
கர்ப்பப்பை அகற்றுவதால் மாதவிடாய் நிற்பது, இடுப்பு வலி மற்றும் அசாதாரண ரத்தப்போக்கு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம், கர்ப்பம் தரிக்க இயலாமை போன்ற நன்மைகள் உண்டு. ஆனால் கர்ப்பப்பை அகற்றுவதால் ஏற்படும் பக்க விளைவுகளும் அதிகம் இருக்கும்.
நன்மைகள்:
1) கர்ப்பப்பை அகற்றிய பிறகு பெண்களின் மாதவிடாய் தொல்லைகள் இனி இருக்காது. கர்ப்பப்பை இல்லாததால் கர்ப்பம் தரிக்க சாத்தியம் இல்லை. தொடர்ந்து இடுப்பு வலி மற்றும் ஒழுங்கற்ற அதிகமான ரத்தப்போக்கு போன்ற பிரச்னைகள் தலைதூக்காது. சில சந்தர்ப்பங்களில் கருப்பை புற்றுநோயின் அபாயத்தை குறைக்க கருப்பை நீக்கம் உதவும்.
2) கர்ப்பப்பையை அகற்றுவதால் (hysterectomy), கருப்பையை பாதிக்கும் கடுமையான உடல் நலப் பிரச்சினைகளான நார்த் திசுக் கட்டிகள், எண்டோமெட்ரியோசிஸ், கருப்பைச் சரிவு மற்றும் புற்றுநோய் போன்றவற்றின் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
3) லேபராஸ்கோபிக் முறையில் கருப்பை நீக்குவது நோயாளிகளுக்கு குறைந்த வலி, இரத்தப்போக்கு மற்றும் நோய் தொற்றுகள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. அத்துடன் விரைவாக குணமடைந்து சாதாரண நடவடிக்கைகளுக்கு விரைவாக திரும்பவும் முடிகிறது.
பக்க விளைவுகள்:
1) ஹார்மோன் மாற்றங்கள்:
கருப்பைகள் அகற்றப்பட்டால் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்வதை நிறுத்தி விடும். இது உடனடியாக மெனோபாஸை அனுபவிக்க வழி வகுக்கும். இதன் அறிகுறிகளான சூடான ஃப்ளாஷ்(hot flashes), இரவில் வியர்த்தல், யோனி வறட்சி, மனநிலை மாற்றங்கள் போன்றவை ஏற்படும்.
2) அறுவை சிகிச்சை தொடர்பான ஆபத்துகள்:
பிற அறுவை சிகிச்சைகளைப் போலவே கருப்பை நீக்கமும் சில ஆபத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் ரத்த இழப்பு மற்றும் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
3) உளவியல் பாதிப்புகள்:
கருப்பை அகற்றப்படுவது சில பெண்களுக்கு உணர்ச்சி ரீதியாக ஒரு சவாலாக இருக்கலாம். உளவியல் ரீதியாக மனச்சோர்வு ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.
4) சிறுநீர்ப்பை மற்றும் குடல்:
கருப்பை அகற்றிய பிறகு (hysterectomy) அந்த இடம் சிறு மற்றும் பெருங்குடல் போன்ற உறுப்புகளால் நிரப்பப்படலாம். இது சிறுநீர்ப்பை அல்லது குடல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் இந்த உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சிறுநீர் அடங்காமைக்கு வழிவகுக்கும்.
5) மாதவிடாய் அறிகுறிகள்:
அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில நாட்களுக்கு அல்லது வாரங்களுக்கு ரத்தப்போக்கு மற்றும் யோனி வெளியேற்றம் இருக்கலாம். கருப்பை அகற்றப்பட்ட பிறகு ஆரம்பத்தில் மாதவிடாய் நிறுத்த அறிகுறிகள் ஹாட் பிளாஷஸ் ஏற்படலாம்.
இந்த மாற்றங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவரவர்கள் உடல் நிலையைப் பொறுத்து மாறுபடலாம். மற்ற சிகிச்சைகள் பலனளிக்காத பட்சத்தில் மட்டுமே இந்த அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. எனவே தகுந்த மருத்துவ ஆலோசனைப் பெற்று அதைப் பின்தொடர்ந்தாலே போதுமானது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)