

காலையில் எழுந்தவுடன் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எப்போதுமே ஒரு பெரிய குழப்பம் இருக்கும். வெறும் வயிற்றில் ஒர்க்அவுட் செய்யலாமா அல்லது ஏதாவது லேசாக சாப்பிட வேண்டுமா என்பதுதான் பலருடைய சிந்தனையாக இருக்கும். இரவு முழுவதும் நாம் எந்த ஒரு உணவும் எடுத்துக்கொள்ளாததால், நமது உடலில் இரத்த சர்க்கரை அளவு மற்றும் கிளைகோஜன் ரொம்பவே குறைவாக இருக்கும்.
இந்த நிலையில் அப்படியே நேராகச் சென்று கடினமான பயிற்சிகளை செய்தால் சீக்கிரமே சோர்வடைந்து பாதியிலேயே திரும்பி விடுவோம். இதற்கு ஒரு சூப்பரான இயற்கையான தீர்வு இருக்கிறது. ஜிம்முக்கு கிளம்புவதற்கு முன் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவது உங்களின் ஒர்க்அவுட் ரிசல்ட்டை பல மடங்கு அதிகரிக்கும்.
உடனடி எனர்ஜி தரும் கார்போஹைட்ரேட்!
நமது தசைகள் ரொம்பவே சுறுசுறுப்பாக வேலை செய்ய ATP எனப்படும் ஆற்றல் தேவைப்படுகிறது. இதற்கு குளுக்கோஸ் மிக மிக அவசியம். இரவில் தூங்கி எழும்போது உடலில் உள்ள எனர்ஜி ஸ்டோரேஜ் முழுவதும் முழுமையாக காலியாகி இருக்கும். இந்த நேரத்தில் பழங்கள் சாப்பிடும்போது, அதிலிருக்கும் கார்போஹைட்ரேட் உடனடியாக இரத்தத்தில் கலந்து உடலுக்கு ஒரு அட்டகாசமான இன்ஸ்டன்ட் எனர்ஜியைக் கொடுக்கிறது. இது உடற்பயிற்சி செய்யும் போது நாம் சோர்வாகாமல் நீண்ட நேரம் ஆக்டிவாக இருக்க பெரிதும் உதவுகிறது.
இரட்டை சர்க்கரை!
வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களில் குளுக்கோஸ், Fructose என இரண்டு வகையான இயற்கையான சர்க்கரைகள் உள்ளன. இதில் குளுக்கோஸ் உடனடியாக இரத்தத்தில் கலந்து எனர்ஜியைக் கொடுக்கும் வேலையை செய்யும். அதே சமயம் பிரக்டோஸ் நமது கல்லீரலில் மெதுவாக உடைக்கப்பட்டு சீரான ஆற்றலை தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கும்.
இந்த அட்டகாசமான காம்பினேஷன் இருப்பதால், கடினமான எடைத் தூக்கும் பயிற்சி செய்யும்போது கூட நமக்கு எந்த ஒரு களைப்பும் ஏற்படாது. குறைந்தபட்சம் இருபது முதல் முப்பது கிராம் கார்ப்ஸ் பழங்கள் மூலம் கிடைத்தால் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
நீர்ச்சத்து, மினரல்கள்!
தூங்கி எழுந்தவுடன் நமது உடல் இயற்கையாகவே கொஞ்சம் நீர்ச்சத்தை இழந்திருக்கும். ஆரஞ்சு, தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து உடனடியாக கிடைத்து உடல் மீண்டும் புத்துணர்வு ஆகிவிடும்.
மேலும் பழங்களில் உள்ள பொட்டாசியம் போன்ற முக்கியமான மினரல்கள் தசைகள் சுருங்கிப் போகாமலும் பிடிப்புகள் வராமலும் பாதுகாக்கிறது. கடினமான பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் அழுத்தத்தை குறைக்க இதிலுள்ள வைட்டமின் சி ஒரு பாதுகாப்பு கவசம் போல சிறப்பாகச் செயல்படும்.
ஆராய்ச்சிகள் சொல்லும் உண்மை!
பல மருத்துவ ஆய்வுகளில் கூட இந்த பழங்களின் மகிமை தெள்ளத்தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கடைகளில் விற்கும் செயற்கையான மற்றும் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் ஜெல்களை விட ஒரு சாதாரண வாழைப்பழம் சாப்பிடுவது சைக்கிளிங் போன்ற நீண்ட நேர பயிற்சிகளில் அதிக ஸ்டாமினாவை கொடுப்பதாக கண்டுபிடித்துள்ளார்கள்.
செயற்கையான எனர்ஜி டிரிங்க்ஸ் குடித்தால் சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் வரலாம். ஆனால் முழுமையான இயற்கையான பழங்களை சாப்பிடும்போது செரிமானமும் ஈஸியாக நடக்கும்.
எனவே, காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக ஒரு பழம் சாப்பிட்டுவிட்டு செல்வது உங்களின் ஒட்டுமொத்த ஃபிட்னஸ் பயணத்திற்கும் ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட் ஆகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)