
தற்போது உள்ள காலக்கட்டத்தில் ஞாபக மறதி பிரச்னை முதியவர்களுக்கு மட்டுமில்லாமல் இளம் வயதினரையும் பெரிதாக பாதிக்கிறது. ஞாபக மறதியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இதை சரிசெய்ய சில எளிய பயிற்சிகளை செய்வதன் மூலமாக ஞாபக மறதியை குணமாக்கலாம். அவை என்னவென்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. ஞாபக சக்தி அதிகரிக்க சரியான உணவுக்கட்டுப்பாடு அவசியமாகும். சரியான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிப்பதின் மூலமாக ஞாபக மறதியை போக்கி ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும். புரோக்கோலி, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
2. தியானம் செய்வது உடலுக்கும், மனதிற்கும் நல்லதாகும். தினமும் 10 நிமிடம் தியானம் செய்துவருவது நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. இது ஞாபக மறதி பிரச்னையை போக்கி நினைவுத்திறனையும், நம்முடைய மனநிலையையும் மேம்படுத்துகிறது.
3. நம்முடைய ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதன் மூலமாக மூளையை சிறப்பாக செயல்பட வைக்க முடியும். யோகாசனம் போன்ற பயிற்சிகள் செய்வதன் மூலமாக மூளையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் நினைவாற்றல் மேம்படுகிறது.
4. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் பயிற்சிகள் செய்வதின் மூலமாக அதனுடைய செயல்திறனை அதிகரிக்க முடியும். பொதுவாக நாம் எந்த வேலை செய்வதாக இருந்தாலும் வலதுக்கையையே பயன்படுத்துவோம். அதற்கு மாற்றாக இடதுக்கையை உபயோகிப்பதின் மூலமாக மூளையின் செயல்திறனை அதிகரிக்க முடியும். ஞாபக மறதியும் குணமாகும்.
5. நல்ல தூக்கம் மிகவும் முக்கியமானதாகும். தூக்கமின்மை பிரச்னைக்கூட ஞாபக மறதியை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே, நிம்மதியான உறக்கத்தின் மூலமாக அமைதியான மனநிலையை உருவாக்க முடியும். இதனால் ஞாபகசக்தி மேம்படும்.
6. அதிகமாக ஸ்ட்ரெஸ் ஏற்படுவது கூட ஞாபக மறதிக்கு முக்கிய காரணமாகும். மூச்சுப்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்வதின் மூலமாக உடலில் ஏற்படும் ஸ்ட்ரெஸ் குறையும். இதனால் ஞாபக சக்தி அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, வாரத்திற்கு ஒருமுறையாவது யோகா பயிற்சிகள் செய்வது மிகவும் முக்கியமாகும். இந்தப் பயிற்சிகளை தினமும் கடைப்பிடிப்பதின் மூலமாக ஞாபக மறதியை போக்கி ஆரோக்கியமாக வாழுங்கள்.