

உங்கள் முன்னேற்றத்திற்கு ஏன் நேர்மறை மனிதர்கள் அவசியம்?
உங்களின் முன்னேற்றம் என்பது உங்கள் கையில் மட்டும் இல்லை. உங்களைச் சுற்றி இருப்பவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை பொறுத்தும் அது தீர்மானிக்கப்படுகிறது என்பது ஆண்ட்ரூ ஜானின் வாக்கு.
நம்மை பாராட்டி, தட்டிக்கொடுத்து உண்மைகளை எப்போதும் தெளிவுபட சொல்பவர்களை நம் அருகிலேயே வைத்துக்கொண்டு அவர்களுடன் நாம் தொடர்பில் இருப்பது நல்லது. ஏனெனில் அத்தகைய மனிதர்கள்தான் நம்முடைய தன்னம்பிக்கையின் உற்சாக டானிக்காக இருப்பார்கள்.
புகழ்ச்சிக்கும், பாராட்டுக்கும் அடிமையாகக் கூடாது என ஆசிரியர் கற்றுக் கொடுத்திருக்கிறாரே என நீங்கள் நினைக்கலாம். உண்மையில் பாராட்டுக்களும், நியாயமான புகழ்ச்சி உரைகளும் நமக்கு உத்வேகம் அளிக்கின்றன என்பதில் மாற்று கருத்து கிடையாது.
உண்மையாக பாராட்டுபவர்கள் யார் என்றும் வெறும் புகழ்ச்சிக்காக பாராட்டுபவர்கள் யார் என்பதை பிரித்துணர கற்றுக்கொண்டால் பாராட்டாலும் புகழ்ச்சியாலும் உங்களுக்கு தலைக்கனம் வராது.
ஒரு ஞானி ஒரு ஊருக்கு வந்திருந்தபோது முக்கிய புள்ளி ஒருவர் சந்திக்க வந்திருந்தார். அப்போது ஞானி அந்த முக்கிய புள்ளியிடம், " உங்களுக்கு ஏதாவது பிரச்னையா? நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்" எனக் கேட்டார்.
"பிரச்னை ஒன்றும் இல்லை சுவாமி." இதற்கு முன் நான் கஷ்டப்பட்டு கொண்டிருந்தேன். இப்போது வாழ்வில் முன்னேறி சந்தோஷமாக இருக்கிறேன். இந்த நிலையை அருளிய கடவுளுக்கு நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன். அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வந்திருக்கிறேன்" என்று கூறினார்.
அதற்கு ஞானி, நீங்கள் வாழ்வில் முன்னேறி சந்தோசமாக இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டியதில்லை. மாறாக நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என உங்களை வாழ்த்திய நல் உள்ளங்களுக்கு நன்றி சொல்லுங்கள். உங்களிடம் நேர்மறையாக கூறிய வார்த்தைகள் தான் நீங்கள் நன்றாக இருப்பதற்கு காரணம். ஆகவே அவர்களுக்கு முதலில் நன்றி கூறுங்கள் என்றார் ஞானி.
உண்மையிலேயே நல்ல மனிதர்களுடன் பழக வேண்டும் என பெற்றோர்கள் கூறுவது முற்றிலும் உண்மையான வார்த்தை. ஏனென்றால் நம்மைச்சுற்றி நேர்மறை எண்ணமுடைய மனிதர்கள் இருந்து, நம்மை தட்டிக்கொடுத்து பாராட்டி நம்முடைய வளர்ச்சியில் பூரிப்படைவர்களை பொறுத்துதான் நம்முடைய வளர்ச்சியும் இருக்கும்.
தோல்விகள் நேர்மறை சிந்தனை கொண்டவர்களின் அருகில் கூட நெருங்குவதில்லை. நாம் துவண்டு இருக்கும்போது நேர்மறை வார்த்தைகள் நமக்கு துள்ளி எழ உறுதுணையாக இருக்கும். மாறாக "உன் காட்டுல மழை. நல்லா சம்பாதிக்கிற. எனக்குத்தான் பிரச்னை மேல பிரச்னை. என்ன பண்றதுனே தெரியமாட்டேங்குது" என்று எதிர்மறை எண்ணத்துடன் பேசுபவர்களிடமிருந்து தள்ளி இருப்பது மிகவும் நல்லது.
அவர்கள் அனைவரிடமும் இதே கருத்தைதான் வெளிப்படுத்துவார்கள் என்பதால் தயக்கமே இல்லாமல் உரையாடலை முடித்துவிட்டு நகர்ந்துவிடுங்கள்.
உண்மையாக பாராட்டுபவர்கள் பக்கத்தில் இருந்தால் நாம் சோம்பேறியாக மாட்டோம். உதாரணமாக விளையாட்டு மைதானத்தில் பத்தாயிரம் ரன்களைக் கடந்து விராட் கோலி சிக்ஸர்களையும் போர்களையும் விளாசினாலும் அதற்கு பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்துவார்கள்.
கோலி கைத்தட்டலையும் ஆரவாரத்தையும் மனதிற்குள் ரசித்துக்கொண்டே அடுத்த பந்தையும் சிக்ஸருக்கு தூக்குவார். கோலிக்கே பாராட்டு தேவைப்படும்போது நமக்கு வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை.
மனம் என்ற தொட்டியை குப்புற கவிழ்த்து வைத்துவிடுங்கள். இல்லை என்றால் குப்பை வைத்திருப்பவர்கள் அனைவரும் அதில் குப்பையை கொட்டி நிறைத்து விடுவார்கள் .நண்பராக இருக்கும் எவரும் உங்களுடைய மனத் தொட்டியில் குப்பைகளை கொட்ட மாட்டார்கள். இதனை நினைவில் வைத்துக் கொண்டால் உங்கள் வளர்ச்சி அபிரிமிதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
உங்கள் மனதின் வாசல்களைத் தகுதியற்ற எதிர்மறை எண்ணங்களுக்குத் திறக்காமல் மூடுவதன் மூலம், உங்களைச் சுற்றி எப்போதும் ஒரு வெற்றியாளருக்கான வளமான சூழலை உருவாக்கக் கற்றுக்கொள்வீர்கள்.