

திபெத்தின் (Tibet) மலைப்பாங்கான பிரதேசத்தில் விளையும் பிளாக் டைமன்ட் ஆப்பிள் (Black Diamond Apple) தெரியுமா?
சாதாரணமாக நாம் சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்த கோல்டன் கலர் ஆப்பிள் பழங்களைப் பார்த்திருப்போம். சாப்பிட்டும் இருப்போம். ஆனால், அடர் பர்ப்பிள் நிறத்தில், கிட்டத்தட்ட கருமை நிறம் கொண்டு தோற்றமளிக்கும் பிளாக் டைமன்ட் ஆப்பிளை பலர் பார்த்திருக்கக் கூட மாட்டோம். இந்த வகை அபூர்வமான பிளாக் டைமன்ட் ஆப்பிள் திபெத் நாட்டின் நைங்ச்சி (Nyingchi) என்ற உயரமான மலைப் பகுதிகளில் வளரும் மரங்களில் காணப்படுகின்றன. இது ஹுவாநியூ (Huaniu) ஆப்பிள் குடும்பத்தை சேர்ந்தது. இதன் திடமான இனிப்பு சுவை நாவிற்கு விருந்தாகும். இது கரையக் கூடிய நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற, உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் தரக்கூடியதொரு சூப்பர் பழமாகும். இதை அப்படியே கடித்து சாப்பிடலாம். ஃபுரூட் சாலட், ஜூஸ், டெசெர்ட், ட்ரய்டு (dried), ஆப்பிள் சிடார் வினிகர், பேக்ட் ஆப்பிள் பீ (baked apple pie) போன்ற உணவுகளாக செய்தும் சாப்பிடலாம். இப்பழத்திலுள்ள இதே குணங்கள் கொண்ட 'ஆர்கான்சாஸ் பிளாக் (Arkansas Black)' என்ற ஒரு வகை ஆப்பிள் மரங்கள் அமெரிக்காவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த வகை ஆப்பிள் மரங்கள், உக்கிரமான வெயில், அடர்த்தியான அல்ட்ரா வயலட் கதிர்வீச்சு, இரவு பகல் மாறுதலில் உண்டாகும் வெப்ப நிலை வேறுபாடு போன்ற இயல்புக்கு மாறான சூழல்களில் வளர வேண்டிய நிர்ப்பந்தத்தினாலேயே, இவை உற்பத்தி செய்யும் பழங்கள் கருமை நிறம் கொண்டுள்ளன என்று கூறப்படுகிறது.
பிளாக் டைமன்ட் ஆப்பிள் தரும் ஆரோக்கிய நன்மைகள்:
1.இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தீங்கு தரும் ஃபிரீ ரேடிகல்களை அழித்து, சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் கரும் புள்ளிகள் தோன்றாமல் பாதுகாக்கவும், உடல் முதுமையடைந்த தோற்றம் பெறுவதைத் தடுக்கவும் உதவி புரிகின்றன.
2. இதிலுள்ள அதிகளவு பெக்டின் (pectin) என்ற சத்து குடல் இரைப்பை ஆரோக்கியம் மற்றும் செயல்பாடுகள் மேம்படவும், ஜீரணம் சிறக்கவும் உதவுகிறது.
3. இதன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் மற்றும் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் எலும்புகளின் மஜ்ஜை (bone marrow) குறையாமல் பாதுகாத்து, ஆஸ்டியோ பொரோசிஸ் நோய் வரும் அபாயத்தைத் தடுக்க உதவுகின்றன.
4. வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக நடைபெறவும், எக்சிமா (eczema), சொரியாசிஸ் (psoriasis), ரோசாசியா (rosacea) போன்ற சரும நோய்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் உதவி புரிகின்றன.
5. இதிலுள்ள அதிகளவு நார்ச்சத்து மற்றும் நீர்ச் சத்தானது அதிக நேரம் வயிற்றில் தங்கி, எடைக் குறைப்பிற்கும் உதவுகின்றன.
மேலும் உடலின் நோயெதிர்ப்பு சக்தி, மெட்டபாலிச ரேட், பார்வைத் திறன் மற்றும் இதய ஆரோக்கியம் ஆகியவை மேம்படவும் பிளாக் டைமன்ட் ஆப்பிள் உதவுவதால் இதை ஒரு "சூப்பர் ஃ புரூட்" என்று அழைக்கின்றனர்.
பிளாக் டைமன்ட் ஆப்பிள்களின் விலை மிக அதிகம் என்றும் அதை வாங்கி உண்பதென்பது ஆடம்பர செலவு, செல்வச் செழிப்பு உள்ளவர்கள் மட்டுமே வாங்க முடியும் என்றும் சாமானிய மக்களிடம் ஒரு கருத்து உருவாகியுள்ளது. இந்த வகை ஆப்பிள் மரங்களை மிக பாதுகாப்பாக, அதற்கு தேவையான வெப்ப நிலை மட்டும் கிடைக்கும் வகையில் தகுந்த ஏற்பாடுகளை செய்வது, பழங்களிலிருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துக்கள் குறையாமலிருக்க தேவையான உரம் மற்றும் தண்ணீர் கிடைக்கக் செய்வது, பழங்களின் சைஸ், திரட்சி, கவர்ச்சி மற்றும் சுவை குறையாமல் பார்த்துப் பார்த்து பராமரிப்பது போன்ற பல விஷயங்களுக்காக விவசாயிகள் கையாளும் வழிமுறைகள், அவர்களுக்கு உண்டாகும் கஷ்ட நஷ்டங்கள், இந்தப் பழத்தின் சரியான பாரம்பரிய வகையை (species) கண்டு பிடித்துக் கொண்டுவந்து வளர்த்தல் போன்ற அனைத்தும் சேர்ந்தே இப்பழங்களின் விலையை நிர்ணயிக்கின்றன.
பிளாக் டைமன்ட் ஆப்பிளை சுவைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைப்பவர்கள், தவறாமல் வாங்கி உட்கொள்ளுங்கள்.