தாமரை மலர்ந்து இருப்பதை பார்த்தால் அனைவருக்கும் அதை பறிக்க வேண்டும், பூஜைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற ஆவல் தோன்றுவதுண்டு. தாமரை மலர் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துகின்றன என்பதை இப்பதிவில் காண்போம் .
தாமரையின் பூ, கிழங்கு, கொட்டை, தண்டு, இலை என இவை அனைத்தும் மருத்துவ பயன்கள் உடையவை.
விளக்கில் பசு நெய் அல்லது இலுப்பை எண்ணெய் விட்டு தாமரை நாரில் செய்த பஞ்சை உபயோகித்து ஏற்றப்படும் விளக்கை பார்க்கும் பொழுது கண் குளிர்ச்சியைப் பெறும்.
தாமரைப் பஞ்சை வாங்கி கோயில்களுக்கு விளக்கு ஏற்றலாம்.
தாமரைக்கொடி நார் வாங்கி நூல் நூற்று அரை ஜான் கயிறு, பூணூல் முதலியவற்றை தயார் செய்கின்றார்கள். இவற்றை அணிவதால் இருதயத்துக்கும், நரம்புகளுக்கும் நல்லது என்று கூறப்படுகிறது.
தாமரைக்கிழங்கை மணி போல் செய்து ஜெபமாலைகளாக கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.
தாமரைக் கிழங்கை மார்பு வலி, வாந்தி இவைகளுக்கு தண்ணீரில் இழைத்துக் கொடுக்க வியாதி நீங்கும்.
தாமரை இலையில் பழைய சாதம், தயிர் சாதம் வைத்து சாப்பிடலாம். இலையை திருப்பிப் போட்டு அதன் கீழ் பாகத்தில் சூடான பதார்த்தங்களை வைத்து சாப்பிட வேண்டும். அப்பொழுது அதன் வாசனை ஆகாரங்களில் வராமல் இருக்கும்.
தாமரை இலையை காய வைத்து தூள் செய்து காபிக்கு பதிலாக உபயோகப்படுத்தலாம்.
உலர்ந்த தாமரை இலையின் தூளைத் தாது விருத்தி லேகியங்களிலும், மூளை சம்பந்தமான வியாதிகளுக்கு தயார் செய்யும் மருந்துகளிலும் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இலையில் வங்கச் சத்து உள்ளதால் இருதயத்தில் நன்றாக வேலை செய்யக்கூடியதாக உள்ளது.
தாமரைக் கொட்டையை சிங்கோ டா என்று கூறுவார்கள். கொட்டை பச்சையாக இருக்கும். அதை பிரித்தால் அதற்குள் வெள்ளையாக முந்திரிப் பருப்பு போன்ற வடிவில் ருசியில் ஒரு விதை இருக்கும். அதை சாப்பிடலாம். இது இரத்த விருத்தியை உண்டு பண்ணுவதுடன், உஷ்ணத்தையும் குறைக்கும்.
தாமரைப் பூவில் சிவப்பு வெள்ளை என இரு வகை உண்டு. இவற்றில் வெள்ளை புஷ்பம் இருதயத்துக்கும், மூளைக்கும் நல்லது. சிவப்பு மூல உஷ்ணத்திற்கு நல்லது.
வெண்தாமரை மூளையில் அதிகமாக வேலை செய்யக்கூடியது, செந்தாமரை இருதயத்திலும் ரத்தத்திலும் நன்றாய் வேலை செய்யக் கூடியது என்பதை உணர்தல் வேண்டும். என்றாலும் ஏறக்குறைய இரண்டும் சம குணத்தை உடையது.
தாமரைப் புஷ்பத்தை நீரில் காய்ச்சி காலை மாலைகளில் குடிக்க மூளை பலப்படும். தேகம் சிவந்து காணும். அதிக ஜுரம் கொண்டவர்கள் இந்த கசாயத்தை குடிக்க ஜுரம் படிப்படியாகக் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)