

"The greatest weapon against stress is our ability to choose one thought over another", William James கூற்றுப்படி 'மன அழுத்தத்தை வெல்வதற்கான மிகப் பெரிய ஆயுதம் ஒரு எண்ணத்திற்கு பதிலாக மற்றொரு நல்ல எண்ணத்தை தேர்ந்தெடுக்கும் நமது திறனே'.. அதாவது மன அழுத்தத்தை முறியடிக்கும் மிக வலிமையான ஆயுதம் எதிர்மறை எண்ணங்களை விடுத்து நேர்மறை எண்ணங்களை தேர்ந்தெடுக்கும் நம் மனப் பக்குவம் ஆகும்.
இன்றைய நவீன உலகில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நாம், நம் மனம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை பற்றி சிந்திக்க வேண்டும் அல்லவா? உடலில் ஏற்படும் உபாதைகள் கண்களுக்கு தெரியும். ஆனால் மனதில் ஏற்படும் காயங்கள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை..
ஒரு ஆசிரியர் கூறிய கதை நினைவுக்கு வருகிறது. அவர் இரண்டு செடிகளை தன் மாணவர்களிடம் கொடுத்து அதை நட்டு பராமரித்து வரச் சொன்னாராம். ஒரு செடியிடம் தினமும் இனிமையான வார்த்தைகள் அதாவது , "நீ அசைந்து அசைந்து காற்றில் ஆடுவது அழகாக இருக்கிறது" என்று கூறும் படி சொன்னாராம். அதே போல மாணவர்களும் அன்பான வார்த்தைகள் கூறி நீர் ஊற்றி உரம் போட்டு இரண்டு செடிகளையும் வளர்த்து வந்தார்களாம். சில வாரங்கள் கழித்து அன்பு வார்த்தைகள் கூறி பராமரிக்கப் பட்ட செடி பூத்துக் குலுங்கியதாம். இதைக் கண்ட மாணவர்கள் இதனைப் புரிந்து கொண்டு மற்றொரு செடியிடமும் அன்பு வார்த்தைகள் கூறி பராமரிக்க அதுவும் பூத்துக் குலுங்கியதாம். இந்த நிகழ்வு அன்பும் கவனமும் இருந்தால் அது வளர்ச்சியைத் தரும். அது செடிகளுக்கு மட்டும் அல்ல; மனிதர்களாகிய நமக்கும் பொருந்தும்.
மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வழிகள் இதோ உங்களுக்காக...
அதற்கு முதலில் நம் எண்ணங்களை கவனிக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களை நம் மனதில் தேக்கி வைத்துக் கொள்வதற்கு பதிலாக தன்னம்பிக்கையை வளர்க்கும் எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் சில நிமிடங்கள் தியானம் செய்வது , இறை நம்பிக்கையுடன் கூடிய பிரார்த்தனை, ஸ்லோகங்கள் சொல்வது, சூரிய ஒளி படும் படியாக நடைப் பயிற்சி மேற்கொள்வது, நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல இசையைக் கேட்பது , நல்ல எண்ணங்கள் கொண்ட நண்பர்கள் உறவினர்களுடன் பேசுவது போன்றவை மனதுக்கு உற்சாகம் தரும்.
அதே போல நன்றி உணர்வை வளர்ப்பதும் மிக மிக முக்கியம். அன்றைய நாள் நல்லதொரு நாளாக அமைய இறைவனை பிரார்த்தனை செய்வதும் இரவு படுக்க போகும் முன் நல்லதொரு நாள் அமைய உதவியாக இருந்த இறைவனுக்கு நன்றி கூறுவதும் ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
போதுமான தூக்கம், சத்தான உணவு மற்றும் உடற் பயிற்சி ஆகியவையும் மனநலத்திற்கு வலுவான அடித்தளமாக அமைகின்றன. நீங்கள் கேட்கலாம்.. வாழ்க்கையில் பிரச்னைகள் வரவே வராதா என்று... பிரச்னைகள் சோதனைகள் வரத்தான் செய்யும். இன்பமும் துன்பமும் இணைந்தது தானே வாழ்க்கை! பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்பது தான் நம் மன வலிமையை நிர்ணயம் செய்கிறது.
பிரச்னைகள் வரும் போது அதைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் அதன் தீர்வை நோக்கி ஒரு அடியாவது எடுத்து வைக்க வேண்டும். அதுவே மன ஆரோக்கியத்துக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
Your mind is a garden. your thoughts are the seeds. you can grow flowers or you can grow weeds. இந்த பழமொழிக்கு ஏற்ப நம் மனம் எனும் தோட்டத்தில் அன்பு, நம்பிக்கை, கருணை, பொறுமை, நன்றி உணர்வு ஆகிய நல்ல எண்ணங்களை விதைப்போம். அவை வளர்ந்து மலரும் போது நமக்கு மட்டும் அல்லாது நம்மை சுற்றியுள்ளவர்கள் மத்தியிலும் நறுமணம் வீசும்.
பல ஆண்டுகளாக ஒரு சுவாரஸ்யமான கருத்து பரவி வருகிறது. மன வளக் கலை மன்றங்களில் அவர்கள் கூறுவது யாரைப் பார்த்தாலும் முதலில் வாழ்க வளமுடன் என்று கூறுங்கள். அவர்கள் மனதில் கெட்ட எண்ணங்கள் இருந்தாலும் இந்த சொல் மெதுவாக அவர்களை மாற்றி நல்ல எண்ணங்களை உருவாக்கும் என்பது தான். அது போல செடிகளையும் அன்புடன் தொட்டு வாழ்க வளமுடன் என்ற வார்த்தையை கூறினால் அவை செழிப்பாக வளரும். இதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்றாலும் அன்பான வார்த்தைகள் மனித மனதில் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் உண்டாக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
அதனால் நாம் மனமே நலமா? என்று நம்மைக் கேட்டு கொண்டு நம் மனதை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்து கொள்வோம்!
Nothing is impossible.. the word itself says I'm possible.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference