எப்போதும் நீர் நிலைகளும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிகவும் பசுமையாகவும் மனதை மயக்கும் அளவுக்கு ரம்மியமாகவும் இருக்கும். நீர் நிலைகளை சுற்றி தான் உயிர்கள் உருவாகின. நகர மயமாதலுக்கு முன்னர் வரை மக்கள் நீர் நிலைகளுக்கு அருகில் தான் வசித்தனர். இப்போதும் கூட உலகப் பெரு நகரங்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு நதிக்கரையில் தான் அமைந்துள்ளன.
இயற்கையில் உருவான பசுமையான இடங்களில் இருப்பது மன ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடற்கரை, ஆற்றங்கரை, குளங்கள், பூங்காக்களில் உள்ள நீரூற்றுகள் போன்றவை உங்களின் கண்களை கவர்வதொடு மனதையும் இதமாக்குகின்றன.
வார இறுதியில் பலரும் விரும்பிச் செல்லும் இடம் கடற்கரைகள். அங்கு பாய்ந்தோடும் அலைகளும், சில்லென்ற கடல் காற்றும் மேற்புறம் அடிக்கும் வெயிலும் மனதை இதமாக்கும். கடற்கரை அலைகள் ஒவ்வொரு முறையும் உங்களின் பாதம் தொட்டு இழுக்கும் போது, உங்களின் மன அழுத்தத்தையும் சேர்த்து இழுத்து செல்கிறது. கடற்கரை மிகவும் அமைதியை மனதுக்கு தருகிறது. அதோடு மகிழ்ச்சியையும் சேர்த்து தருகிறது.
அருவிகள், மலை மீது இருந்து வேகத்தோடு தரையில் பாய்ந்து வந்த வேகத்தில் தரையில் உள்ள பாறையில் மோதி நீர் திவலைகள் ஆவியாகும் அற்புதமான இடம். அருவியில் குளிப்பது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. வழி நெடுக உள்ள மூலிகைச் செடிகளில் நனைந்து அதன் மருத்துவக் குணங்களையும் எடுத்துக் கொண்டுதான் அருவி நீர் வருகிறது. அருவியின் அருகில் இருந்து இயற்கையை ரசித்தால், கவிதைகள் கூட அருவிகளாய் கொட்டும்!
ஆறுகள் மற்றும் குளங்கள்:
பொதுவாக ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு ஆற்றின் கரைகளில் தான் உருவாகியுள்ளது. ஆற்றங்கரை அருகில் நிச்சயம் ஒரு கோவில் இருக்கும். அதன் அருகில் பெரிய ஆல மரங்களும் இருக்கும். இயற்கையின் பெரும் கொடை ஆற்றங்கரையில், குளக்கரையில் இருக்கும் ஆல மரங்கள். இந்த இடத்தில் வழக்கமாக பிள்ளையார் கோவில்கள் இருக்கும். எப்போதும் சலசலப்பு மிகுந்த காற்று வீசிக் கொண்டே இருக்கும். ஓடும் தண்ணீரின் அமைதியும், நீர் கலந்த காற்றும் ஆலமர நிழலும் மனதை அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கும். குளம் அருகில் உள்ள படிக்கட்டுகள் தான் உள்ளூரின் சட்டசபைகள்; பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் அமர்ந்து கூடி பேசும் இடம்.இந்த இடங்களில் எப்போதும் ஜன நடமாட்டம் இருக்கும். இந்த பகுதியின் இயற்கையான சூழல் மனதில் உள்ள கவலைகளை மறக்க செய்யும்.
எப்போதும் நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள இடங்கள் உங்களின் மன அழுத்தத்தை குறைக்கும். இதனால் ரத்த அழுத்தம் சமநிலையில் இருக்கும். உங்களின் இதய ஆரோக்கியம் மேம்படும். எப்போது உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலும் அருகிலுள்ள நீர்நிலைகளின் சென்று சிறிது நேரம் காற்று வாங்கிவிட்டு வாருங்கள். உங்களின் ஆரோக்கியம் மேம்படும்.