பிரியாணி இலை என்றாலே அது வாசனைக்காக பயன்படுத்தப்படுவது என்றே பலருக்கும் தெரியும். ஆனால் அதை இப்படியும் பயன்படுத்தலாம் என்று பல வழிகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தமாலபத்திரி, லவங்கப்பத்திரி, பிரியாணி இலை, பட்டை இலை, மலபார் இலை, பிரிஞ்சி இலை போன்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த இலைகள், முழுக்க முழுக்க மருத்துவ குணம் கொண்டவை. துத்தநாகம், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், தாமிரம், மெக்னீசியம், போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கும் பிரியாணி இலைகள் வெறும் வாசத்துக்கானவை மட்டுமல்ல, வாழ்நாளை அதிகரிக்க செய்பவை என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்திய உணவுகளில் அதிகம் ஈர்க்கப்படும் உணவுகளில் ஒன்று பிரியாணி தான். கடந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலிலும் கூட பிரியாணிக்கு தான் முதலிடம். இந்த நிலையில் அந்த பிரியாணியில் போடப்படும் இலை என்பதால் பிரியாணி இலை என அழைக்கப்படுகிறது. இந்த இலைகளை சாப்பிடமுடியாது என்பதால் நாம், அதை தூக்கி போட்டு விட்டு தான் பிரியாணியை சாப்பிடுகிறோம். ஆனால், இதில் எண்ணற்ற நன்மைகள் இருப்பதால் இனி நீங்கள் பிரியாணி இலையை சாதரணமாக நினைக்க மாட்டீர்கள்.
இந்த இலைகள் தூக்கமின்மையை போக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சமீப காலமாக பலரும் ஸ்ட்ரெஸ் என்ற வார்த்தையால் முடங்கி தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இது அருமருந்து என்றே சொல்லலாம். அவர்கள் பிரியாணி இலையை வைத்து டீ போட்டு அருந்தலாம். இதன் மூலம் தூக்க பிரச்சனை சரியாகும்.
இது இல்லாமல், பிரியாணி இலைகளை வறுத்து அதில் வரும் புகையை உள்ளிழுத்தால் கூட மன அழுத்தம் குறைந்து நிம்மதியான தூக்கம் வரும் எனவும் சொல்லப்படுகிறது.
பழங்காலங்களில் மக்கள் தங்கள் வீடுகளில் பிரியாணி இலைகள் மற்றும் வேப்பிலைகளை புகைப்பிடித்தனர், இது தொற்றுநோயை தடுக்கிறது. இந்த இலைகளில் இருந்து வெளிப்படும் புகை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் இருக்கும் மாசுகளை அழிப்பதுடன், வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்படும் தொற்றுகளையும் தடுக்கிறதாம்.
மேலும் பிரியாணி இலைகளை எரிப்பது ஆன்மீகத்துடன் தொடர்புடையதாம். இந்த இலைகளில் இருந்து வரும் புகை எதிர்மறை ஆற்றலை நீக்கி அந்த இடத்தில் நேர்மறை ஆற்றலை உருவாக்குமாம். இதனால் இனி நீங்கள் பிரியாணி இலையை சாதரணமாக எண்ணாமல் அதிலுள்ள நன்மையை அறிந்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.