
நம்மில் பலருக்கு வேலைப்பளு, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் தலைவலி ஏற்படலாம். ஆனால், பெரும்பாலான நேரங்களில், தலைவலி ஒரு சாதாரண விஷயம் என நினைத்து அதை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். ஆனால், சில சமயங்களில் இந்த சாதாரண தலைவலி, மூளைக் கட்டி போன்ற தீவிர நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
மூளைக் கட்டி என்பது மூளையிலோ அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ செல்களின் அசாதாரண வளர்ச்சியால் ஏற்படுகிறது. இது புற்றுநோய்க் கட்டியாகவோ (malignant) அல்லது புற்றுநோய் அல்லாத கட்டியாகவோ (benign) இருக்கலாம். மூளையில் 120க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான கட்டிகள் உருவாக வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பரம்பரை, வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கவழக்கக் கோளாறுகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் போன்ற பல்வேறு காரணங்களால் மூளைக் கட்டி உருவாகலாம்.
தலைவலியும் மூளைக் கட்டியும்:
தலைவலி ஏற்படுவது மூளைக் கட்டியின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். ஆனால், எல்லா தலைவலியும் மூளைக் கட்டிக்கான அறிகுறி அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து கடுமையான தலைவலி, தலையில் அதிக அழுத்தம் போன்ற உணர்வு, காலையில் எழுந்தவுடன் அதிக தலைவலி, அல்லது வழக்கமான நிவாரணிகளால் குறையாத தலைவலி போன்றவை மூளைக் கட்டியின் அறிகுறிகளாக இருக்கலாம்.
மூளைக் கட்டியின் பிற அறிகுறிகள்:
மங்கலான பார்வை, இரட்டைப் பார்வை, பார்வை இழப்பு.
காலையில் எழுந்தவுடன் குமட்டல் அல்லது வாந்தி ஏற்படுதல்.
நடக்கும்போது தடுமாற்றம், தலைச்சுற்றல்.
பேசுவதில் சிரமம், வார்த்தைகளை மறந்துவிடுதல்.
சமீபத்திய நிகழ்வுகளை நினைவில் கொள்வதில் சிரமம்.
உடலின் ஒரு பக்கத்தில் உணர்வு இழப்பு அல்லது தசை பலவீனம்.
மனநிலை மாற்றங்கள், எரிச்சல், குழப்பம்.
திடீர் வலிப்பு அல்லது உடல் உதறல்.
அடிக்கடி ஏற்படும் கடுமையான தலைவலி, வழக்கமான வலி நிவாரணிகளால் குறையாத தலைவலி, மேலே குறிப்பிட்டுள்ள பிற அறிகுறிகளுடன் கூடிய தலைவலி போன்றவை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், மூளைக் கட்டியை வெற்றிகரமாக குணப்படுத்த முடியும்.
இதற்கு, சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், அவை தீவிரமான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். எனவே, உங்கள் உடல்நலத்தில் ஏதேனும் அசாதாரண மாற்றங்களை உணர்ந்தால், மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் மூளைக் கட்டியின் அறிகுறிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதன் மூலம், இந்த நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.