
'இனிப்பு’ என்ற வார்த்தையைக் கேட்டாலே எல்லோரும் முதலில் உணர்வது ஒருவித பாசிட்டிவ் வைப் (Positive vibe) தான். ஆனால், அப்படிப்பட்ட இனிப்பை அதிகம் சாப்பிட்டால் பலரும் நெகட்டிவாகத்தான் உணர்வார்கள் (Negative side effects). அதை முற்றிலும் சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன ஆகும்?
முற்றிலும் தடுத்தால் நமக்கு என்ன பலன்?
சர்க்கரை உட்கொள்ளலைக் குறைத்தால் எதிர்பாராத பல ஆச்சரியமான பலன்களைத் தரும். அதில் மிகவும் முக்கியமான ஒன்று நீடித்த ஆற்றலை (sustained energy) நம்மால் தக்கவைக்க முடியும். காரணம் சர்க்கரை நம் உடலில் பல ஏற்ற, இறக்கங்களை ஏற்படுத்தி உடலில் உள்ள நிலையான ஆற்றலை குறைத்துவிடும். சர்க்கரை எடுப்பதைக் குறைக்கும்போது உடலில் உள்ள தேவையற்ற வீக்கங்கள் மறையும்; முகப்பரு குறையும்; சரும ஆரோக்கியமும் மேம்படும்.
நரம்பு சம்பந்தமான பிரச்னைகளில் (neurotransmitters diminishes) இருந்து விடுபடுவோம். இதனால் நம் மனம் தெளிவு (mental clarity) பெறும் மற்றும் மனநிலை (mood stabilization) என்றும் நிலையாக இருக்கும். சிறந்த தூக்கத்தின் தரம் மேம்படும். காலப்போக்கில், எடை மேலாண்மை (weight management), நீரிழிவு (Diabetes) மற்றும் இதய நோய்களின் ஆபத்தைக் குறைக்கலாம்.
உங்களுக்கேற்ற அளவுகள்?
பரிந்துரைக்கப்பட்ட தினசரி சர்க்கரை உட்கொள்ளல் வயதுக்கு ஏற்ப மாறுபடும்.
2-18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (American Heart Association) ஒரு நாளைக்கு 25 கிராம்
(6 டீஸ்பூன்) சர்க்கரையை எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கிறது.
இதுவே, பெரியவர்களில் ஆண்களுக்கு 36 கிராம் (9 டீஸ்பூன்) மற்றும் பெண்களுக்கு 25 கிராம் (6 டீஸ்பூன்) மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்கிறார்கள்.
இந்த வழிகாட்டு பரிந்துரைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் வரும் பழங்கள் மற்றும் பாலில் இயற்கையாக நிகழும் சர்க்கரைகளை (Natural sugars) குறிப்பிடவில்லை. நாம் உண்ணும் சாக்லேட், குளிர்பானங்கள், இனிப்பு பலகாரங்களில் சேர்க்கப்படும் (added sugars) சர்க்கரையின் அளவைத்தான் குறிப்பிடுகின்றனர்.
நாம் இந்த வரம்பை மீறினால் என்ன ஆகும்?
இந்த வரம்புகளை மீறும்போது அந்தந்த வயதிற்கேற்றாற்போல் பல விளைவுகளை ஏற்படுத்தும். குழந்தைகளின் அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் அவர்களை நிதானமாக இருக்க வைக்காமல் எல்லா நேரமும் துருதுருவென்று இருக்க வைக்கும் (hyperactivity). பின் உடல் பருமன், பல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
பதின்வயதினர்களுக்கு (Teenagers) ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் (hormonal imbalances), முகப்பரு மற்றும் மனநிலை மாற்றங்களை (mood swings) ஏற்படுத்தும்.
பெரியவர்களுக்கு (Adults) எடை அதிகரிப்பு, உடலுக்கு தேவையான இன்சுலின் சுரப்பைத் தடுக்கும். இருதயப் பிரச்னைகள் போன்ற அபாயங்களைத் தரும்.
முதியவர்கள் அதிகப்படியான சர்க்கரையை எடுத்தால் அறிவாற்றல் குறைவை அதிகப்படுத்தும் மற்றும் வகை 2 நீரிழிவு (type 2 diabetes) நோய் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும்.
‘அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’ என்பார்கள். ஆனால், இந்தச் சர்க்கரையை (added sugars) ஒரு சிறு அளவு எடுத்தாலே பல எதிர்மறைத் தாக்கங்களை நமக்கு உண்டாக்குகிறது. எனவே, இதை மனதில் வைத்து இனிப்பின் அளவைக் குறைத்து ருசித்தாலே அனைவரும் ஆரோக்கியமாக இருப்போம்.