
வயல்கள், தோட்டங்களுக்கு போயிருந்தால் இந்தப் பழம், செடி, மரம் பற்றி நிச்சயமாக தெரிந்திருக்கும். அந்தக்காலத்தில் இந்தப் பழத்தை இரண்டாக நறுக்கி உப்பு மிளகாய்த்தூள் - கலந்து விற்பார்கள். எலுமிச்சை பழத்தின் மணத்தை ஒத்திருக்கும் கொழிஞ்சிப் பழத்தின் மருத்துவ குணமும் அதிகம்.
கொழிஞ்சிச் செடியை, கொழுஞ்சிச் செடி, கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர். இது இந்தியா மற்றும் இலங்கையில் பொதுவாக காணப்படுகிறது. பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். வறண்ட நிலத்தில் ஓரிரு மழைத் தூறல்கள் இருந்தாலே போதும் நன்கு வளரும். இந்தத் தழையுரம் போட்ட இடத்தில் நெற்பயிர் மிகச் செழிப்பாக வளர்ந்து விளைச்சல் நன்றாக இருக்கும் என்பதால் நன்செய் வயல்களில் விதைத்து தழை - உரமாகப் பயன்படுத்துவர்.
இதன் பழங்கள் எலுமிச்சையை விடப் பெரியதாகவும் நல்ல நறுமணத்தை தருபவையாகவும், சாறு அதிகம் கொண்டும் உள்ளது. எனவே கொலுமிச்சை என்றும் அறியப்படுகிறது. சிட்ரஸ் ஹிஸ்ட்ரிக்ஸ் என்று விஞ்ஞான ரீதியாக அழைக்கப்படுகிறது இந்த சிட்ரஸ் வகை பழம். பழுப்பதற்கு முன்பு கரும் பச்சையாகவும், பழுத்த பிறகு மஞ்சளாகவும் மேற்பரப்புகளில் சுருக்கங்களுடனும் இருக்கிறது.
கொழுஞ்சியின் இலை, காய், பழம் என அனைத்தும் மருத்துவ குணம் படைத்தது. இதன் வேரும் நாட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படுவது சிறப்பு.
கொலுமிச்சை தோலில் லிமோனீன், பீட்டா-பினீன் மற்றும் சபினீன், மற்றும் இலைகளில் சிட்ரோனெல்லால் போன்ற முக்கிய கலவைகளுடன், இலை மற்றும் பழத்தில் பினோலிக் அமிலம் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் இந்த பழத்தின் சாற்றில் பிளோவனாய்டுகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதைத் தவிர விட்டமின் சி, நார்ச்சத்துக்கள், கால்சியம், போலேட், பொட்டாசியம், ரிபோபிளவின், பாஸ்பரஸ் மற்றும் பாந்தோனிக் அமிலம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
நோயெதிர்ப்பு சக்தி கொண்ட இப்பழம் இதய ஆரோக்கியம், இருமல் போன்ற சுவாசப் பிரச்சினைகள், வாய்வழி ஆரோக்கியம், கல்லீரல் ஆரோக்கியம் போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணம் ஆகிறது. மேலும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
செரிமானக்கோளாறு மற்றும் மலச்சிக்கலுக்கு இதன் சாறு சிறந்த மருந்தாகிறது. இதன் செரிமான மண்டலத்தை சீராக்கும் எதிர் அழற்சி பண்புகள் அனைத்து விதமான இரைப்பை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. மலக்குடல் புற்றுநோய், மூலநோய் மற்றும் அல்சர் போன்ற நோய்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது என்கின்றனர்.
இதன் இலைகள் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய் அனைத்து வலிகள் மற்றும் ஒற்றை தலைவலி போன்ற பல நோய்களை குணப்படுத்தவும் இதன் இலைகள் நசுக்கப்பட்டு சில உணவுகளில் நறுமணத்துக்காக சேர்க்கப்படுவதாகவும் சொல்கின்றனர்.
இத்தனை நலன்களைத் தரும் கொழுஞ்சியைக் கண்டால் வாங்கி சாதம் கிளறவும் ஜூஸ் அருந்தவும் பயன்படுத்துங்கள்.