத் தடுக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்க வெள்ளை நிற காய், கனிகள் உணவுகள் உதவும்.
வெள்ளை நிறத்தில் உள்ள உணவுகள்: வாழைப்பழம், உருளைக்கிழங்கு, காலிபிளவர், வெள்ளைப் பூண்டு, இஞ்சி, காளான், வெங்காயம், டர்னிப் வெள்ளை நிற உணவுகள்.