

பழ வகைகளில் மிகவும் குறைந்த விலையில், அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள பழம் என்றால் அது வாழைப்பழமே ஆகும். வாழைப் பழங்களில்(Bananas) பல வகைகள் உள்ளன. நமக்குத் தெரிந்த வாழைப்பழ வகைகள் இரண்டு, மூன்று தான். ஆனால், அதையும் தாண்டி வாழைப்பழங்களில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வாழைப்பழங்களும் அதற்கென தனி சுவையையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளன.
1. பூவன் பழம்
இந்த வகை வாழைப்பழம் பார்ப்பதற்கு சிறிய அளவில் இருக்கும். நல்ல ஒரு இனிப்பான சுவையில் இருக்கும். பூவன் பழம் சாப்பிடுவதால், செரிமான பிரச்சனை நீங்குகிறது. அதேபோல் உடல் தசைகளும் வலிமையடைகின்றன. இந்த வாழைப்பழத்தை தினமும் எடுத்துக் கொண்டால் பல ஆரோக்கிய நன்மைகள் நம் உடலில் ஏற்படும். ஆஸ்துமா, சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.
2. நாட்டு வாழைப்பழம்
மற்ற பழங்களின் தோலை விட இதன் தோல் தடினமாக இருக்கும். ஆரோக்கிய நன்மைகள் என்னவென்றால், செரிமான பிரச்னையை குறைக்கின்றன. உடல் வெப்பத்தை தணிக்கின்றன. குடல் புண்களை ஆற்றுகின்றன.
அதிக கால்சியம், மெக்னீசியம் உள்ளன. இதனால் எலும்புகள் வலுவாகும். மொந்தன் என்று அழைக்கப்படும் வாழைப்பழமும் நாட்டு பழத்திற்கு கீழே வரும்.
3. செவ்வாழை
மற்ற வாழைப்பழங்களில் மஞ்சள் நிறத்திலிருந்து இதன் நிறம் சிவப்பு நிறமாக தனித்து காணப்படும். இதில் பீட்டா கரோட்டின், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. அதிக நார்ச்சத்தை கொண்டுள்ளன. இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும். எலும்பு மற்றும் கண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வைக்கின்றது. சளி, ஆஸ்துமா, அல்லது இருமல் உள்ளவர்கள் இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
4. கற்பூரவள்ளி
கற்பூரவள்ளி வாழைப்பழத்திலுள்ள வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து காரணமாக இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், எலும்புகளை வலுப்படுத்தவும், சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கவும், உடலுக்கு ஆற்றலை வழங்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின் ஏ, பி6, மற்றும் சி, மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகளவில் உள்ளன. மேலும் இது சரும பிரச்னைகளுக்கும் பயன்படுகின்றன.
5. நேந்திரன்
நேந்திரன் என்பது கேரளத்திலும் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் அதிகம் விளையும் ஒரு வகை வாழைப்பழமாகும். பொதுவாக இவ்வகைப் பழம் சிப்ஸுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. நேந்திரன் பழம் இதய ஆரோக்கியத்திற்கும், சரும பிரச்னைகளை தீர்க்கவும், அல்சர் போன்ற செரிமான பிரச்னையை குறைக்கவும், நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தவும், சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
6. ரஸ்தாளி
தமிழ்நாட்டில் பரவலாக சாகுபடி செய்யப்படும் வாழை வகைகளில் இதுவும் ஒன்றாகும். இது வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சுண்ணாம்புச்சத்து போன்ற ஊட்டசத்துக்களைக் கொண்டுள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் வயிறு சம்பந்தமான அல்சர், செரிமானம் போன்ற பிரச்னைகளை தீர்க்கின்றன.
7. பச்சை வாழைப்பழம்
பச்சை வாழைப்பழம் பழுத்த வாழைப்பழத்தை விட, குறைந்த இனிப்பும், கலோரியும், பரவலான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது. பச்சை வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.
8. பேயன் வாழைப்பழம்
இந்த வாழைப்பழத்தின் தோலானது கெட்டியாக காணப்படும். இதில் இனிப்பு சுவை அதிகமாக காணப்படும். செரிமான பிரச்னையை குறைக்கிறது. அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் உதவுகிறது. குடல் புண்களை குணப்படுத்த உதவுகிறது. இது உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
9. மலைவாழைப் பழம்
இந்த வாழைப்பழங்களில் சிறிய மலை வாழை, பெரிய மலை வாழை என்று இரண்டு வகைகள் உள்ளன. இரண்டிலும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. செரட்டோனின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து மகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது. அதேபோல் உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கிறது. பெரு மலைப்பழம் உடலுக்கு அதிக சூட்டைத் தருவதால், குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்கள் இதைச் சாப்பிடலாம்.
10. ஏலரிசி வாழைப்பழம்
ஏலரிசி வாழைப்பழம்- இவை 'ஏலக்கி வாழைப்பழம்' என்றும் அழைக்கப்படுகின்றன. மற்ற வாழைப்பழங்களை விட, பார்ப்பதற்கு சிறிய அளவில் இருக்கும். இனிப்பான மற்றும் சத்தான வாழைப்பழ வகையாகும். இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அதேபோல் மாதவிடாய் பிரச்சனைக்கும் உதவுகின்றன.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)