சுட சுட சாதம் வடித்தால் மட்டும் போதுமா? கொதிக்க கொதிக்க குழம்பு வேண்டுமே! காரக் குழம்பு, புளிக்குழம்பு, ரசம்-னு என்ன குழம்பு வச்சாலும் காரம், புளிப்புத்தன்மை என அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். இதில் ஏதேனும் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் சுவை கெட்டுவிடும் அல்லவா? இத்தகைய சுவையை சரியாக கொண்டுவர வேண்டும் என்றால், குழம்பு வைக்கும் போது சேர்க்கும் பொருட்களில் கவனம் தேவைப்படும்.
அந்தவகையில், குழம்பு வைக்கும் போது தவிர்க்க முடியாத ஒரு பொருள் என்றால் அது புளிதான். இதை குழம்பில் சேர்க்கவில்லை என்றால், குழம்பை நாம் சேர்க்க மாட்டோம். அந்த அளவிற்கு புளி சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இவ்வாறு குழம்பிற்கு அதிகமாக தேவைப்படும் புளி, நம் உடம்பிற்கும் அதிகமாக தேவை என்பது உங்களுக்கு தெரியுமா? புளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் C, ஃபிளாவனாய்டுகள் (Flavonoids), கரோட்டின்கள் (carotenes) வைட்டமின் B காம்ப்ளக்ஸ் போன்றவை உள்ளன.
இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவியாக இருக்கும். குறிப்பாக செரிமானத்தை தூண்டவும், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் புளி முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே புளியில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்களை அறிந்துக் கொள்வது அவசியமாகிறது.
புளியில் உள்ள நன்மைகள்:
புளியில் டார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் ஆகிய மூன்றும் இணைந்து இருப்பதால், உடலில் இருக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும், கொழுப்பினையும் இது குறைக்கும்.
புளியில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.
இதில் உள்ள மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவியாக இருக்கும்.
புளியில் வைட்டமின் C இருப்பதால், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது, எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
புளியை உணவில் எடுத்துக்கொள்வதால், சருமம் பளபளப்பாகும்.
சர்க்கரையினை கட்டுக்குள் வைத்திருக்க, புளி உதவியாக இருக்கும்.
புளியில் நார்ச்சத்து அதிகம். இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.
புளியினை உணவில் சேர்ப்பதால், புற்றுநோய் தொடர்பான கட்டிகள் உருவாகாமல் தடுக்க முடியும்.
மேலும், புளியை உணவில் சேர்த்து கொள்ளும் போது, பூஞ்சை எதிர்ப்பு செயல்பாட்டை அது அதிகரிக்க செய்யும்.
புளி ஒரு டானிக் போலவும், கிளீனிங் ஏஜென்ட் போலவும் செயல்படுவதாக கூறப்படுகிறது. இது குடல் மற்றும் பிற செரிமான உறுப்புகளின் செயலிழப்பைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது.
எனவே புளியை சட்னிகள் முதல் குழம்புகள் வரை அனைத்து உணவிலும் சேர்த்துவிடுங்கள். அது சுவையை அள்ளிக் கொடுப்பதோடு, ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
குறிப்பு: அல்சர் இருக்கும்போது புளியை அதிகம் எடுக்கக் கூடாது. குழம்பில் தக்காளியை அதிகம் சேர்க்கும்போது புளியைக் குறைத்துக்கொள்ளவது நல்லது. புளியை வெறும்வயிற்றில் சாப்பிட்டால் தேவையற்ற வயிற்றுக்கோளாறுகளை உண்டு பண்ணலாம். எவ்வளவு நன்மை அளிக்கும் உணவாக இருந்தாலும் சரி, தவிர்க்க வேண்டிய இடங்களில் தவிர்த்துக் கொள்வது நல்லது.